WORLD ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம் – கனடாவில் வெற்றிகரமாக நிறைவு..!
தமிழ்ப்பெயர்த்தொகுப்பு நூல் மக்கள் கவனத்தை ஈர்த்தது
W O R L D ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம் – கனடாவில் தமிழர்களின் பெரும் வரவேற்புடன் வெற்றிகரமாக நிறைவு..!
ரொறன்ரோ, கனடா – கனடிய தமிழர் பேரவை (CTC) மற்றும் கனடா ஐக்கிய இலங்கை முஸ்லிம் கவுன்சில் (USLMCC) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், “ரொறன்ரோ தமிழ்ப் புத்தக அரங்கம்” 2025 டிசம்பர் 6 மற்றும் 7 திகதிகளில் ரொறன்ரோ மாநகரத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. வட அமெரிக்கா முழுவதிலுமிருந்து பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆசிரியர்கள், கல்வி நிலையங்கள், சமூக அமைப்புக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
ரொறன்ரோ மற்றும் மொன்ரியால் நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நூல் வெளியீடுகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன
புத்தகக் கண்காட்சியுடன் இணைந்த மேடையில் பல நூல் வெளியீடுகள் நடைபெற்றன.
அவற்றில் வல்லிபுரம் சுகந்தன் எழுதிய ‘கூழ்முட்டைக்குளிருந்து குஞ்சொன்று’ கவிதைத்தொகுப்பு, அஷ்ரப் ஷிஹாப்தீன் எழுதிய இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்ட அநீதிகளை ஆவணப்படுத்தும் ‘டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்’, இந்தியா அகதிகள் முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களின் துயரத்தைக் கூறும் தொ. பத்திரினாதனின் ‘அந்தரம்’ நாவல் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
அவுஸ்திரேலிய எழுத்தாளர் ஆனா பரராஜசிங்கத்தின் ஆங்கில நூல் ‘UPROOTED’ ஆங்கில உரைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழ்வை ஆவணப்படுத்திய இந்த நூல் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டது.
எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துக்கு சிறப்பு மரியாதை
கனடாவில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் இலக்கியப் பணிகளை சிறப்பிக்கும் வகையில், இங்கிலாந்து எழுத்தாளர்கள் எம். பௌஸர் மற்றும் பால சபேசன் தொகுத்த ‘அ. முத்துலிங்கத்தின் எழுத்துலகு’ என்ற நூல் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
தமிழ்ப்பெயர்த்தொகுப்பு நூல் மக்கள் கவனத்தை ஈர்த்தது,
தமிழமுதம் வெளியிட்ட ‘தமிழ்ப்பெயர்த்தொகுப்பு’ எனும் நூல் பலரது கவனத்தையும் பெற்றது. புலம்பெயர் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப்பெயர்கள் இட ஊக்குவிக்கும் வகையில், 46,000 தமிழ் பெயர்களின் அகரவரிசைத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இதன் பின்னணியை சமூகப்பணியாளர் வால்மேகம் ஜெயச்சந்திரன் பார்வையாளர்களுக்கு விளக்கியார்.
கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜொனித்ரா நாதன் சிறப்புப் பிரதியை பெற்று உரையாற்றினார்.
மேலும், வடக்கு–கிழக்கு மாதர் சுயமேம்பாட்டு முன்னெடுப்பு ஆதரவில் ‘முல்லை’ கைத்தறி சேலைகளும் கண்காட்சியில் விற்பனைக்காக அமைக்கப்பட்டிருந்தன.
குளிரை மீறி மக்கள் திரளான பங்கேற்பு
ரொறன்ரோ நகரம் முழுவதும் கடும் குளிரும் பனிப்பொழிவும் நிலவியிருந்தபோதிலும், இரண்டு நாட்களும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று புதிய நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இது தமிழ்க்கனடியர்கள் இலக்கிய நிகழ்வுகளுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தியது


