"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" -எஸ்பிபி எனும் காந்தர்வ குரல் காற்றில் கலந்த நாள் இன்று!
எஸ்பிபி எனும் காந்தர்வ குரல் காற்றில் கலந்த நாள் இன்று!
இந்திய சினிமாவை அரை நூற்றாண்டாக ஆட்சி செய்து வந்த எஸ்.பி.பி. எனும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை மீது இருந்த தீராக் காதலால் பொறியியல் பட்டப்படிப்பை பாதியிலேயே துறந்து, தமது வாழ்நாளை இசைக்காக அர்ப்பணித்தார்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்திய சினிமாவை தமது காந்தர்வ குரலால் கட்டிப் போட்டிருந்த தன்னெழுச்சியான மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி. தன்னிகரற்ற கலைஞராக திகழ்கிறார்.
எஸ்பிபி என்று சினிமா ரசிகர்களால் இன்றும் செல்லமாக அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதரத்யுலா பாலசுப்பிரமணியம். ஆந்திர மாநிலம், நெல்லூரில் ஜூன் 4, 1946 இல் இசை பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் இந்த சங்கீத சாகரம் தோன்றியது.
பொறியியல் துறையில் கல்வி பயின்று சாதிக்க வேண்டும் என்பதே பதின்ம பருவத்தில் அவரது விருப்பமாக இருந்துள்ளது. ஆனால், இசை துறையின் மீது கொண்ட பெரும் காதலால், தன்னுடைய வாழ்க்கை பாதையை இசை என மாற்றி அமைத்து கொண்டார். அந்த காதலே சுயமாக அவரை இசையை கற்க செய்தது. சிறு வயதில் பாரம்பரிய இசையான கர்நாடக இசையில் பயிற்சி பெறாத போதிலும், திரையிசை பின்னணி பாடகர் கனவை நனவாக்க, பொறியியல் பட்டப்படிப்பை பாதியிலேயே துறந்து இசையில் முழுகவனம் செலுத்த தொடங்கினார்.
தெலுங்கில் தொடங்கிய இசைப்பயணம்:
அர்பபணிப்புடன்கூடிய அவரது உழைப்புக்கு உடனே பலனும் கிடைத்தது. அவரின் வழிகாட்டியான எஸ்.பி. கோதண்டபாணி வாயிலாக எஸ்பிபியின் திரையிசை கனவு நனவானது. 1966 இல் வெளியான தெலுங்கு திரைப்படமான 'ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதா ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் பாடியதன் மூலம் இளம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில் பாட தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எஸ்பிபியின் வசீகர குரல் ஒலிக்க துவங்கியது.
தமிழில் வெளிவராத முதல் பாடம்:
1969 இல் வெளியான 'ஓட்டல் ரம்பா' திரைப்படத்திற்காக, 'அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு' என்ற பாடல் தான் தமிழ் சினிமாவில் ஒலிக்க இருந்த எஸ்பிபியின் முதல் பாடல். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த திரைப்படம் பாதியிலேயே நின்று போனதால் பாடலும் வெளிவரவில்லை.
ஒரு கலைஞன் தனது வாழ்க்கைப் பயணத்தில் ஏமாற்றங்களை எதிர்கொள்வது யதார்த்தம் தானே. ஆதலால், தமிழில் தான் பாடிய முதல் திரைப்பாடல் வெளிவராதபோதும் எஸ்பிபி மனம் தளராமல் முயற்சித்து கொண்டிருந்தார். அவரது விடாமுயற்சிக்கு கைமேல் பலனும் கிடைத்தது.
ஜெமினி கணேசன் நடித்த 'சாந்தி நிலையம்' திரைப்படத்தில் 'இயற்கை என்னும் இளைய கன்னி' எனும் பாடல் அவரது திரை வாழ்வில் திருப்புமுனை பாடலாக அமைந்தது.
'அடிமைப்பெண்' திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா' எனும் பாடலுக்கு பிறகு தமிழ் திரையுலகில் எஸ்பிபி கொடிக்கட்டி பறக்க தொடங்கினார். யார் இந்த எஸ்பிபி? என்று அந்த காலகட்டத்தில் அனைத்து இசையமைப்பாளர்களும் தேடும் அளவுக்கு திரைத் துறையில் உச்சத்துக்கு சென்றார்.
கின்னஸ் சாதனை:
எம்ஜிஆர், ஜெமினி கணேசன் தலைமுறை நடிகர்களை தொடர்ந்து, கமல் ஹாசன், ரஜினிகாந்த் என அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு பாடத் தொடங்கியதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை இந்தி சினிமா உலகமும் உச்சரிக்க தொடங்கியது.
தன் வாழ்நாளில் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி என 16 மொழிகளில் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த, தன்னிகரில்லா கலைஞனாக திகழ்கிறார் எஸ்பிபி.
குறிப்பாக பிப்ரவரி 8, 1981 அன்று, ஒரே நாளில் 28 கன்னடப் பாடல்களைப் பதிவு செய்து அசத்தினார். இதேபோன்று தமிழில் 19 பாடல்களும் இந்தியில் 16 பாடல்களும் ஒரே நாளில் பாடி சாதனைப் படைத்தார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என மூன்று தலைமுறை இசையமைப்பாளருடன் பயணித்த மாபெரும் கலைஞராக விளங்கினார்.
உயிர் குடித்த கரோனா:
இசைக்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 5, 2020 அதிர்ச்சிகரமான நாளாக அமைந்தது. ஆம்.. எஸ்.பி.பி-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளியான செய்தி, உலகெங்கிலும் உள்ள அவரது லட்சோபலட்ச ரசிகர்களின் இதயத்தில் இடியாக இறங்கியது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையும், கரோனாவின் கோரப்பிடியில் இருந்து எப்படியாவது மீண்டு வந்துவிட வேண்டும் என்ற எஸ்பிபியின் போராட்டமும் செப்டம்பர் 25, 2020- இல் முடிவுக்கு வந்தது.
அன்றைய தினம் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு இந்த மண்ணுலகை விட்டு சென்றாலும், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்றும் அவர் அமைதியாக துயில் கொண்டுள்ளதாகவே அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
6 முறை தேசிய விருது:
சிறந்த பின்னணிப் பாடகருக்காக ஆறு முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பல மாநில விருதுகள் என்று தன் வாழ்நாளில் சாதனை நாயகனாக வலம் வந்த எஸ்பிபி-க்கு , 2021-இல் அவரது மறைவுக்குப்பின் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.
'இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்' என்று தீர்க்கதரிசத்துடன் தான் பாடிய பாடலுக்கு ஆகச்சிறந்த உதாரணமாக திகழும் எஸ்பிபி என்ற மூன்று எழுத்து மந்திரம், திரையிசை இருக்கும் வரை அவரது ரசிகர்களால் என்றென்றும் உச்சரிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கும்.


