"லியோன் நகரில் பயங்கரம்!" - அரசியல் மோதலில் மாணவன் பலி!
லியோன் நகரம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
லியோன் (Lyon) நகரம் சனிக்கிழமை அன்று சோகத்தில் மூழ்கியது. கடந்த வியாழக்கிழமை நடந்த வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த குவென்டின் (Quentin) என்ற இருபத்து மூன்று வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது அரசியல் ரீதியான படுகொலை என்று சந்தேகிக்கப்படுவதால் பதற்றம் நிலவுகிறது.
லியோனிலுள்ள அரசியல் விஞ்ஞான கல்வி (Sciences Po)நிறுவன வளாகத்தில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் (Rima Hassan) பங்கேற்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க Nemesis என்ற வலதுசாரி அமைப்பினர் (Extrême droite) அங்கு திரண்டனர். அப்போது அங்கு வந்த தீவிர இடதுசாரி அமைப்பினருக்கும் (Ultragauche) Antifas என்று அழைக்கப்படுபவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
குவென்டின் தாக்கப்பட்ட விதம் குறித்துப் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒரு கும்பல் குவென்டினைத் துரத்திச் சென்றதாகவும், அவர் கீழே விழுந்த பிறகு, தரையில் கிடந்தவரின் தலையில் அந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கியதாகவும் (Lynchage) கூறப்படுகிறது.
இது இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த சாதாரணச் சண்டை (Rixe) அல்ல என்றும், இது நன்குத் திட்டமிட்டுப் பொறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் (Guet-apens) என்றும் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் வந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த குவென்டின் ஒரு கணிதவியல் மாணவன் (Étudiant en mathématiques). அவர் எந்தவொரு பாதுகாப்புப் பணியிலும் (Service d'ordre) ஈடுபடவில்லை என்றும், அவர் மீது இதுவரை எந்தவொரு குற்றப் பதிவும் (Casier judiciaire) இல்லை என்றும் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அமைதியாகத் தனது கருத்துகளைத் தெரிவிப்பவரே தவிர வன்முறையாளர் அல்ல என்று குடும்பத்தினர் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.
Parquet de Lyon (லியோன் அரசுத் தரப்பு வழக்குரைஞர் அலுவலகம்) இந்த வழக்கை "திட்டமிட்ட கும்பல் படுகொலை" (Meurtre en bande organisée) மற்றும் "கடுமையான வன்முறை" என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. Samu அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குவென்டின், கடுமையான மூளைச் சிதைவு (Lésions cérébrales) காரணமாகவே உயிரிழந்தார். இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை
லியோன் நகர முதல்வர் Grégory Doucet இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். வலதுசாரி தேசியக் பேரணி (RN) கட்சியினர், இடதுசாரிப் படைகளே (Milices) இந்தக் கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டிப் பிரச்சாரத்தை நிறுத்தியுள்ளனர்.
இடதுசாரிகளான ரிமா ஹசன் சார்ந்த கட்சியினர் (LFI), விசாரணையின் முடிவிற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நகரம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


