யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் எடுக்கப்பட்ட பழைய கதை புதியபடம் "அநுரகுமார திசாநாயக்க தைத்திருநாள் பண்டிகை"
அரிதாரம் பூசி அழகுபடுத்தி அலங்கரிக்கப்பட்ட துணைநடிகர்கள்! காட்கிகள் முடிந்ததும் அரிதாரம் கழுவப்படும்!!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தைத்திருநாள் பண்டிகையுடன் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட இரண்டு நாள் விஜயம், சமகால அரசியல் தளத்தில் புதிய விவாத அலைகளைத் தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக, ஐந்து வெவ்வேறு இடங்களில் அவர் ஆற்றிய உரைகளில்; ‘புதிய இலங்கை’ பற்றிய நம்பிக்கையை விதைக்க முயன்றாலும், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகள் குறித்து அவர் பேணுயுள்ள மௌனம் பலத்த ஏமாற்றத்தையும் அதேவேளை ஆழ்ந்த அரசியல் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு, வீட்டுத்திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றை மையப்படுத்திய அவரது உரைகள், வடக்கின் ஆறாதிருக்கும் அரசியல் காயங்களுக்கு மருந்திடத்தவறிவிட்டன என்பதே யதார்த்தமாகும்.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, வட மாகாண இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
ஒரு காலத்தில் யுத்தத்தால் சீரழிந்த வடக்கு மாகாணம், தற்போது போதைப்பொருள் என்ற அரக்கனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருசில அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசியல் அனுசரணை இனி யாருக்கும் கிடைக்காது என்றும் அவர் விடுத்த எச்சரிக்கை வரவேற்கத்தக்கது.
‘போதைப்பொருள் ஒழிப்பை குடும்பத்திலிருந்து ஆரம்பியுங்கள்’ என்ற அவரது அழைப்பு ஒரு சமூக மாற்றத்திற்கான கோரிக்கையாக இருந்தாலும், யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் சமூகச் சிதைவுக்குப் பின்னால் இருக்கும் திட்டமிட்ட காரணிகளை அவர் முழுமையாகத் தொடவில்லை என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாதுள்ளது.
தொடர்ந்து சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் 2,500 வீடுகளை நிர்மாணிக்கும் ‘தமக்கான இடம்-அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது கொண்டுள்ள நம்பிக்கையைத் தக்கவைப்பதாக உருக்கமான வாக்குறுதிகளை வழங்கினார்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுகத்திற்காக இந்தியாவின் 60 மில்லியன் டொலர்கள் நிதியுதவி மற்றும் யாழ்ப்பாணத்தில் பாரிய விளையாட்டு மைதானம் போன்ற பொருளாதாரச் சார்ந்த திட்டங்களை அவர் முன்னிலைப்படுத்தினார்.
‘தெற்கில் சிங்கள மக்களையும் வடக்கில் தமிழ் மக்களையும் தூண்டிவிட்ட அரசியல் கலாச்சாரம் இனி நிலவாது’ என்று அவர் கூறியது, இனவாதத்திற்கு எதிரான ஒரு நல்ல சமிக்ஞையாகக் கருதப்பட்டாலும், அது தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் அபிலாஷைகளை வெறும் பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கும் முயற்சியோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதியின் ஐந்து இடங்களிலான உரைகளிலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தன. 16 ஆண்டுகாலப் போருக்குப் பின்னரும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு, செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் நீண்டகாலமாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அவர் ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை.
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பூர்வீகக் காணிகளின் முழுமையான விடுவிப்பு போன்ற மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மௌனம் காத்தது தமிழ் அரசியல் பரப்பில் பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நயினாதீவு விகாரதிபதி போன்ற மகாசங்கத்தினரே காணி விடுவிப்பு பற்றிப் பேசும் சூழலில், ஜனாதிபதி அவ்விடயம் குறித்து நேரடியான உறுதிமொழிகளை வழங்காமை கவனிக்கத்தக்கது.
இந்த விஜயத்தின் போது மற்றுமொரு முக்கிய அம்சம் அவதானிக்கப்பட்டது. அதாவது, வடக்கில் வழக்கத்துக்கு மாறாக சாதாரண மக்கள் மத்தியில் ஜனாதிபதியுடனான ஊடாட்டம் மற்றும் நெருக்கம் அதிகரித்துச் செல்கின்றது.
மக்கள் அவரோடு செல்பி எடுப்பதும், நேரடியாகக் கைகுலுக்குவதும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற பாரம்பரிய அரசியல் கட்டமைப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. மக்களின் அன்றாட வறுமை மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பயன்படுத்தி, அவர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை மழுங்கடிக்கும் ஒரு ‘அபிவிருத்தி அரசியல்’ மூலோபாயத்தை அரசாங்கம் கையாள்கிறதோ என்ற அச்சம் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அடிப்படை உரிமைப் போராட்டங்களை விடப்பொருளாதாரச் சலுகைகளே முக்கியம் என்ற மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்குவது, தமிழ் மக்களின் கூட்டுப்பேரம் பேசும் சக்தியை நீண்டகால அடிப்படையில் பலவீனப்படுத்தக்கூடும்.
மேலும், ஜனாதிபதியின் உரையில் ‘அரசியல்வாதிகள் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்’ என்ற தொனிப்பொருள் மேலோங்கி இருந்தது. யாழ். உள்ளக விளையாட்டரங்கு விவகாரத்தில் அரசியல்வாதிகள் வழக்குத் தொடர்வதை அவர் விமர்சித்தமை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பிளவை ஏற்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.
‘நாங்கள் எமது கடமைகளைச் செய்கிறோம், ஆனால் உங்கள் தலைவர்கள் தடுக்கிறார்கள்’ என்ற விம்பத்தை உருவாக்குவதன் மூலம், தமிழ் தேசிய அரசியல் பரப்பை சிதைக்க ஜனாதிபதி திட்டமிடுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
வடக்கு மாகாணத்தின் விவசாயம், சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித் துறைகளை மேம்படுத்தப் போவதாகக் கூறும் ஜனாதிபதி, அத்துறைகளில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான தடைகள் (உதாரணமாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அத்துமீறல்கள்) குறித்து வாய் திறக்கவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயம் பொருளாதார ரீதியில் சில நன்மைகளை வழங்கக்கூடும் என்றாலும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெறும் ‘வயிற்றுப் பிரச்சினையாக’ அல்லது ‘நிர்வாகப் பிரச்சினையாக’ சுருக்குவது ஆரோக்கியமானதல்ல.
அழகான நாட்டை உருவாக்குவது என்பது வெறும் கட்டடங்களையும் துறைமுகங்களையும் கட்டுவதில் மட்டும் இல்லை; மாறாக, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான தேடலுக்குப் பதிலளிப்பதிலும், கௌரவமான அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை வழங்குவதிலுமே தங்கியுள்ளது.
தமிழ் மக்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பேன் என்று கூறும் ஜனாதிபதி, அவர்களின் பூர்வீக அரசியல் உரிமைகளையும் அங்கீகரிக்கும் போது மாத்திரமே அந்த நம்பிக்கை உண்மையான அர்த்தத்தைப் பெறும். இல்லையேல், இதுவும் ஒரு ‘காலம் கடத்தும்’ அல்லது ‘அபிவிருத்தி என்ற போர்வையில் உரிமைகளை மறுக்கும்’ பழைய அரசியல் நகர்வாகவே வரலாற்றில் பதியப்படும்.
வடக்கின் இளைய தலைமுறைக்கு வெறும் விளையாட்டரங்குகளும் வீடுகளும் மட்டும் போதாது அவர்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய கௌரவமான அரசியல் சூழலே முதன்மையானது என்பது அநுரவுக்கு தெரியாத விடயமல்ல.
ஆனால், அவர் அந்த விடயங்களை தவிர்க்கின்றார் என்றால் அவரும் இலங்கையின் பாரம்பரிய ஊறிப்போன ‘சிங்கள-பௌத்த மையவாத’ அரசியல் கலாசாரத்துக்குள் முழுமையாக கரைந்து விட்டார் என்றே கருத வேண்டியுள்ளது.
எனினும், அநுரவின் இந்த சூட்சுமமான நகர்வையும், அவரை நோக்கி தமிழ் தேசம் நகர முற்படுவதும் மிகமிக வெளிப்படையாக உணர முடிகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ் தேசியம் பேசுகின்ற எந்தவொரு கட்சிக்கும் அதற்கு பதிலடியாக நகர்வதற்கான திராணியற்ற நிலைமை தான் தற்போது உள்ளது.
ஆகக்குறைந்தது, தமிழ்த் தேசியத்தின் தாய்க் கட்சி என்று கூறுகின்ற தமிழரசுக்கட்சியால் தமிழர் தேசயத்தில் தமிழ் மக்களை அணிதிரட்டி ஒரு பாரம்பரிய பொங்கல் விழாவைக் கூட முன்னெடுப்பதற்கு முடியாத நிலைமையே காணப்படுகின்றது.
இந்தக் கையறு நிலையும் தேக்கமும், உள்ளக முடிண்பாடுகளும் தேசிய மக்கள் சக்தியை தமிழர் தேசமெங்கும் விரைந்து பரவுவதற்கே வழிசமைக்கும் என்பதை புரிந்து கொள்வதற்கு கூடுதலான காலம் எடுக்கப்போவதில்லை.
- ஆர்.ராம்


