மேற்கு சஹாராவில் புதைக்கப்படும் நீதியும், பிரான்ஸின் 'இராஜதந்திர' துரோகமும்!
மேற்கு சஹாராவின் முக்கிய நகரங்களில் பூர்வீக சஹாராவி மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டுள்ளனர். - பிரான்ஸ் இப்போது ஆதரிப்பது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை!
பாலைவனப் புயல்: மேற்கு சஹாராவில் புதைக்கப்படும் நீதியும், பிரான்ஸின் 'இராஜதந்திர' துரோகமும்
வட ஆப்பிரிக்காவின் செழிப்பான கடற்கரைகளுக்கும், சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்திற்கும் இடையே ஒரு நீண்டகால அநீதி புதைந்து கிடக்கிறது. மேற்கு சஹாரா விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் எடுத்த முடிவு, வெறும் இராஜதந்திர நகர்வு அல்ல; அது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு ஆக்கிரமிப்புக்கு அளிக்கப்பட்ட ‘சட்ட அங்கீகாரம்’. அல்ஜீரியா இன்று பிரான்ஸை நோக்கி எழுப்பும் கேள்விகள் வெறும் கோபத்தின் வெளிப்பாடல்ல; அவை சர்வதேசச் சட்டத்தின் ஆன்மாவிலிருந்து எழும் கேள்விகள்.
1991-ம் ஆண்டு துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்தபோது, ஐக்கிய நாடுகள் சபை சஹாராவி மக்களுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்தது. MINURSO என்ற ஐ.நா. அமைப்பின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மக்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்களா அல்லது மொராக்கோவுடன் இணைய விரும்புகிறார்களா என்பதை அவர்களே முடிவு செய்வார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் கடந்தும் அந்த வாக்குறுதி பாலைவனக் கானல் நீராகவே உள்ளது. வாக்கெடுப்பை நடத்துவதில் உள்ள மிகப்பெரிய தடை, திட்டமிட்டே உருவாக்கப்பட்ட குழப்பங்கள்தான். "யார் உண்மையான சஹாராவி?" என்ற கணக்கெடுப்பில் மொராக்கோ தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டது. ஸ்பானிஷ் காலனித்துவக் காலத்து ஆவணங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று ஒரு தரப்பும், இல்லை தற்போதைய சந்ததியினரையும் சேர்க்க வேண்டும் என்று மறுதரப்பும் மோதிக்கொண்டதில், ஜனநாயகம் முடங்கிப்போனது.
வாக்கெடுப்பு தாமதப்படுத்தப்பட்ட அதே வேளையில், மொராக்கோ ஒரு சத்தமில்லாத போரைத் தொடுத்தது. அது, "மக்கள்தொகை மாற்றம்" (Demographic Engineering). கடந்த சில தசாப்தங்களாக, மொராக்கோ தனது சொந்த குடிமக்களை ஆயிரக்கணக்கில் மேற்கு சஹாராவில் குடியேற ஊக்குவித்தது. அவர்களுக்கு வரிச் சலுகைகள், மலிவான வீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன் விளைவு பயங்கரமானது.
இன்று மேற்கு சஹாராவின் முக்கிய நகரங்களில் பூர்வீக சஹாராவி மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டுள்ளனர். "இப்போது வாக்கெடுப்பு நடத்தினாலும், முடிவு மொராக்கோவுக்குச் சாதகமாகவே வரும்" என்ற நிலையை உருவாக்கிய பிறகுதான், மொராக்கோ "வாக்கெடுப்பு சாத்தியமில்லை, சுயாட்சி மட்டுமே தீர்வு" என்று கூறத் தொடங்கியது. பிரான்ஸ் இப்போது ஆதரிப்பதும் இந்தத் திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலையைத்தான்.
உலகம் பெர்லின் சுவரைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் அதைவிடப் பல மடங்கு நீளமான, கொடூரமான ஒரு சுவர் மேற்கு சஹாராவில் உள்ளது. "தி பெர்ம்" (The Berm) என்று அழைக்கப்படும் 2,700 கி.மீ. நீளமுள்ள இந்த மணல் சுவர், மேற்கு சஹாராவை இரண்டாகக் கிழிக்கிறது.
வளமான கடற்கரைப் பகுதிகள் மொராக்கோவின் கட்டுப்பாட்டிலும், வறண்ட பாலைவனப் பகுதிகள் பொலிசாரியோவின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்தச் சுவரைச் சுற்றிலும் உலகின் மிக அதிக அடர்த்தியான கண்ணிவெடிகள் (Landmines) புதைக்கப்பட்டுள்ளன. இது ஒரு தேசத்தைப் பிரிக்கும் கோடு மட்டுமல்ல; சஹாராவி மக்களைத் தங்கள் சொந்த நிலத்திலேயே அகதிகளாகவும், அந்நியர்களாகவும் மாற்றிய வேலி.
பிரான்ஸின் முடிவு, இந்தச் சுவருக்குப் பின்னால் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் போரின் ஆணிவேர் நிலம் மட்டுமல்ல, அந்த மண்ணுக்குக் கீழே இருக்கும் செல்வம்தான். "பாலைவனம்" என்று சொல்லப்பட்டாலும், மேற்கு சஹாரா ஒரு புதையல்.
பாஸ்பேட் சுரங்கம்: உலகின் விவசாயத்திற்குத் தேவையான உரத்தைத் தயாரிக்கும் பாஸ்பேட், இங்கிருக்கும் பூ க்ரா (Bou Craa) சுரங்கத்தில் கொட்டிக் கிடக்கிறது.
மீன் வளம்: ஆப்பிரிக்காவின் மிக நீண்ட, வளமான மீன்பிடித் தளம் இங்குதான் உள்ளது.
சர்வதேச நீதிமன்றம், "இந்த வளங்கள் சஹாராவி மக்களுக்கே சொந்தம், அவர்களின் சம்மதமின்றி இதை விற்பது சட்டவிரோதம்" என்று பலமுறை எச்சரித்துள்ளது. ஆனால், மொராக்கோ இந்த வளங்களைச் சுரண்டி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) ஏற்றுமதி செய்கிறது. அந்த வருமானம், சஹாராவி மக்களை ஒடுக்குவதற்கும், அந்த நீண்ட மணல் சுவரைப் பராமரிப்பதற்குமே செலவிடப்படுகிறது.
உண்மையில் , அல்ஜீரியாவின் கோபத்தில் நியாயம் இருப்தாகவே பார்க்கப்படுகிறது .பிரான்ஸ் எடுத்த முடிவு, மேற்கு சஹாராவில் நடக்கும் அப்பட்டமான வளச் சுரண்டலையும், சட்டவிரோதக் குடியேற்றத்தையும், மொரோக்கோவின் பிரித்தாளும் தந்திரத்தையும் அங்கீகரிப்பதாகவே உள்ளது. "நடைமுறை அரசியல்" என்ற பெயரில் பிரான்ஸ் செய்திருப்பது, ஒரு இனத்தின் சுயநிர்ணய உரிமையை வர்த்தக நலன்களுக்காகப் பலிகொடுப்பதேயாகும். சஹாரா பாலைவனத்தின் மணல் துகள்களைப் போலவே, சஹாராவி மக்களின் நீதிக்கான கனவுகளும் சிதறடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
-சிவா சின்னப்பொடி


