2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றப்பட்டியல் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது
'சேவையின் அவசியம் கருதி செய்யப்படும் இடமாற்றமாக" தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி, பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு, தன்னிச்சையாக அதிகாரிகளால் செய்யப்படவுள்ள குறித்த இடமாற்றம்
வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றப்பட்டியல் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளதாக வடமாகாண ஆளுநரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பிரசுரிக்கப்பட்ட வருடாந்த இடமாற்றத்துக்கான 'சேவையின் தேவை கருதிய' இடமாற்றப் பட்டியலில் காணப்பட்ட குறைபாடுகள் சீர்செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படவுள்ளதாகவும், சேவையின் தேவை கருதிய திருத்தப்பட்ட புதிய பட்டியலும் (ஆசிரியர் சங்கங்களைத் தவிர்த்து) தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடல் இன்றி பெருந்தொகை ஆசிரியர்களுக்கு அதிகாரிகளால் தன்னிச்சையாக 'சேவையின் தேவை' என்ற அடிப்படையில் செய்யப்படவுள்ள, முறையற்ற இடமாற்ற நடைமுறை - மோசடிகளையும் பாரபட்சங்களையும் உருவாக்கும் என்பதில் எமக்கு சந்தேகமில்லை.
அரசியல் தலையீடுகளை மேற்கொள்வதற்கும், பாரபட்சங்களாக நடப்பதற்காகவுமே வெளிப்படைத்தன்மையற்று குறித்த தீர்மானம் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வடமாகாண ஆளுநருக்கு வெளிப்படுத்த விரும்புகிறோம்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தாபன விதிக்கோவையின் அத்தியாயம் III பிரிவு 3.3 "இடமாற்றத்தக்க 25 அல்லது அதனிலும் கூடிய தொகையினரைக் கொண்ட பணியாளர்கள் உள்ள ஒவ்வொரு திணைக்களத்திலும் இடமாற்றச்சபை ஒற்றோ அதற்கு மேற்பட்டனவோ நிறுவப்படவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2310/29ஆம் இலக்க 2022.12.14ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியின் பிரிவு 259 இல் "அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் சேவையின் அவசர தேவைகளின் பெயரில் இடமாற்றம் செய்யப்படும் முன்னர் தத்துவங்கள் கையளிக்கப்பெற்ற அதிகாரி அல்லது நியமிப்பு செய்யும் அதிகாரி அத்தகைய தேவையொன்று பிரிவு 258 இல் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க, உண்மையிலேயே எழுந்துள்ளது எனவும், அந்த இடமாற்றம் அடுத்த வருடாந்த இடமாற்றங்கள் செய்யப்படும் வரையில் பிற்போடமுடியாதெனவும் தனிப்பட்ட முறையில் திருப்தியுறுதல் வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், வருடாந்த இடமாற்றம் செய்யப்படும் வரையில் பிற்போட முடியாது என்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே, தத்துவம் அளிக்கப்பட்ட அதிகாரியால் குறித்த வகை இடமாற்றம் மேற்கொள்ளமுடியும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கே, வருடாந்த_இடமாற்றத்துக்கு_பதிலீடாகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படும் நிலையில், வருடாந்த இடமாற்றமாக மேற்கொள்ளாது, சேவையின் தேவை என்ற அடிப்படையில் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் இடமாற்றம் அதிகார துஸ்பியோகம் நிறைந்ததும் சட்டவிரோதமானதுமான செயற்பாடுமாகும்.
மேலும், இலங்கை சனநாயக குடியரசின் 1317/30 இலக்க 2013.07.03ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியின் வடக்குமாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் பிரிவு 208 இலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த இடமாற்றத்தை வருடாந்த இடமாற்றமாக மேற்கொள்ளாமல், 'சேவையின் அவசியம் கருதி செய்யப்படும் இடமாற்றமாக" தொழிற்சங்கங்களின் பங்களிப்பின்றி, பெருந்தொகையான ஆசிரியர்களுக்கு, தன்னிச்சையாக அதிகாரிகளால் செய்யப்படவுள்ள குறித்த இடமாற்றம் சட்டவிரோதமானதாகும். இந்த முறையற்ற இடமாற்ற நடைமுறை பின்பற்றப்பட்டால் இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றோம்.


