இலங்கை - இன்றைய செய்திகளின் சுருக்கம் (ஒக்டோபர் 24, 2025)
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகை கொழும்பு குற்றப் பிரிவினர் அராலித்துறையில் வைத்துக் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை - இன்றைய செய்திகளின் சுருக்கம் (ஒக்டோபர் 24, 2025)
1. கணேமுல்ல கொலை வழக்கு: யாழ்ப்பாணத்தில் சிக்கிய படகு, கொழும்பில் நால்வர் ரிமாண்ட்
நாட்டையே உலுக்கிய கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர், எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த வழக்கின் துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களும் 'சூம்' தொழில்நுட்பம்மூலம் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களது விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக, இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்லப் பயன்படுத்திய அதிவேகப் படகைக் கொழும்பு குற்றப் பிரிவினர் யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரையில் வைத்துக் கைப்பற்றியுள்ளனர். படகின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்தே இது சாத்தியமாகியுள்ளது.
2. கிழக்கு மாகாணத்தில் சோகம்: வாகனேரி விபத்தில் ஒருவர் பலி, 8 பேர் காயம்
கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதியில், வாகனேரி பிரதேசத்தில் நேற்று மாலை கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 8 பேர் பயணித்த சிற்றுந்து , முன்னால் சென்ற பவுசர் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காயமடைந்த 8 பேரும் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, சிகிச்சை பலனின்றி வெலிகந்தையைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3. வடக்கிலும், கிழக்கிலும் பதிவான ஏனைய முக்கிய செய்திகள்
700+ ஏக்கர் காணி விடுவிப்பு: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளின் வசமிருந்த 700 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இந்த ஆண்டு (2025) விடுவிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். இதில் 672 ஏக்கர் வடக்கிலும், 34.5 ஏக்கர் கிழக்கிலும் விடுவிக்கப்பட்டுள்ளன.
அம்பாறையில் தங்கத் திருட்டுக் கும்பல் கைது: அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகத் தங்க ஆபரணத் திருட்டில் ஈடுபட்டு வந்த நால்வர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், ஹெரோயின் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளன. திருட்டு நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மர்ம மரணம்: யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், நேற்று திடீரென மூக்கு மற்றும் வாயால் பலமுறை இரத்தம் வந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாய்ந்தமருது பொலிஸார் அறிவிப்பு: கிழக்கு மாகாணத்தின், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகப் பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
4. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஏனைய குற்றச் சம்பவங்கள்
புறக்கோட்டை 'சினிமா' பாணி கொள்ளை: புறக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், வங்கியில் வைப்பிலிடச் சென்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை, கொள்ளையடிக்கப்பட்டது போல் நாடகமாடி அபகரித்துள்ளார். இந்தத் திட்டமிட்ட குற்றச்செயலுக்கு உதவிய 60 வயதுப் பெண் உட்பட 8 சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கோடியே 70 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது.
பிரமிட் திட்ட மோசடி: பொதுமக்களை ஏமாற்றி பிரமிட் திட்டத்தை இயக்கிய குற்றச்சாட்டில் 40 முதல் 64 வயதுக்குட்பட்ட ஏழு சந்தேக நபர்கள் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் சடலம்: கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்திற்கு அருகில், கடலில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்த இச்சடலம் குறித்த விசாரணைகளைத் துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5.இன்றைய வானிலை24 Oct 2025
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- சிவா சின்னப்பொடி


