யாழ். நீதிமன்றில் முன்னிலையாக முடியாமைக்கான காரணங்களை எழுதி அனுப்புமாறு கோட்டாவுக்கு உத்தரவு!
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலத்தில் தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது - கோட்டாபய ராஜபக்ச!
யாழ். நீதிமன்றில் முன்னிலையாக முடியாமைக்கான காரணங்களை எழுதி அனுப்புமாறு கோட்டாவுக்கு உத்தரவு
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமலாக்கப்பட்ட அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இருவர் தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியம் அளிக்க நீதிமன்றில் முன்னிலையில் முடியாது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு அதற்கான காரணங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லலித் குமார வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, யாழ். நீதவான் கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கமைய அந்த காரணங்களை ஒரு சத்தியக் கடதாசி மூலம் அறிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
லலித் குமார வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டபோது கோட்டாபய ராஜபக்சவே இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார்.
“தமது கட்சிக்காரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் நீதிமன்ற நடவடிக்கைகளின் நிறைவில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகே பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு வந்து சாட்சியமளிக்க அவருக்கு பாதுகாப்புப் பிரச்சினை உள்ளது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக சாட்சியமளிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே கோட்டாபய ராஜபக்ச தரப்பில் செய்யப்பட்ட கோரிக்கை. மனுதாரர்கள் சார்பில் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. எனவே, அவர் தனிப்பட்ட முறையில் வந்து இது தொடர்பாக சாட்சியமளிக்க வேண்டும் என்பதே எமது அடிப்படைக் கோரிக்கையாக இருந்தது.”
முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்சவுக்கு, உண்மையில் பாதுகாப்புப் பிரச்சினை உள்ளது என்பதை உறுதிப்படுத்த எந்தவிதமான ஆவணமோ சாட்சியமோ நீதவானிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போபகே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த விடயங்கள் குறித்து விசாரித்த கௌரவ நீதவான் இன்று ஒரு திட்டவட்டமான உத்தரவை வழங்கினார். கோட்டாபய ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் நேரடியாக வந்து இந்த நீதிமன்றத்தின் முன் சாட்சியமளிப்பதற்கு ஏதேனும் பாதுகாப்புப் பிரச்சினையோ அல்லது உயிர் அச்சுறுத்தலோ இருந்தால், அது தொடர்பில் நீதிமன்றத்தை திருப்திப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும்.”
மேலும் அந்த ஆவணங்களை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி யாழ். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
“அதன்படி, பெப்ரவரி 6 ஆம் திகதிக்குள் சத்தியக் கடதாசி மூலம், கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு உள்ள தடைகள், உயிர் அச்சுறுத்தல், பாதுகாப்புப் பிரச்சினைகள் ஆகிய விடயங்களை சாட்சியங்களுடன் நீதிமன்றத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் என இன்று உத்தரவிடப்பட்டது.”
தேர்தல் பிரச்சாரத்தின் போது இல்லாத அச்சுறுத்தல்கள்?
லலித் குமார வீரராஜு மற்றும் குகன் முருகானந்தன் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் உள்ள ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கு விசாரணைக்கு சாட்சியமளிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலத்தில் தான் பாதுகாப்புச் செயலாளராக இருந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது என கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டிய விடயங்களை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, அவர் யாழ்ப்பாணத்துக்கு அழைக்கப்படுவதை இடைநிறுத்தும் உத்தரவை பிறப்பித்திருந்தார்.
எனினும், நீதிமன்றத்துக்கு முன்னிலையாக வேண்டியிருந்த நாளுக்கு மறுநாள் வடக்கு மற்றும் கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோட்டாபய ராஜபக்ச எந்தவொரு பாதிப்பும் இன்றி மீண்டும் கொழும்பை வந்தடைந்தார்.


