பாரிஸின் இதயத்தில் குற்றங்களின் கூடாரம்? Châtelet Les Halles-ல் காவல்துறை அதிரடி வேட்டை!
2025 ஆண்டு மட்டும் Châtelet Les Halles பகுதியில் 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் மையப்பகுதியாகவும், மிக முக்கியமான போக்குவரத்து மையமாகவும் விளங்கும் Châtelet Les Halles பகுதி, தற்போது குற்றச் செயல்களின் கூடாரமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர் வழிப்பறிச் சம்பவங்களால் இப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பாரிஸ் காவல்துறை, ஒரு அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்காகவே நியமிக்கப்பட்ட ஒரு சிறப்புக் காவல் படை, வாரத்தில் 7 நாட்களும், தினமும் 11 மணி நேரம் என இடைவிடாத ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரம்: 56% அதிக கைதுகள்!
கடந்த ஆறு மாதங்களில் மட்டும், இப்பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டுக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56% அதிகரித்துள்ளது!
சமீபத்திய சோதனைகளின்போது, கத்தியுடன் சுற்றிய ஒரு நபர் கைது செய்யப்பட்டார். மேலும், வழிப்பறியில் ஈடுபடுவதாக அறியப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரும் பிடிபட்டார்.
இந்தக் குற்ற அலையைத் தடுக்க, ஒரு புதிய, மிகக் கடுமையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி : Châtelet Les Halles பகுதிக்காகவே பிரத்யேகமாக ஒரு காவல்துறை மற்றும் நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல், இப்பகுதியில் கைது செய்யப்படுபவர்கள் சாதாரணமாக விடுவிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள். "மற்ற பகுதிகளில் நடக்கும் சாதாரண திருட்டுப் போலன்றி, இங்குப் பிடிபடுபவர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது" என அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இப்பகுதியின் சுரங்கப் பாதைகளில் (tunnels) பல ஆண்டுகளாகக் கோலோச்சிய போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் Châtelet Les Halles பகுதியில் 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


