ஈழத்தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி யாழில் மக்கள் போராட்டம்!
விழிப்புத் தான் விடுதலையின் முதற்படி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி யாழில் நடைபெற்ற மக்கள் போராட்டம்!
ஈழத்தில்”மகளிர்,சிறுவர் மீதான துஸ்பிரயோகம் வன்கொடுமை,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போதை பரப்பலை கண்டித்தும்,அதனை தடுக்கவும் அதற்கான சர்வதேச நீதி கோரி இன்று 31/03/2026 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ் நல்லூரான் வீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள்,அரசியல் தரப்பினர் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கலந்துகொண்டனர்.
சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர் மீதான இன அழிப்புக்கு சர்வதேச சமூகத்திடம் நீதிகோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சர்வதேசமே இன அழிப்பு இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும். பெண்களின் பாதுகாப்பே எமது தேசியத்தின் பலம். எதிரியின் இன அழிப்புத் திட்டத்துக்குப் பலியாகாதே. ஒவ்வொரு சிறாரையும் பாதுகாப்போம்.எங்கள் எதிர்காலத்தைக் கட்டிக்காப்போம். தொடரும் இன அழிப்பு நிகழ்ச்சிநிரலை எதிர்ப்போம். உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல்கொடுப்போம்-என மேலும் பல கோசங்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னடுக்கப்பட்டது.
இதன் போது ஈழத்தமிழர் மகளிர்,சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் வடகிழக்குக்கான பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திட்டமிட்ட இன அழிப்பு வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தமிழர் சிறார்களையும் பெண்களையும் குறிவைப்பது பற்றி சமூக விழிப்புணர்வை ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பு வலியுறுத்துகிறது.
வடக்கு-கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான குற்றங்கள் பெருமடங்கு அதிகரித்துவருகின்றன. இதற்கும் இராணுவ, பொலீஸ் மயமாக்கலுக்கும், மதுபானம், போதைவஸ்து உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துவருவதற்கும் மிகவும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
பல்கலைக் கழகச் சூழலில் இருந்து கிராமியச் சூழல் வரை இராணுவ மயமாக்கல் ஈழத்தமிழரை இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக அச்சுறுத்தி வருவதுடன் சமூகச் சிக்கல்களையும் அதிகரித்துள்ளது.
இன அழிப்புப் போரின் போது நாட்டை விட்டு அகலவேண்டும் என்ற மனப்பாங்கு இருந்ததைப் போல, முள்ளிவாய்க்காலுக்கும் பின்னர் முட்கம்பிவேலி முகாம்களில் இருந்து விடுதலையான பின்னரான காலத்தில் பண்பாட்டுரீதியான பாதுகாப்பற்ற சூழலில் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் விடுபட வெளிநாடுகளுக்குப் புலம் பெயரவேண்டும் என்ற சிந்தனை ஈழத்தமிழரிடையே தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தமிழர் தாயகத்திலிருந்து மக்களை அகற்றும் உத்தியாகவும் இதைப் பார்க்கவேண்டியுள்ளது.
இராணுவமயமாக்கல் எவ்வாறாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் சமூகச் சீர்கேட்டுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதை சர்வதேச நிறுவனங்களும் சாட்சியப் பொறிமுறைகள் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தத் தவறியுள்ளன.
போரின் பின் பண்பாட்டுரீதியான அத்துமீறல்களும் அவற்றால் ஏற்பட்டுவரும் சமூகப் பாதிப்புகளும் பெருமளவில் வடக்கு கிழக்கையும் குறிவைக்க ஆரம்பித்தாலும், ஒருபுறம் தமிழ்ப் பண்பாடும் தேசிய விடுதலைப் போராட்ட மரபும் இவற்றுக்குத் தடையாய் இருப்பதால் தமிழ்ச் சமூகம் தன்னை ஓரளவு சுதாகரித்துக் கொண்டு காப்பாற்ற முயல்கிறது.
இருப்பினும், மறுபுறம் இராணுவ ரீதியான எதிர்க்கிளர்ச்சி உத்தியாக தமிழர் தாயகப் பகுதிகளில் மதுபான, போதைவஸ்து அறிமுகம் திட்டமிட்ட வகையில் ஊக்குவிக்கப்பட்டுவருகிறது என்பது வெளிப்படை.
இந்த போதைவஸ்து அறிமுகத்துக்காக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் படையினருக்கு வழங்கப்பட்டிருந்த திறந்த உரிமம் தென்னிலங்கை நோக்கிய போதைவஸ்துப் பரவலாக்கத்துக்கும் காரணியாகியுள்ளது. அண்மைக்காலங்களில் போதை வஸ்து அத்துமீறல் தொடர்பாகக் கைது செய்யப்படும் படை அதிகாரிகள் பற்றிய செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஜனவரி 2026 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுலகத்தின் போர் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்தும் அரச படையினரால் வடக்கு-கிழக்கில் பரவலான பாலியற் குற்றங்களாகத் தொடர்கின்றன என்ற கண்டறிதல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களும் ஆண்கள் உள்ளிட்ட குறிப்பாகச் சிறுவர் களும் குறிவைக்கப்பட்டுள்ளதை அந்த அறிக்கை ஒத்துக்கொண்டுள்ளது. இந்தச் சூழலிற்தான் அண்மையில் கொடூரமான கொலைகள் கிழக்கிலும் வடக்கிலும் நடந்துள்ளன.
இவற்றில் கொல்லப்படுபவர்களும் கொல்பவர்களும் தமிழர்களாய் இருந்தாலும், எம்மைக் கொண்டே இன அழிப்பைத் தொடருகின்ற கோரமான ஒரு அத்தியாயத்தையே இந்தக் குற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. இவை, பாதுகாப்புத் தொடர்பான அச்ச உணர்வைக் கூட்டி, இளம் தலைமுறையினரைத் தமது தாயகத்தை விட்டுப் புலப்பெயர்வுக்கும் ஆளாக்குகின்றன.
ஒட்டுமொத்தமாக எமது மண்ணுக்கும் எமக்குமான உரித்தைச் சிதைக்கும் நோக்குடன் பண்பாட்டுரீதியான, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் திட்டம் நீண்டுசெல்வதன் வெளிப்பாடே இந்தக் குற்றங்கள் என்ற விழிப்புணர்வு எமது மக்களிடம் தேவையாகிறது.
இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு 1948 ஆம் ஆண்டில் இருந்து நீடிப்பதற்கு இன்னொரு காரணம் 2009 இன அழிப்புப் போரின் பின் 16 ஆண்டுகளாகியும்
சர்வதேச சட்ட ரீதியாக, அதிலும் குறிப்பாக 1948 இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐ. நா. உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையின் அரச பொறுப்பும் தனிநபர் குற்றவியற் பொறுப்பும் சர்வதேச நிதிமன்றங்களால் விசாரிக்கப்படுமளவுக்கு கனதியான நகர்வுகள் மேற்கொள்ளப்படாமல் தாமதிக்கப்படுவதும் ஒரு காரணமாகும்.
ஆட்சி மாற்றத்துக்கு மட்டும் சர்வதேச நீதியை வல்லரசுகள் மட்டுப்படுத்தி ஐ நா வில் பயன்படுத்துவதே சர்வதேச அரசியலாக உள்ளது. இந்த நிலையை மாற்ற தாயகத்திலும் புலம்பெயர் சூழலிலும் இனியும் தாமதியாது தமிழ்த் தேசியத் தரப்பினர் அனைவரும் இணைந்து பணியாற்றவேண்டும்.
‘எட்டாப்பழம் புளிக்கும்’ என்றோ, ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்றோ சுயநிர்ணய உரிமை, இறைமை, சர்வதேசநீதி போன்ற அடிப்படை விடயங்களில் நாம் தவறு இழைக்கக் கூடாது. சலுகைகளுக்காக உரிமைகளைக் காற்றில் பறக்க விடவும் முடியாது.
சர்வதேச அரசியலின் அநீதியையும் எதிர்கொள்ளவேண்டும், அதேவேளை அது நல்கும் வாய்ப்புகளையும் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பதற்கேற்ப கை நழுவவிடாது பயன்படுத்தவேண்டும். இதற்கு முதற் படியாக தாயகத்திலுள்ள தமிழ்த் தேசியத் தரப்புகளும் புலம்பெயர் அமைப்புகளும் தம்மிடையே முரண்பட்டுக்கொண்டிருப்பதில் இருந்து தடவழித் திருத்தத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும். பிளவுகள் நீங்கவேண்டும்.
சர்வதேச நிதீயைப் பற்றுக்கோடாகக் கொண்டு எமது ஒருங்கிணைந்த கோரிக்கைகளையும் அவற்றுக்கேற்ற சர்வதேசமயப்பட்டுத்தப்பட்ட அமைதிவழி, ஜனநாயகப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் அதேவேளை, தாயகத்தில் இராணுவத்தை விலக்கிக் கொள்ளுமாறும், எமக்கான சுயாட்சியை உறுதிப்படுத்துமாறும் உலகளாவிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும்.
எமது தாயகத்தில் எம்மை நாமே ஆளும் அரசியல் அதிகாரம் இல்லாமல், உண்மையான பாதுகாப்போ, பண்பாட்டு இருப்போ, பொருளாதார அபிவிருத்தியோ ஏற்படப் போவதில்லை. நிரந்தரத்தீர்வை எதுவகையிலும் பாதிக்காத இடைக்காலத் தீர்வுகளும் அவசியம். ஆதலால், உரிமைகளை முன் நிறுத்திச் சிந்திக்கும் மரபு ஈழத்தமிழர்களிடையே முன்னெப்போதையும் விட கூடுதலான சிரத்தையோடு முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பு அறுதியும் உறுதியுமாக வலியுறுத்துகிறது.
கொள்கை-கோட்பாடு, நடைமுறைச்சாத்தியம் என்ற இரு வழிகளும் ஒன்றோடொன்று முரண்படாது எமது அணுகுமுறைகள் நுட்பமாக வழிவகுக்கப்படவேண்டும். அடிமைத்தனமும் வேண்டாம், உரிமைகளற்ற சலுகைகளும் வேண்டாம். எமது பண்பாட்டுச் சீரழிவுக்கு எம்மவரே பலிபோகும் எதிரிகளின் இன அழிப்புத் திட்டத்திற்கு பலி போகவேண்டாம்.
உரிமைகளுக்காகப் போராடுவோம்! இரண்டாந்தரப் பிரஜைகளா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது எமது சுயநிர்ணய உரிமையே அன்றி வேறொன்றுமல்ல! விழிப்புத் தான் விடுதலையின் முதற்படி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


