பலதும் பத்தும். 31.03.2026 - கோவில் வாசலில், இனந்தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில்!
நள்ளிரவில் அரங்கேறிய வேட்டை!
ஈரானில் ஹோர்முஸ் நீரிணை சுங்கக் கட்டணம்!
ஈரானில் ஹோர்முஸ் நீரிணையை எண்ணெய் கப்பல்கள் கடக்க இனி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்க அந்நாட்டு பாராளுமன்ற பாதுகாப்பு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 2 ஆயிரம் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ளன.
பாதுகாப்பான பயணத்திற்காக ஏற்கனவே இரண்டு கப்பல்கள் பணம் செலுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் 40 சதவீத கச்சா எண்ணெய், 90 சதவீத சமையல் எரிவாயு ஹோர்முஸ் நீரிணை வழியாக கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் பிரதான வீதியில் 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்!
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை, 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பிரதேசவாசிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது. கண்டி கொழும்பு தனியார் பஸ் ஒன்றில் சேவை புரியும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக காணப்படுவதாக தெரிய வருகிறது. இவர் ஹட்டன் வெளிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவருகிறது. இவர் கடந்த 29 ம் திகதி முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஹட்டன் ட்டன் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
கோவில் வாசலில், இனந்தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில்!
இணுவில் கந்தசுவாமி கோவில் வாசலில் இனந்தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று(31) காலை ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் சடலம் ஒன்று இருப்பது தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்னர். விரிவான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.
வைத்தியர்களின் நியாயமற்ற இடமாற்ற பிரச்சினைளுக்கு உரிய தீர்வை வழங்கக் கோரி இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிப்புறக்கணிப்பு நாளை (01) காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அரசாங்கம் உரிய அவதானம் செலுத்தாவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்சரித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்!
அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சி கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் தவிசாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இறுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
தங்கச் சுரங்கம் மீது தாக்குதல் 73 பேர் பலி!
தெற்கு சூடானில் உள்ள தங்கச் சுரங்கப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஜூபாவிலிருந்து தென்மேற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோர் கல்டான் சுரங்கப் பகுதியை இலக்காகக் கொண்டு, கடந்த வார இறுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவில் அரங்கேறிய வேட்டை !
நள்ளிரவில் அரங்கேறிய வேட்டை மன்னார் கடலில் சிக்கிய 'கடல் அட்டை கும்பல்! நள்ளிரவு நேரத்தில், அமைதியாக இருந்த வங்காலை கடற்பரப்பில் ரகசியமாக அரங்கேறிய 'நைற் டைவிங்' (Night Diving) வேட்டையை இலங்கை கடற்படையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் ஓய்வெடுக்கும் நள்ளிரவு நேரத்தில், சட்டவிரோதமான முறையில் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்தி கடல் அட்டைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த 4 நபர்களை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
242 கடல் அட்டைகள் (சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டவை)
01 டிங்கி படகு
நவீன சுழியோடி உபகரணங்கள் (Oxygen Cylinders & Diving Gear)


