தமிழ் புத்தகத் தடைக்கு இலங்கை பாதுகாப்பு, கலாசார அதிகாரிகள் உடந்தை?
ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதினாலோ, தமிழ் மொழியில் ஒரு புத்தகம் வெளிவந்தாலோ, அது நல்லிணக்கத்திற்கு ஒரு தடையாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு புத்தகங்களை அதிகாரிகள் காலவரையின்றி தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதைத் தொடர்ந்து, ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணின் தமிழ் எழுத்தாளரின் நான்கு தமிழ்ப் படைப்புகளின் 300-ற்கும் மேற்பட்ட பிரதிகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
தனது கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகக் குற்றம் சாட்டி, எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இலங்கை கலைக் கழகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில், 'எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்' மற்றும் 'இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்தான்' ஆகிய இரண்டு புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டு புத்தகங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
ஒரு மாதத்திற்கும் மேலான துன்புறுத்தலுக்குப் பின்னர் விடுவிக்க அனுமதிக்கப்பட்ட இரண்டு புத்தகங்கள் ‘பயங்கரவாதி’ மற்றும் ‘சயனைட்’ ஆகியனவாகும்.
“தண்டனைச் சட்டத்தின் 120-வது பிரிவு மற்றும் சுங்க அவசரச் சட்டத்தின் (அத்தியாயம் 235) ‘பி’ அட்டவணையின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய செயல்களுக்கு வழிவகுக்கும் உள்ளடக்கம் அவற்றில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை விடுவிக்க முடியாது,” என சுங்கத்துறை பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட இறக்குமதியாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தண்டனைச் சட்டத்தின் 120-வது பிரிவிற்கு அமைய, இலங்கை மக்களிடையே 'பிளவை ஏற்படுத்துவது அல்லது ஏற்படுத்த முயற்சிப்பது' இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றமாகும்.
தடுத்து வைக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று, எழுத்தாளர் தீபச்செல்வன் பல முக்கிய இலங்கை ஊடகங்களுக்கு அளித்த நேர்காணல்களை உள்ளடக்கியது. மற்றொன்று, தி இந்து மற்றும் விகடன் உள்ளிட்ட முன்னணி இந்தியப் பத்திரிகைகளில் வெளிவந்த அவரது கட்டுரைகளின் தொகுப்பாகும்.
அவற்றை அச்சு அல்லது இணையத்தில் வெளியிடுவதற்கு இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது கலாசார ஒழுங்குமுறை அமைப்புகளோ இதற்கு முன்னர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
புனைகதைப் படைப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்றாலும், கருத்துக்களையும் தகவல்களையும் கொண்ட வெளியீடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இலங்கை தேசிய கலைக் கழகத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கைப்பற்றப்பட்ட படைப்புகளில் தவறான தரவுகள், 'கடின உழைப்பால் பெறப்பட்ட நல்லிணக்கத்தை' சீர்குலைக்கும் பிரிவினைவாத சித்தாந்தங்களும் இருந்ததாக, ஆரம்பத் தடைக்குப் பின்னர், அரச தொலைக்காட்சியில் கருத்து வெளியிட்ட, தேசிய கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரகே மற்றும் செயற்குழு உறுப்பினர் கலாநிதி சுனில் விஜேசிரிவர்தன ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சிங்கள எழுத்தாளர்கள் இருவருக்கும் தமிழில் எழுதுவோ பேசவோத் தெரியாது என்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவிஞரும் குடிமைச் சமூக ஆர்வலருமான கல்பனா மாலதி அம்புரோஸ் செயற்குழுவிலிருந்து விலகினார்.
தங்களால் தமிழை வாசிக்க, பேச முடியாது என ஒப்புக்கொள்ளும் அதிகாரிகளும் இலக்கியவாதிகளும் தீபச்செல்வனின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
‘நல்லிணக்கத்தைப்’ பாதுகாக்கும் போர்வையில், அடக்குமுறையைத் தொடர அவர்கள் சூழ்ச்சி செய்வதாக அவர் கூறினார்.
“ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதினாலோ, தமிழ் மொழியில் ஒரு புத்தகம் வெளிவந்தாலோ, அது நல்லிணக்கத்திற்கு ஒரு தடையாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இது இனவாதமும் பாகுபாடும் ஆகும். இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் அடக்குமுறைப் பாகுபாடு இதுதான். இந்த அரசாங்கம் இதைத் தொடர்ந்து செய்து வருகிறது; அரசாங்கத்தின் புத்தகத் தடையே இதற்குச் சான்றாகும்,” என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிரிவில் தனது முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ் எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வன் தெரிவித்தார்.


