புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 60.33% வாக்குப்பதிவு
பணப்பட்டுவாடா செய்தவர்களை கையும் களவுமாக பிடித்த காவலர்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ), திமுக, காங்கிரஸ், விசிக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே அங்கு நேரடி போட்டி நிலவி வருகிறது.இவற்றை தவிர, நாம் தமிழர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
30 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9 லட்சத்து 50 ஆயிரத்து 630 பேர் வாக்களிக்கவுள்ளனர். அவர்களில் 5.03 லட்சம் பெண் வாக்காளர்களும், 4.4 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளனர். தேர்தலுக்காக புதுச்சேரி முழுவதும் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, இன்று புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை கடுமையான போட்டி நிலவி வருகிறது. இளைஞர்களின் பெரும் ஆதரவுடன் விஜய்யின் தவெக களமிறங்கியுள்ளதே இதற்கு காரணம். மேலும், தவெக களமிறக்கியுள்ள வேட்பாளர்களில் பலர் முன்னாள் எம்எல்ஏக்களாகவும் இருப்பதால் ஆளுங்கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் கடும் சவாலாக தவெக உருவாகியுள்ளது.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
பாஜக - காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்
புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பதாக காங்கிரஸ் கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு வந்த காங்கிரஸார் வாக்குச்சாவடிக்குள் இருந்த பாஜகவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் புகை!
காரைக்கால் தெற்கு தொகுதி வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பேட்டரியை அதிகாரிகள் மாற்றினர். பின்னர் இயந்திரம் வழக்கம் போல இயங்கியதால், வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.
டிரோன் கேமராவில் சிக்கிய பணப்பட்டுவாடா!
புதுச்சேரியில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அங்கு டிரோன்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மணவெளி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட காட்சி டிரோன் கேமராவில் சிக்கியது. இதையடுத்து, பணம் விநியோகித்தவர்களை போலீசார் கையும் களவுமாக சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக்கில் வந்த முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரு சக்கர வாகனத்தில் வந்து திலாஸ்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காரைக்காலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு - ஆட்சியர் இஷிதா ராட்டி
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 36 பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு, கூடுதல் மத்திய ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும் காரைக்கால் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான இஷிதா ராட்டி தகவல்.
ஏனாம் பிராந்தியத்தில் வாக்குப்பதிவு தாமதம்
வாக்காளர்களுக்கு என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட தகவல் வெளியானதை அடுத்து, புதுச்சேரிக்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் இரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது.
நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்: நாராயணசாமி உறுதி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வஉசி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதுச்சேரி மக்கள் 'இந்தியா' கூட்டணிதான் ஆட்சிக்கு வர வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். எனவே, நிச்சயம் இந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வருவோம்" என்றார்.
பாகூர் பகுதியில் சலசலப்பு
பாகூர் பகுதியில் வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் டோக்கன் விநியோகத்தாக கூறப்படுகிறது. இவர்களை திமுகவினர் விரட்டிப் பிடிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த 'நிலா' ரோபோ!
புதுச்சேரியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், அங்கு ஒரு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள ரோபோ அனைவரையும் கவர்ந்துள்ளது. அங்குள்ள வஉசி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவுக்கு 'நிலா' என பெயரிடப்பட்டுள்ளது.
கையில் பூக்கள் அடங்கிய தட்டுடன் வாக்காளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று, அவர்களுக்கு வழிகாட்டி வருகிறது இந்த ரோபோ. காலையிலேயே கனிவான குரலில் அன்போடு வரவேற்கும் இந்த ரோபோ அனைவரையும் கவர்ந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ரோபோ கொண்டு வரப்பட்டுள்ளது.


