ஹார்மூஸ் நீரிணை முற்றுகை - சீன யுவான் நாணய பெறுமதி உயர்வு!
"இறுதி மற்றும் சிறந்த" திட்டத்தை ஈரானிடம் வழங்கியுள்ளதாகவும், ஈரான் அதனை ஏற்குமா என்பதை பொறுத்திருந்து அவதானிப்பதாகவும், அமெரிக்கா
*சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை *யுவான் நாணயத்தில் சர்வதேச வர்த்தகம், சீனா - ஈரான் உடனடிப் பேச்சு!!! *கச்சா எண்ணெய் பரல் ஒன்று $100 வரை உயர்வு.
பேச்சு முறிவடைந்தமையினால், அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தை சர்வதேசச் சந்தையில், குறைக்க ஈரான், சீன யுவான் (Yuan) நாணயத்தை பயன்படுத்துவது பற்றிய பேச்சுக்களை உடனடியாக ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ஆரம்பித்த சீன - ஈரான் பேச்சுகள், மீண்டும் தீவிரமடையும் என அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம் கூறுகிறது.
இதனால், டொலரைத் தவிர்க்கும் முறைகள் ஊடாக சீனா, ஈரானுக்கு உதவிகள் வழங்கினால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவ - பொருளாதார உதவிகளை சீனா, ஈரானுக்கு வழங்கக் கூடாது என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் நேற்று 12 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவர்த்தை தோல்வியில் முடிவடைந்த பின்னர், ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சின்ஹா (Xinhua) என்ற சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு கையெழுத்தான 25 ஆண்டுகால மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தின் (25-year Strategic Partnership) ஒரு பகுதியாகவே இந்த யுவான் வர்த்தகம் செயறபடுத்தப்படுவதாக, இராம்சென்டர் (iramcenter) என்ற செய்தித் தளம் கூறுகிறது.
தற்போது ஹார்மூஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் காரணமாக யுவான் நாணயத்தின் மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அந்த செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இப் பின்னணியில் தான், ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களும், முற்றுகையிடப்படும் (Maritime Blockade) என அமெரிக்கா அறிவித்ததாகவும் சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேநேரம், ஹார்மூஸ் நீரிணையை நெருங்கும் எந்தவொரு இராணுவக் கப்பலும் கடுமையாக தாக்கப்படும் என்று IRGC எனப்படும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. இந்த முற்றுகை அறிவிப்பால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு $100 ,இற்க்கும் மேல் அதிகரித்துள்ளதாக அல் ஜசீரா இன்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தமது "இறுதி மற்றும் சிறந்த" திட்டத்தை ஈரானிடம் வழங்கியுள்ளதாகவும், ஈரான் அதனை ஏற்குமா என்பதை பொறுத்திருந்து அவதானிப்பதாகவும், அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளதாக இந்தியாவின் என்டிரிவி (NDTV) இன்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம், ஏவுகணைத் திட்டத்தை வலுப்படுத்த, சீனா இரகசியமாக ஈரான் அரசுக்கு உதவிகளை வழங்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக ஏவுகணை எரிசக்திக்கு தேவையான பொருட்களை சீனா, ஈரானுக்கு அனுப்பியதாக அமெரிக்க ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இதேவேளை, இன்று திங்கட்கிழமை காலை முதல் ஈரானின் துறைமுகங்கள் மீது அமெரிக்கக் கடற்படை முற்றுகையை அமுல்படுத்தியதால், சீனாவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுள்ளது.
இதனால் அமெரிக்க நடவடிக்கைகளை, சீனா மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக சின்ஹா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அ.நிக்ஸன்


