அதிகாரச் சதுரங்கமும் அழியும் மனிதமும்.
இஸ்ரேலின் எல்லை மீறிய ஆதிக்கம் - நெதன்யாகுவின் அரசியல் சதுரங்க ஆட்டம்!
மத்திய கிழக்கு நிலப்பரப்பு இன்று வெறும் பாலைவன மணலால் ஆனதல்ல; அது உலக வல்லரசுகளின் அதிகாரப் போட்டியாலும், ஆயுதங்களின் சத்தத்தாலும் கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு பெருநெருப்புக்களம். பல தசாப்தங்களாகத் தொடரும் இந்த வரலாற்றுச் சோகம், தற்போது முன்பை விடக் கடுமையான ஒரு போர்க்களமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய உறுதிப்படுத்தப்பட்ட கள நிலவரங்களைச் சற்று ஆழமாகவும், நடுநிலையோடும் உற்று நோக்கினால், பல கசப்பான உண்மைகள் புலப்படும்.
இஸ்ரேலின் எல்லை மீறிய ஆதிக்கம் மற்றும் நெதன்யாகுவின் அரசியல் சதுரங்க ஆட்டமும் .
தற்காப்பு நடவடிக்கை என்ற புள்ளியில் தொடங்கிய இஸ்ரேலின் இராணுவ முன்னெடுப்புகள், இன்று அண்டை நாடுகளின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிலான தலையீடாக மாறியிருக்கிறது. காசா மற்றும் லெபனான் போன்ற பகுதிகளில் இஸ்ரேல் நடத்தும் தொடர் தாக்குதல்கள் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்துள்ளன.
இதற்கு மத்தியில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன் மீதான ஊழல், மோசடி மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே இந்தப் போரை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறாரா என்ற மிகப்பெரிய சந்தேகம் உலக அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமீபத்தில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைகள் மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், "பாதுகாப்பு மற்றும் ரகசிய ராஜதந்திரக் காரணங்களைக்" காட்டி விசாரணையைத் தள்ளிப்போட நெதன்யாகு முற்படுவது இந்தச் சந்தேகங்களை மேலும் வலுவாக்குகிறது. தனது பதவியைத் தக்கவைக்கவும், சிறைவாசத்தைத் தவிர்க்கவும் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் அமைதியையும் அவர் பலிகடா ஆக்குகிறார் என்ற விமர்சனங்கள் வலுவாக முன்வைக்கப்படுகின்றன.
ஈரான் - அமெரிக்க மோதலும் பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையும்
மத்திய கிழக்கின் இந்தப் போர் நெருப்பில் ஈரானின் இழுத்ததும் அமெரிக்காவை அதில் சிக்க வைத்ததும் கூட நெதன்யாகுவின் சூழ்ச்சி என்றே பரவலாக நம்பப்படுகிறது . அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான நேரடித் தாக்குதல்கள் உலக அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்தும் முகமாக, பல தசாப்தங்களுக்குப் பிறகு அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் நேரடியாகப் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. சுமார் 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகளும் இரும்புப் பிடிவாதமும்
இந்தப் போர் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் மற்றொரு முக்கிய காரணி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சமரசமில்லாத, பிடிவாதமான அணுகுமுறை. பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ட்ரம்ப் மிகவும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணையை' (Strait of Hormuz) அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என்ற அவரது சமீபத்திய அறிவிப்பு உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்துகிறது. மேலும், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அந்நாட்டின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற ட்ரம்பின் நேரடி மிரட்டல்கள், இந்தப் போரின் வீரியத்தை மேலும் பன்மடங்கு அதிகரிக்கவே செய்கின்றன.
இந்த அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில், உலகெங்கும் போருக்கு எதிரான மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. வல்லரசு நாடுகளின் வீதிகளில் தொடங்கி, பல்கலைக்கழக வளாகங்கள் வரை "போர் வேண்டாம், மனித உயிர்களைக் காப்போம்" என்ற பதாகைகளுடன் இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்துள்ளனர். இந்த அமைதிப் போராட்டங்கள், அரசியல் தலைவர்களுக்குப் பெரும் தார்மீக அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பல நாடுகள் இரு தரப்பினரையும் ஒரே மேசையில் அமர வைக்கப் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தாலும், தலைவர்களின் பிடிவாதத்தால் அமைதி என்பது இன்னும் கானல் நீராகவே தொடர்கிறது.
மத்திய கிழக்குப் போர் என்பது வெறும் நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல; அது உலகின் மனசாட்சியை உலுக்கும் ஒரு மனித உரிமை நெருக்கடி. நெதன்யாகு போன்ற தலைவர்களின் அரசியல் தற்காப்பு விளையாட்டுகளுக்கும், ட்ரம்ப் போன்ற வல்லரசுத் தலைவர்களின் அதிகாரப் பசிக்கும் மத்தியில் தினந்தோறும் பலியாகிக் கொண்டிருப்பது என்னவோ எந்தத் தவறும் செய்யாத அப்பாவி மக்களும், குழந்தைகளும்தான். ஆயுதங்களின் மொழியைப் புறந்தள்ளிவிட்டு, மனிதத்தின் குரல் எப்போது அங்கு வெல்லப் போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.
- சிவா சின்னப்பொடி


