மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன!
இன்று இரவுக்குள் ஒரு சுமுகமான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் நாட்டை முழுமையாக அழித்துவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
மத்திய கிழக்குப் போர்: இன்று (ஏப்ரல் 7, 2026) அதிகாலை நிலவரப்படி, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரவுக்குள் ஒரு சுமுகமான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் நாட்டை முழுமையாக அழித்துவிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், களத்தில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ: ஈரான் மீது இஸ்ரேலின் அதிரடித் தாக்குதல்: ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலிய வான்படை சரமாரியான தாக்குதல்களைத் (Wave of airstrikes) தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தெஹ்ரான் மற்றும் அதன் அண்டை நகரமான கராஜ் (Karaj) பகுதிகளில் பயங்கரக் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணை மழை: இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் பணியில் தோல்வியடைத்துள்ளதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்களின் பதற்றம் அண்டை நாடுகளிலும் எதிரொலிக்கிறது. சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியை நோக்கிக் குறிவைக்கப்பட்ட ஏழு சக்திவாய்ந்த ஏவுகணைகளைத் தடுத்து அழித்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகளின் சிதைவுகள் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகே விழுந்துள்ளதால், சேதங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிபர் ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை:
நேற்று திங்கட்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு ஒரு பகிரங்க இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். "முடக்கப்பட்ட ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்குச் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் ஈரான் சம்மதிக்காவிட்டால், ஒரே இரவில் ஒட்டுமொத்த ஈரான் நாடும் நிர்மூலமாக்கப்படும்" என அவர் எச்சரித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் பற்றிக் கவலையில்லை:
பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டுவீசி அழிப்பது சர்வதேசப் போர்க்குற்றமாகவே கருதப்படும். ஆனால், "இப்படிப் போர்க்குற்றம் புரிவதைப் பற்றி எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை" என ட்ரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்தது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானியச் சிறையிலிருந்து ஜப்பானியப் பத்திரிகையாளர் விடுதலை: போர்ப் பதற்றத்திற்கு நடுவே ஒரு சிறிய ஆறுதலாக, ஈரானில் சிறைபிடிக்கப்பட்டிருந்த ஜப்பானியப் பத்திரிகையாளர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈரானின் 'எவின்' (Evin) சிறையில் கடந்த ஜனவரி 20 முதல் அடைக்கப்பட்டிருந்த ஜப்பானியத் தேசியத் தொலைக்காட்சியின் (NHK) செய்தியாளர் ஷின்னோசுகே கவாஷிமா (Shinnosuke Kawashima) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதை ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான கெடு முடிவடைய உள்ள சில மணி நேரங்களுக்கு முன்பு, இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வருவது உலக அரங்கில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


