பிரான்சில் மாபெரும் சைபர் தாக்குதல்!
ANTS இணையதளத்தில் உங்கள் தரவுகள் பாதுகாப்பானவையா? புதிய எச்சரிக்கை!
பிரான்சில் மாபெரும் சைபர் தாக்குதல்: ANTS இணையதளத்தில் உங்கள் தரவுகள் பாதுகாப்பானவையா? புதிய எச்சரிக்கை
பிரான்சில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனின் அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற மிக முக்கியமான ஆவணங்களை வழங்கும் ANTS இணையதளம், கடந்த ஏப்ரல் 15, 2026 அன்று கணினித் திருடர்களால் (Hackers) ஊடுருவப்பட்டது. இந்தத் தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ANTS என்றால் என்ன?
2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு அமைப்பு, பிரான்சில் கீழ்க்கண்ட ஆவணங்களை நிர்வகிக்கும் ஒரே அதிகாரப்பூர்வ இடமாகும்: உயிரியல் அடையாளக் கடவுச்சீட்டு [Biometric Passport]
தேசிய அடையாள அட்டை [CNI]
ஓட்டுநர் உரிமம் [Permis de conduire]
குடியிருப்பு அனுமதிச் சீட்டு [Titre de séjour]
அடிப்படையில், பிரான்சில் வசிக்கும் எவரொருவரும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவேதான், இந்தத் தாக்குதல் பல மில்லியன் மக்களைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பயனர்களின் கணக்குகளில் இருந்து கீழ்க்கண்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்: அடையாளம்: பெயர், மற்றும் பாலினம்.
தொடர்பு விபரங்கள்: மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி.
பிறப்பு விபரங்கள்: பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம்.
கணக்கு விபரங்கள்: இணையதள நுழைவு அடையாள எண் [Login ID].
நீங்கள் விண்ணப்பங்களின் போது இணைத்த ஆவணங்கள் (வீட்டு முகவரிச் சான்று, புகைப்படங்கள் அல்லது பிறப்புச் சான்றிதழ்கள்) திருடப்படவில்லை என அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மேலும், திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு உங்கள் கணக்கிற்குள் நேரடியாக நுழைய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிவது எப்படி?
இதுவரை ANTS இணையதளம் மூலம் ஏதேனும் ஒரு ஆவணத்திற்கு விண்ணப்பித்திருந்தால், நீங்கள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. தனிப்பட்ட அறிவிப்பு: பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனித்தனியாக மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
எச்சரிக்கை: உங்களுக்கு இன்னும் தகவல் வரவில்லை என்பதற்காக உங்கள் தரவுகள் பாதுகாப்பாக உள்ளன என்று அர்த்தமல்ல. புலனாய்வுப் பணிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஏற்படக்கூடிய அபாயங்கள் என்ன?
திருடப்பட்ட உங்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் பிறந்த தேதியைக் கொண்டு மோசடி நபர்கள் 'வலைவீச்சு மோசடி' [Phishing] செய்ய அதிக வாய்ப்புள்ளது.
உதாரணமாக, ANTS அமைப்பில் இருந்து வருவது போலவே ஒரு போலி மின்னஞ்சல் உங்களுக்கு வரலாம். அதில், "உங்கள் அடையாள அட்டையில் சிக்கல் உள்ளது, அதைச் சரிசெய்ய இந்த இணைப்பைச் சொடுக்கவும்" எனக் கூறப்பட்டிருக்கும். நீங்கள் அந்த இணைப்பைச் சொடுக்கினால், உங்கள் வங்கி விபரங்களையோ அல்லது மற்ற ரகசியத் தகவல்களையோ அவர்கள் திருடிவிடுவார்கள்.
முக்கிய ஆலோசனை: மின்னஞ்சலில் வரும் எந்த ஒரு தேவையற்ற இணைப்பையும் (Link) சொடுக்க வேண்டாம். எப்போதும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு நேரடியாகச் சென்று விபரங்களைச் சரிபார்க்கவும்.


