குற்றப் பின்னணி இல்லாத பனை விவசாயி; சுட்டுப் பிடிக்கும் அளவுக்கு ஆலங்குளத்தில் நடந்தது என்ன?
எஸ்.ஐ. இசக்கி ராஜா சமீபத்தில்தான் ஆலங்குளம் காவல்நிலையத்தில் பொறுப்பேற்றார் என்பதால், பனை விவசாயி மணிகண்டனுக்கும் இவருக்கும் இடையே முன்விரோதம் இருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.
என்னதான் தேர்தல் பணிகளால் நாடே ஒருபுறம் பரபரப்பாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் வழக்கம்போல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தேர்தல் பணிகளுக்கு மத்தியில், குற்ற வழக்குகளைக் கையாள்வது என்பது போலீசாருக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில்தான், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை ஏறும் தொழிலாளி ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு இருந்த அதிருப்தியும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
ஏனென்றால், நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்-அப் மரண வழக்கில் சில தினங்களுக்கு முன்புதான் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாளே, சட்டவிரோதமாக கள் இறக்குவதாகக் கூறி, சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், சட்டத்தை தன் கையில் எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பனை விவசாயியை துப்பாக்கியால் சுடும் அளவுக்கு அப்படி ஆலங்குளத்தில் என்னதான் நடந்தது?
அதாவது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மருதும்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் சேட் (75). இவருக்கு அருள் இசக்கி ராஜ் (52), சிவ பொன்ராஜ் (44), மணிகண்டன் (33) என 3 மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். அதில், சிவ பொன்ராஜ், அருள் இசக்கி ராஜ் இருவரும் மும்பையில் வசிக்கும் நிலையில், மணிகண்டன் மட்டும் தந்தையுடன் இணைந்து விவசாயம் மற்றும் பனைத் தொழில் செய்து வருகிறார்.
இவர்களுக்கு மருதம்புத்தூர் கிராமத்தில் சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அதில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும் கூறுகின்றனர். இதுதவிர 4 பனை மரங்களும் உள்ளன. அதில் கிடைக்கும் பதநீரை வைத்து கருப்பட்டி காய்ச்சுவது, பதநீர் குடிப்பது என சொந்த தேவைக்கு மட்டும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான், மணிகண்டன் அவரது தோட்டத்தில் உள்ள பனைமரத்தில் கள் இறக்குவதாக ஆலங்குளம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், ஏப்.7 ஆம் தேதி ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, இரண்டு போலீசாருடன் மணிகண்டனின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால், மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக தோட்டத்திற்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. அதைக் கேட்ட மணிகண்டனும் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
போலீசார் மணிகண்டனை அழைத்து செல்வதை கண்ட அண்ணன் சிவன் பொன்ராஜ், தனது 2 குழந்தைகளுடன் தோட்டத்திற்கு சென்றுள்ளார். (மும்பையில் உள்ள மணிகண்டனின் சகோதரர் சிவன் பொன்ராஜ் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்) அதை பார்த்த தந்தை பெருமாள் சேட்டும் பின்னால் சென்றுள்ளார்.
ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு
இந்நிலையில், மணிகண்டனுக்கும், இசக்கி ராஜாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி இருவரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டதாக தெரிகிறது. அதில் எஸ்.ஐ. இசக்கி ராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மணிகண்டனை 4 முறை சுட்டுள்ளார்.
அப்போது இரண்டு குண்டுகள் மணிகண்டனின் இரு கால்களிலும் பாய்ந்தன. மேலும், அந்த சண்டையில் இசக்கி ராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. தகவலறந்து விரைந்து வந்த சக போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சாதிய பிரச்சனையா?
குறிப்பாக, தமிழ்நாட்டில் கள் இறக்குவது சட்டப்படி குற்றமாகவே இருந்தாலும், அதைவிட கொடுமையான கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் மீதும், அதனை பயன்படுத்துபவர்கள் மீதும் கூட இதுபோன்ற நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், சாதாரண பனைத் தொழிலாளியை சுட்டுப்பிடிக்கும் அளவுக்கு என்ன அவசியம் எழுந்துள்ளது என சமூக வலைத்தளத்தில் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இதுபோன்ற சூழலில், இந்த துப்பாக்கி சூடு விவகாரத்துக்கு சாதிய சாயலையும் சில தரப்பினர் பூசி வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணம், மோதல் சம்பவத்தின் போது எஸ்.ஐ. இசக்கி ராஜா, மணிகண்டனை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், எனவே இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே அன்று இரவே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சிவ பொன்ராஜின் 17 வயது மகள் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீசார் எஸ்ஐ இசக்கி ராஜா உட்பட காவலர் 3 பேர் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். போராட்டத்தில் விளைவாக, நேற்று இரவு இசக்கி ராஜாவை நெல்லை சரக டிஐஜி சரவணன் சஸ்பெண்ட செய்தார்.
சம்பவ இடத்தில் நடந்தது என்ன?
தேர்தல் சூட்டுக்கு மத்தியில் இப்படிப்பட்ட தகவல் கிடைத்ததும் மணிகண்டன் குறித்து அறிந்து கொள்வதற்காக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக நிரூபர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். ஊர் மக்களிடம் விசாரித்த போது, மணிகண்டன் எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவர், தனது அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்த்துக் கொண்டே, கிடைக்கும் கூலி வேலைக்கும் செல்வார். ஊரில் உள்ள மைதானத்தில் தினமும் இளைஞர்களுடன் வாலிபால் விளையாடுவாரே தவிர, அவர் மீது எந்த புகாரும் வந்ததில்லை என்றனர்.
எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாத பனை விவசாயியை, சுட்டுப் பிடிக்கும் அளவுக்கு சம்பவத்தன்று என்னதான் நடந்தது? என மணிகண்டனின் சகோதரர் சிவன் பொன்ராஜை தொலைபேசியில் அணுகினோம். அப்போது நம்மிடம் பேசிய அவர், “எனது தம்பி கள் இறக்குவதாக யாரோ போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், எஸ்ஐ இசக்கி ராஜா சுமார் 11.40 மணிக்கு தோட்டத்திற்கு வந்தனர். அங்கு தம்பி இல்லாததால், போன் செய்து வரவழைத்தனர். மணியின் மனைவி எங்களிடம் கூறியதால், நானும், அப்பாவும் எனது குழந்தைகளுடன் தோட்டத்திற்கு போனோம்.
அப்போது, மரத்தில் ஏறி கள் உள்ளதா என காண்பிக்குமாறு இசக்கி ராஜா கூறினார். உடனே, மணிகண்டனும் மரத்தில் ஏறி, மேலே இருந்த கலயத்தில் (பானை) கள் எதுவும் இல்லை என காட்டினார். அப்போது, எஸ்ஐ சாதி பெயரை சொல்லி "தப்பித்து விட்டாயா" என திட்டினார். அதைக் கேட்ட எனது மகன் “எங்கள் தோட்டத்தில் தானே சார் மரம் ஏறுகிறோம், இதையெல்லாம் ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்” என்றான். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ. இசக்கிராஜா, கீழே இருந்த கம்பை எடுத்து எனது மகனை அடிக்க பாய்ந்தார்.
அதனை பார்த்த மணிகண்டன், மரத்திலிருந்து வேகமாக கீழே குதித்தார். அப்போது, எஸ்ஐ இசக்கி மீது மணிகண்டன் விழுந்ததால், இருவரும் தரையில் உருண்டனர். அதில், இசக்கிராஜா வைத்திருந்த கம்பு குத்தி அவருக்கு காயம் ஏற்பட்டது. எனது தம்பியும் ஆத்திரத்தில் இசக்கி ராஜாவின் சட்டையை பிடித்து சண்டை போட்டான். அப்போது எஸ்.ஐ. இசக்கிராஜா இடுப்பில் இருந்த துப்பாக்கி கீழே விழுந்துவிட்டது. உடனே, துப்பாக்கியை எடுத்து ஆக்ரோஷமுடன் மணிகண்டனை பார்த்து சுட்டார்.
அதில் முதல் குண்டு, எனது மகள் கால் அருகில் விழுந்தது. இதனால் எனது மகள் பதறிவிட்டாள். மொத்தமாக 4 முறை சுட்டதில், மணிகண்டனின் இரண்டு கால்களிலும் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. அப்போது, எனது செல்போனை தூக்கி எறிந்த எஸ்ஐ, என்னை அங்கிருந்து கிளம்புமாறு மிரட்டினார். நானும் குழந்தைகள் இருந்த பதட்டத்தில் ஒதுங்கி நின்றேன். அப்போது, எனது அப்பாவை மிரட்டி அவர்கள் சொல்வதை சொல்லும்படி வீடியோ எடுத்தனர். அப்பா எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை. பின்னர், 108 மூலம் தம்பியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என் தம்பிதான் இசக்கி ராஜாவை முதலில் அடித்தார் என மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டு பிடிக்கும் அளவுக்கு அவர் பெரிய குற்றம் செய்யவில்லை. ஒருவேளை துப்பாக்கி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தால் கூட வானத்தை நோக்கி சுட்டு, மிரட்டியிருக்கலாம். ஆனால், காலில் குறிபார்த்து சுட்டு, அவன் வாழ்க்கையையே சீரழித்துவிட்டனர்” என வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.
பதிலளிக்க மறுத்த இசக்கி ராஜா
இதுகுறித்து சம்பந்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜாவை ஈடிவி பாரத் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நமது கேள்விக்கு பதிலளிக்காமல், "நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன்" எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
மிரட்டல் ஆடியோ மூலம் பிரபலமானவர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல்நிலையத்தில் இசக்கி ராஜா பணிபுரிந்த போது, ரவுடி ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "நானும் ரவுடிதான்; நேருக்கு நேர் மோதி பார்ப்போமா" என பேசி அந்த ஆடியோவை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோதான், இசக்கி ராஜாவை பிரபலமாக்கியது. அந்த ஆடியோ தொடர்பாக செய்தி வெளியிட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் ஒருவரை மிரட்டிய வழக்கில், மனித உரிமை ஆணையம் இசக்கி ராஜாவுக்கு அபராதமும் விதித்திருந்தது.
அதேபோல, தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகனை கடந்த 2022-ல் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வைத்து என்கவுண்டர் செய்தார் இசக்கி ராஜா. அப்போது அவர் திண்டுக்கல் காவல்நிலையத்தில் பணிபுரிந்தார். அதாவது, நீராவி முருகனை பிடிப்பதற்காக இசக்கி ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த என்கவுன்டர் அரங்கேறியது.
முன்விரோதம்?
இப்படி, பல பரப்பரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரரான இசக்கி ராஜா, சில வாரங்களுக்கு முன்பு தான் ஆலங்குளம் காவல்நிலையத்தில் பணியில் சேர்ந்தார். இவர் மீதுள்ள சர்ச்சைகளுக்கெல்லாம் உச்சபட்ச சர்ச்சையாக, தற்போது பனை தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டு சஸ்பெண்ட் ஆனது அமைந்துள்ளது. ஆலங்குளம் காவல்நிலையத்தில் சமீபத்தில் தான் இசக்கி ராஜா பொறுப்பேற்றது தெரியவந்துள்ளது. எனவே மணிகண்டனுக்கும் இவருக்கும் வேறு ஏதேனும் முன்பகை இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.


