வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தமிழர்களின் காணியில் 'விவசாயம் செய்யும் இராணுவம்'!
எங்களது பெற்றோர் எமக்கு உரிமையாக்கித் தந்த காணிகள் இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமானவை அல்ல!
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் இரத்துச் செய்யப்படாததால், அப்பிரதேசத்தின் பாரம்பரிய தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள கவலைக்கிடமான நிலைமையை வடக்கின் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 6,000 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி முன்னைய அரசாங்கம் ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் சுமார் 3,000 ஏக்கர் காணிகளில் அதன் உரிமையாளர்கள் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அந்த வர்த்தமானி இதுவரை இரத்துச் செய்யப்படாததால் காணிகளுக்கான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“2013 ஆம் ஆண்டு சுமார் 6,000 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதற்கு வர்த்தமானி மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், 2015-இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் காலத்தில், இந்த 6,000 ஏக்கர் வர்த்தமானி நடைமுறையில் இருக்கும் நிலையிலேயே சுமார் 3000 ஏக்கர் காணிகளில் மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குச் சென்று அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு கட்டம் கட்டமாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மக்களின் காணிகளுக்கான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்த இந்த வர்த்தமானி தடையாக உள்ளது. எனவே, அந்த வர்த்தமானியை இரத்துச் செய்து, தமக்கு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான சட்டபூர்வ உரிமையை வழங்குமாறு கோருவதுடன், எஞ்சியுள்ள 3000 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.”
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தமிழ் மக்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தன்று வடமாகாண கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் முன்னெடுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
“36 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாத மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான தார்மீகப் போராட்டம்” என சிங்கள மொழியிலும் எழுதப்பட்ட பதாதையை ஏந்தியவாறு, மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலம் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேவாலயங்கள், பாடசாலைகள், கோவில்கள் உள்ளிட்ட தமது காணிகளை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் இராணுவத்தின் கீழ் இருக்கும் இந்தக் காணிகள் எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், இராணுவம் இவற்றை பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்துவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.
“தற்போது இராணுவத்தின் வசமுள்ள இந்த 3,000 ஏக்கர் காணிகளைப் பார்த்தால், அவற்றில் 80% புதராக காணப்படுகின்றன. எந்தவொரு இராணுவத் தேவைக்கும் அந்தக் காணிகள் பயன்படுத்தப்படுவதில்லை. அவை விவசாயம் போன்ற வேறு விடயங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. எனவே இந்த மக்களின் கோரிக்கை நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானது. இலங்கை இராணுவம் இந்தக் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்காமல் வைத்திருப்பது இராணுவ பலத்தைக் காட்டுவதற்காகவே தவிர, அங்கு உண்மையில் பாதுகாப்புத் தேவை எதுவும் இல்லை. இது அவர்களின் இனவாதக் கொள்கையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறதே தவிர வேறொன்றுமில்லை.”
‘கமாண்டர் பங்களா’ என அழைக்கப்படும் வடமாகாண இராணுவக் கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லமானது, சுமார் 200 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்தியே கட்டப்பட்டுள்ளதாக போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கத்தின் உறுப்பினர் தேவரட்ணம் அந்தனி சுபாஷ் அங்கு சுட்டிக்காட்டினார்.
"நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். அதாவது J/246, J/248, J/251 மற்றும் J/255. இவை அனைத்தும் மயிலிட்டி மக்களின் - அதாவது பலாலி சந்திக்கும் மயிலிட்டி சந்திக்கும் இடையில் உள்ள மக்களின் காணிகள். இன்று நாம் கூடி இருக்கும் இந்த இடத்துக்கு முன்னால் இருப்பது ‘கமாண்டர் பங்களா’ என்று அழைக்கப்படும் இராணுவத் தளபதியின் மாளிகை. நீங்கள் பார்த்தால் தெரியும். அதில் எனது காணியுடன் சேர்த்து - அதாவது எனது தாய் தந்தையின் காணி உட்பட சுமார் 200 குடும்பங்களின் காணிகளைக் கைப்பற்றித்தான் இந்தக் கமாண்டர் பங்களா கட்டப்பட்டுள்ளது.”
வடக்கின் கடுமையான யுத்த மோதல்கள் காரணமாக 1990 ஆம் ஆண்டு அப்பகுதியில் வாழ்ந்த பாரம்பரிய தமிழ் மக்கள் அந்த நிலத்திலிருந்து புலம்பெயர்ந்ததன் பின்னர், அரசாங்கம் அப்பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவித்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தனது பாரம்பரிய காணியை இழந்த விதம் குறித்து சுபாஷ் பின்வருமாறு விளக்கினார்:
“இன்று எங்களுக்கு என்று ஒரு கோயில் இல்லை. சேமக்காலை இல்லை. இதோ நாம் இருக்கும் இடத்துக்கு முன்னால் இந்த இடத்தில். இங்குதான் எமது காணியில்தான் காணிக்கை மாதா தேவாலயம் இருந்தது. இன்று அது முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டு, புதர் மண்டிக் காணப்படுகிறது. 2010 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசம் முற்றாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தபோது நாம் இராணுவ அனுமதியுடன் வந்து ஒரு பூசையை நடத்தினோம். அப்போது இந்தத் தேவாலயம் முழுமையான கட்டடமாக இருந்தது. ஆனால் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு இது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்தது என்றால், 2013 ஆகும் போது தேவாலயம் இல்லை என்பதன் அர்த்தம் என்ன? நாம் 2010 இல் இதைப் பார்த்தோம். இன்று தேவாலயம் இல்லை. எங்கள் வீடுகள் பல இங்கு இருந்தன... இன்று ஒன்றும் இல்லை.”
சர்வதேச தொழிலாளர் தினத்தன்று வடமாகாண இராணுவக் கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட வயது முதிர்ந்த தாய் ஒருவர், தனது பாரம்பரிய காணியை உடனடியாக மீள வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
“எங்களுக்கு வீடுகள் வேண்டும். நாங்கள் இலங்கையின் அநாதைகள் அல்ல, நாங்கள் இலங்கைப் பிரஜைகள். இலங்கையில் பிறந்து மயிலிட்டியிலேயே வளர்ந்த மனிதர்கள். நாங்கள் இந்தியாவில் பிறக்கவில்லை, நாங்கள் இந்தியாவுக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றிருந்தோம், இப்போது மீண்டும் வந்துள்ளோம். எமது வீடுகள் எமக்கு வேண்டும், எமது காணிகளை எமக்குத் தாருங்கள்.”
தமது பாரம்பரிய காணியில் இருந்த சமய மற்றும் சமூக கலாசாரத்தை இராணுவம் முற்றாக அழித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அந்தத் தாய், தமிழ் மக்களின் காணிகளை அனுபவித்து வரும் இராணுவம் தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பொருளாதாரத்தை தற்போது முற்றாகக் கைப்பற்றியுள்ளதாக அங்கு மேலும் வலியுறுத்தினார்.
“எங்கள் மரங்களில் உள்ள தேங்காய்களைப் பறித்து எங்களுக்கே விலை பேசுகிறீர்கள். எங்கள் வீடுகளில் தூங்கிக்கொண்டு பௌத்த விகாரைகளைக் கட்டியிருக்கிறார்கள். எங்கள் முருகன் கோவில், எங்கள் பிள்ளையார் கோவில், எங்கள் மாதா தேவாலயம் இவை இருந்த இடங்கள் எல்லாம் எமக்கு இல்லாமல் போய்விட்டன. அப்படியென்றால் நாம் எங்கே இருப்பது? எங்களுக்கு உள்ள வருமானம் என்ன? எங்கள் தோட்டங்களில் இருந்த தென்னை மரங்கள், மாமரங்கள் மூலமே எங்களுக்கு வருமானம் கிடைத்தது. நீங்கள் ஒரு இராணுவப் படையாக வந்து எங்கள் காணிகளைப் பிடித்து, எங்களது காணிகளில் வலுக்கட்டாயமாகத் தங்கி மிகவும் பெருமையாக இருக்கிறீர்கள். நாங்கள் எங்கே போவது? நாங்கள் வேறு நாட்டுக்கா போவது? எங்கள் காணிகளை எங்களுக்குத் தாருங்கள். எங்களது பெற்றோர் எமக்கு உரிமையாக்கித் தந்த காணிகள் இவை. அவை இராணுவததுக்குச் சொந்தமானவை அல்ல. இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமானவை அல்ல, அவை இலங்கையின் மக்களின் காணிகள், மக்களின் கோவில்கள்.”
வாழ்வின் இறுதிக் காலத்திலாவது சுதந்திரமாக மூச்சு விடுவதற்குத் தனது பாரம்பரிய காணிகளை விடுவிக்குமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.
“முன்பு எங்கள் மாதாக் கோயிலின் மணியோசை பலாலியிலிருந்து கடற்கரை ஓரம் வரை கேட்கும். இன்று அந்த தேவாலயத்தை அடக்கி வைத்துள்ளீர்கள். எங்கள் பிள்ளையார் கோவிலில் சிலைக்கு முல் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். அனைத்தையும் பிடித்துக்கொண்டு நீங்கள் இராணுவ அடக்குமுறை மூலம் எங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அடக்கப்பட்டவர்களை அடக்கி முடித்தாயிற்று. இப்போது இந்த வயதான காலத்திலும் எங்களை அடக்கப் பார்க்கிறீர்கள். எமக்கு இருக்க இடமில்லை, உட்கார ஒரு வீடில்லை. வீட்டு வாடகை பத்தாயிரம் இருபதாயிரம். அப்படி கொடுக்க எங்களுக்கு வசதியில்லை. எமது காணிகளை விடுவியுங்கள்.”
யுத்த அழிவுகள் காரணமாக காணி உரிமையை உறுதிப்படுத்துவது கடினமாகியுள்ள வடக்கில் வாழும் மக்களின் வசமுள்ள கடலோர மாவட்டங்கள் நான்கினதும் சுமார் ஆறாயிரம் ஏக்கர் காணிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போதைய ஆட்சியாளர்களினால் 2025 மார்ச் 28 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட 2430 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை, வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காணி உரிமைச் செயற்பாட்டாளர்கள் எழுப்பிய எதிர்ப்பு மற்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியமை ஆகிய காரணங்கள், இந்த அரசாங்கம் அதனை மீளப்பெற்றது.


