நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறையை கண்டித்து கொழும்பில் போராட்டம்!
தசாப்த காலங்களாகத் தொடரும் மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டத்துக்கு தீர்க்கமான தீர்வினைக் கோரி இன்றைய போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான நிரந்தர காணி உரிமையை வலியுறுத்தியும் இன்று செவ்வாய்க்கிழமை (5) கொழும்பு ஐந்துலாம்பு சந்தி பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
'நாம் மலையகம்' அமைப்பின் ஏற்பாட்டில் 'நாம் நீலகாமம்' எனும் தொனிப்பொருளில் இந்த அறவழிப் போராட்டம் நடைபெற்றது. அண்மையில் இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை, நீலகாமம் தோட்டப் பகுதியில் முகக் கவசம் அணிந்த நபர்களால் நபரொருவர் தாக்கப்பட்டு, அவர்களது குடியிருப்புக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூகத்தில் பேசுபொருளாகியதோடு, குறித்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. எனினும் ஓரிரு தினங்களின் பின்னர் அவர் சம்பவ இடத்துக்குச் சென்றிருந்ததோடு, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறிருப்பினும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு மாத்திரமன்றி, தசாப்த காலங்களாகத் தொடரும் மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டத்துக்கு தீர்க்கமான தீர்வினைக் கோரி இன்றைய போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் போராட்டம் இடம்பெற்றது.


