விஜய் பதவியேற்க காலதாமதமின்றி அழைக்க வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!
ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்க ஆளுநர் தயக்கம் காட்டுவது ஏன்? - நடிகர் விஷால்.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து 3 நாட்களாகியும், புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணிப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையில் பெரும் திருப்பமாக, முதன் முறையாக தேர்தல் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சாதனை படைத்தது. ஆளும் கட்சியான திமுக 59 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது காங்கிரஸ். அந்த கட்சிக்கு தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், 113 பேரின் ஆதரவுடன் பொறுப்பு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது தவெக. இது தொடர்பாக அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையிலான குழுவினர் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று சந்தித்தனர். மேலும், விஜய் முதலமைச்சராக பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஆனால், ஆட்சி அமைக்க வருமாறு பொறுப்பு ஆளுநர் அர்லேகர், தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடவில்லை. மேலும், விஜய்க்கு அளிக்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான கான்வாய் வாகன பாதுகாப்பும் திடீரென காவல்துறையால் திரும்பப் பெறப்பட்டது. இந்த பரபரப்பான சூழல் தமிழ்நாடு அரசியலில் அரங்கேறி வருகிறது.
தவெக தலைவர் விஜய் பதவியேற்க காலதாமதமின்றி அழைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி த.வெ.க.வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்யை மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார்.
ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பிஜேபி கடைபிடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு ஆளுநர், அவரை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது ஏற்புடையதல்ல. எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜய்யை தமிழக ஆளுநர் உடனடியாக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் - தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களின் தெளிவான ஆதரவை பெற்றுள்ளது. மேலும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. இந்நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
இந்த ஜனநாயக விரோத தாமதத்திற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தம் உள்ளது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இதனை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பை மதித்து, விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் அழைக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப் பெரிய ஜனநாயக போராட்டம் நடத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்க ஆளுநர் தயக்கம் காட்டுவது ஏன்? - நடிகர் விஷால்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "2017-18 ஆம் ஆண்டுகளில் கோவா, மணிப்பூர், மேகாலயா மற்றும் மிக முக்கியமாக கர்நாடகாவில் நிகழ்ந்த அதே சூழல் போலவே தற்போது இங்கும் நிகழ்ந்துள்ளது. அங்கு அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரப்பட்டது. அதே நடைமுறையை பின்பற்றி, விஜய்க்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்க, தமிழக ஆளுநர் ஏன் தயக்கம் காட்டுகிறார்?
மக்களின் தீர்ப்பிற்கு என்ன மரியாதை இருக்கிறது? பதவியேற்க வேண்டிய 233 சட்டமன்ற உறுப்பினர்கள் நம்மிடம் உள்ளனர். அதிகப்படியான தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில், ஆளுநர் ஆட்சியல்ல—ஒரு முழுமையான அரசாங்கமே நமக்கு தேவை. இந்த அடிப்படை உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் ஆணிவேரான மக்களுக்கும் நன்கு தெரியும். அன்பிற்குரிய விஜய், நீங்கள் ஆட்சி அமைக்க வேண்டும். நிச்சயம் அமைப்பீர்கள். ஒரு வாக்காளனாக, நான் இதை உறுதியாகச் சொல்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


