"அமெரிக்கா மீள முடியாத சகதியில் சிக்கும்" என ஈரான் எச்சரிக்கை!
அரபு அமீரகத்தின் எண்ணெய்க் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பதற்றம் தொடர்பான இன்றைய (செவ்வாய்க்கிழமை, மே 5) அதிகாலை நேர முக்கியச் செய்திகளின் தொகுப்பு :
1. ஆட்டம் காணும் போர்நிறுத்த ஒப்பந்தம்
கடந்த ஏப்ரல் 8-ஆம் திகதி முதல் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அமலில் இருந்த போர்நிறுத்தம் தற்போது வலுவிழந்து வருகிறது. திங்கட்கிழமை ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. அத்துடன், அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய்க் கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால், அமீரகத்தைக் குறிவைத்துத் தாக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளதுடன், இப்பகுதியில் நிலவும் பதற்றத்திற்கு "அமெரிக்காவின் ராணுவ அத்துமீறலே" முழுக்காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.
2. ஈரானுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
அமீரகம் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதல் "நியாயமற்றது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பதற்றத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் சவுதி அரேபிய அரசு வலியுறுத்தியுள்ளன.
3. "சகதியில் சிக்கும் அமெரிக்கா" - ஈரான் அமைச்சர் எச்சரிக்கை
ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினால் அமெரிக்கா ஒரு மீள முடியாத "சகதியில்" சிக்கிக்கொள்ளும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) எச்சரித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் முன்னெடுக்கும் சமரசப் பேச்சுவார்த்தை வழியை அமெரிக்கா தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
4. 6 ஈரானியப் படகுகளை அழித்த அமெரிக்கா
வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்து ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளைத் (Drones) தங்கள் படைகள் நடுவானிலேயே வழிமறித்து அழித்ததாகவும், மேலும் ஈரானைச் சேர்ந்த 6 சிறிய படகுகளைத் தாக்கி அழித்ததாகவும் அமெரிக்க ராணுவக் கட்டளை மையத்தின் கடற்படைத் தளபதி பிராட் கூப்பர் (Brad Cooper) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
5. தென் கொரியக் கப்பலில் வெடிவிபத்து
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற தென் கொரிய நாட்டுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் திடீர் "வெடிவிபத்து" ஏற்பட்டுத் தீப்பிடித்ததாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
6. லெபனானில் இஸ்ரேலிய இராணுவத்தினர் படுகாயம்
தெற்கு லெபனான் பகுதியில் திங்கட்கிழமையன்று ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினருடன் நடந்த நேரடி மோதலில் இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் படுகாயமடைந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- சிவா சின்னப்பொடி


