ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் இயற்கைஎய்தியுள்ளார்.
உலகத் தமிழினமே! எண்ணிப் பார்! நீ உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்?
ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் இயற்கைஎய்தியுள்ளார்.
மனித வாழ்வு என்பது இசையாலும் பாடல்களாலும் நிரப்பப்பட்டது. நாம் நினைவுகளை அவற்றால்தான் தேக்கி வைத்திருக்கோம். ஒவ்வொரு பாடலும் ஒலிக்கும் போது நாம் கடந்து வந்த அந்தக் காலகட்டத்திற்குள் உள்ளிழுக்கப்பட்டு விடுவோம்.
"உலகத் தமிழினமே! எண்ணிப் பார்! நீ உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்? "ஐயா தேனிசை செல்லப்பாவின் காந்தக் குரல்களில் செவிகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது அப்பாடல்!
தேசியத் தலைவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்ற பாசறைப் பாணர்! ஐயா தேனிசை செல்லப்பாவின் மறைவு தமிழ்ப்பேரினத்துக்கு ஏற்பட்டப் பேரிழப்பு!
காலங்கடந்து ஒலிக்கும் தமிழீழப் பாடல்கள் மூலம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருப்பார் ஐயா தேனிசை செல்லப்பா.
தமிழீழ விடுதலைப் போராட்டமும் விதிவிலக்கில்லாமல் தன்னை இசைக்கும், பாடல்களுக்கும் ஒப்புக் கொடுத்தே வளர்ந்து வந்திருக்கிறது. காலத்தின் கண்ணாடி போன்று போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்தையும் பிரதிபலித்தபடி வியாபித்திருக்கிறது தமிழீழப் பாடல்கள்.
அதில் தவிர்க்க முடியாத பெயர் 'தேனிசை செல்லப்பா'. தமிழீழ எழுச்சிப் பாடல்களின் மூச்சு தேனிசை செல்லப்பா என்பது மிகக் குறைந்த மதிப்பீடு என்றே சொல்ல வேண்டும். இதை மதிப்பிட அகராதியில் நாம் வேறு ஒரு சொல்லாடலை சல்லடை போட்டுத் தேட வேண்டும்.
ஏனென்றால் தமிழீழ எழுச்சியின் இசை 'ஆன்மா' தேனிசை செல்லப்பா. அவர் பாடிய எண்ணற்ற பாடல்களில் தலைவர் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல் ''நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்".
இன்றைய நாளில் தமிழர் வாழும் தேசமெங்கும் அந்தப் பாடலை ஒலிப்பதனூடாக அவரை நினைவு கூர்வதுடன் அந்தக் கனவை நோக்கி நகர உறுதி எடுப்பதும், அதை முன்னகர்த்துவதுமே அவருக்கான உண்மையான அஞ்சலியாகும்.
புகழ் வணக்கம் ஐயா!


