ஆபத்தான வெளிநாட்டவர்களைக் காவலில் வைக்கும் 'ராட்வெல் சட்டம்' : பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு!
பிரான்ஸ் நாட்டு மக்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
பிரான்சில் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆபத்தான வெளிநாட்டவர்களை நாடுகடத்தும் வரை காவலில் வைக்கும் காலத்தை நீட்டிப்பதற்கான புதிய சட்ட மசோதா மீது இன்று (மே 5, செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் ராட்வெல் (Charles Rodwell) முன்மொழிந்துள்ள இந்தச் சட்டம், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மிகவும் ஆபத்தானவர்கள் எனக் கருதப்படும் வெளிநாட்டவர்களைச் சிறப்பு முகாம்களில் (நிர்வாகக் காவல்) அடைத்து வைக்கும் கால வரம்பை நீட்டிப்பது இதன் முக்கியச் சாராம்சமாகும்.
நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டிய வெளிநாட்டவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க, அவர்கள் சிறப்பு முகாம்களில் காவலில் வைக்கப்படுகின்றனர். தற்போதைய விதிகளின்படி, சாதாரண நபர்களை அதிகபட்சமாக 90 நாள்கள் வரையும், தீவிரரவாதக் குற்றங்களில் தொடர்புடையவர்களை 180 நாள்கள் வரையும் மட்டுமே இவ்வாறு காவலில் வைத்திருக்க முடியும்.
ஆனால் இந்தப் புதிய சட்டத்தின் மூலம், தீவிரவாதக் குற்றவாளிகளுக்கான காவல் வரம்பை அதிகபட்சமாக 210 நாள்களாக (7 மாதங்கள்) அதிகரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இந்த 210 நாள்கள் காவல் வரம்பு இதற்கு முன்னரும் அமலில் இருந்ததுதான். ஆனால், கடந்த ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சரான புருனோ ரீடெய்லியோ (Bruno Retailleau) கொண்டுவந்த வேறொரு சட்டத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு மன்றம் ரத்து செய்தது. அப்போது தற்செயலாக இந்தக் காவல் நீட்டிப்பு விதியும் ரத்தாகி ஒரு 'சட்டச் சிக்கல்' (Legal vacuum) உருவானது. அதனைச் சரிசெய்து மீண்டும் சட்டப்பூர்வமாக்கவே இப்போது இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
பிரான்ஸ் நாட்டு மக்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி வெளியான அதிகாரப்பூர்வக் கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, நாட்டை விட்டு கட்டாயம் வெளியேற உத்தரவிடப்பட்ட ஆபத்தான வெளிநாட்டவர்களைக் காவலில் வைக்கும் காலத்தை நீட்டிப்பதற்கு 82 சதவீதப் பிரெஞ்சு மக்கள் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவா சின்னப்பொடி


