தமிழக அரசியலில் திடீர் திருப்பும் முனை!
வாக்கு எண்ணிக்கை முடிந்து 4 நாட்களாகியும் தொடர்ந்து இழுபறி
தமிழக அரசியலில் திடீர் திருப்பும் முனை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் நாளை முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே நாளை முதல்வராக பதவியேற்க முடியும் என்று ஆளுநர் அறிவிப்பு.
காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த போதிலும் இதுவரை பெரும்பான்மையை நிரூபிக்க விஜயால் முடியவில்லை. ஆகையால் நாளை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா தற்காலிகமாக பிற்போடப்படலாம் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதே வேலை திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
திமுக, அதிமுக கூட்டணி அமைந்தால் எடப்பாடி பழனிச்சாமி அல்லது உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார்கள். அதிமுகவில் உள்ள பெரும்பாலான எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து பிரிந்து விஜய்க்கு ஆதரவு அளிப்பதற்கு முடிவு செய்து வருவதாக தகவல். புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் அடுத்தடுத்து குவிந்து வரும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்.
தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா..?
தமிழக மக்கள் 108 உறுப்பினர்களை வழங்கி தவெக கட்சியை தனிப்பெரும் கட்சியாக தேர்தலில் வெற்றிபெற வைத்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்று வழிவிடாத நிலையில், திமுக அதிமுக இரண்டும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால் ஒட்டுமொத்த தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா முடிவெடுத்துள்ளதாக இந்தியாவின் பிரபல செய்திச்சேவையான NDTV செய்தி வெளியிடு.
விஜயை ஆட்சி அமைக்க அழைக்க கோரி தவெக நிர்வாகிகள் உண்ணாவிரதம்.
திருச்சி வீதியில் கல்லறை மேடு அருகே, தவெக செயற்குழு உறுப்பினர்கள் சிலர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்து 4 நாட்களாகியும் தொடர்ந்து இழுபறி
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து 4 நாட்களாகியும், புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணிப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையில் பெரும் திருப்பமாக, முதன் முறையாக தேர்தல் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து சாதனை படைத்தது. ஆளும் கட்சியான திமுக 59 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது காங்கிரஸ். அந்த கட்சிக்கு தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், 113 பேரின் ஆதரவுடன் பொறுப்பு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியது தவெக. இது தொடர்பாக அக் கட்சியின் தலைவர் விஜய் தலைமையிலான குழுவினர் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று முன் தினமும், 2-வது முறையாக நேற்றும் சந்தித்தனர்.
அப்போது, ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என தவெக தலைவர் விஜய்யிடம், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நேற்று தெரிவித்தார். இதனையடுத்து, விசிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற தவெக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்று தங்களது முடிவை அறிவிக்கவுள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசியல் களத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், "திமுகவினுடைய அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாக தான் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு பின்பு நாங்கள் என்ன செய்வது என்பது குறித்து தெரிவிப்போம்" என்று கூறினார்.
வாய் கூசாமல் ஆதரவு கேட்பதா? விசிக சிந்தனைச்செல்வன்
திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிக்கண்டுள்ள இடதுசாரிகளிடமும், விசிகவிடமும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் படிக்க...
விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தவெக தலைவரை பதவி ஏற்க அனுமதித்து, பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க வேண்டும். பாஜகவின் நிழலாக செயல்படாமல், தமிழக வாக்காளர்களின் தீர்ப்பை ஏற்று ஜனநாயகத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பாஜகவின் ரோல் இல்லை - எல்.முருகன்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத விவகாரத்தில் பாஜகவின் ரோல் கிடையாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக வெற்றி கழகம் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் சந்தித்து வரும் பிரச்சனைகளில் எங்கள் ரோலே கிடையாது" என பதில் அளித்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்றார்.
திமுகவுக்கு ஆதரவாக அகிலேஷ் பதிவு
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியை பறி கொடுத்துள்ளது. இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுக-வுடனான உறவை துண்டித்து விட்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் முடிவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். "கஷ்ட காலத்தில் நண்பர்களைக் கைவிடுவது எங்களது பழக்கம் அல்ல" என்று கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதே போல், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, மே 7 அன்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார் அகிலேஷ் யாதவ்.


