சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
மே 9 வன்முறை நஷ்டஈடு : கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிக்கை விடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.
2022 ஆம் ஆண்டு மே 9 வன்முறையின் போது தமது சொத்துக்களுகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி, சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறுவதுக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிக்கை (நோட்டீஸ்) விடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுத் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வழக்கின் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிக்கை விடுவதுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
முன்னதாக பல சந்தர்ப்பங்களில் இவருக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அந்தச் செயல்முறையை மீண்டும் முறையாகப் பூர்த்தி செய்யுமாறு உயர் நீதிமன்றம் பணித்துள்ளது.
2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த "கோட்டா கோ கம" போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அப்போதைய ஆளுங்கட்சியான மொட்டுக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு தீக்கிரையாக்கப்பட்டன.
இவ்வாறு சேதமடைந்த சொத்துக்களுக்கு அரச நிதியிலிருந்து நட்டஈடு வழங்க அப்போதைய அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
அமைச்சரவையின் இந்தத் தீர்மானமானது சட்டவிரோதமானது எனவும், இது பொதுமக்களின் வரிப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் எனவும் தெரிவித்தே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நட்டஈடு வழங்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும், சட்டத்துக்குப் புறம்பாக நட்டஈடு பெற்ற அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்டு அரசாங்கத்திடம் வழங்குவதுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.


