பிரான்ஸ்-பிரிட்டன் "உள்ளே ஒன்று, வெளியே ஒன்று" (one in, one out)
பிரான்ஸ் கடற்கரையிலிருந்து பிரிட்டன் கடற்கரையைச் சென்றடைய ஆயிரக்கணக்கான அகதிகள் தினமும் இந்தக் கடல் வழியைக் கடக்க முயல்கின்றனர்.
ஒக்டோபர் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ள பிரான்ஸ்-பிரிட்டன் "உள்ளே ஒன்று, வெளியே ஒன்று" (one in, one out) ஒப்பந்தம் என்றால் என்ன?
ஓகஸ்ட் 2025-இல் அமலுக்கு வந்த பிரான்ஸ் (France) மற்றும் பிரிட்டனுக்கு (Royaume-Uni) இடையேயான "உள்ளே ஒன்று, வெளியே ஒன்று" (one in, one out) ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அகதிகளைத் திருப்பி அனுப்புவதை முறைப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
பிரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான மிகக் குறுகிய கடல்வழி யான ஆங்கிலக் கால்வாய் (Manche) பல ஆண்டுகளாகவே குடியேற்றப் பிரச்சனைகளின் மையமாக இருந்து வருகிறது. பிரான்ஸ் கடற்கரையிலிருந்து பிரிட்டன் கடற்கரையைச் சென்றடைய ஆயிரக்கணக்கான அகதிகள் தினமும் இந்தக் கடல் வழியைக் கடக்க முயல்கின்றனர்.
2025 ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 42,000 அகதிகள் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதிக சுமையேற்றப்பட்ட சிறிய படகுகளையே (small boats) பயன்படுத்துகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாகக் கடல் கடப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, தனது எல்லைகளைப் பாதுகாக்க முனையும் பிரிட்டனுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
"ஒன்றுக்கு ஒன்று" (un pour un) விதி
இந்தத் தொடர் பயணங்களைக் கட்டுப்படுத்த, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் "உள்ளே ஒன்று, வெளியே ஒன்று" (one in, one out) என்ற பெயரிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். 6 ஓகஸ்ட் 2025 அன்று அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தம் "ஒன்றுக்கு ஒன்று" (un pour un) என்ற விதியைச் செயல்படுத்துகிறது. நடைமுறையில், இந்த இருதரப்பு ஒப்பந்தம், படகு மூலம் வரும் சட்டவிரோதக் குடியேறிகளைப் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப் பிரிட்டனை அனுமதிக்கிறது. இதற்குப் பதிலாக, திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு அகதிக்கும் ஈடாக, சட்டபூர்வமாக ஒருவரை ஏற்றுக்கொள்ள லண்டன் (Londres) சம்மதித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தால் (Commission européenne) அங்கீகரிக்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, ஆரம்பத்தில் வரும் ஜூன் 11 அன்று முடிவடையவிருந்தது. இருப்பினும், பிரிட்டிஷ் நாளிதழான 'தி கார்டியன்' (The Guardian) வெளியிட்ட தகவலின்படி, பிரிட்டனும் பிரான்சும் இந்த ஒப்பந்தத்தை ஒக்டோபர் 1 வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முழுமையான பலன்களை மதிப்பிடுவது தற்போது கடினமாக இருந்தாலும், கடந்த நவம்பர் 12 அன்று செனட் சட்டக் குழுவின் (Commission des lois du Sénat) முன், உள்துறை அமைச்சர் லோரான் நூனேஸ் (Laurent Nuñez) முதற்கட்டத் தரவுகளை வெளியிட்டார்.
"இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததில் இருந்து, பிரிட்டன் அதிகாரிகளிடம் இருந்து 304 பேரை எங்கள் எல்லைக்குள் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளைப் பெற்றுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். இவர்களில் ஆப்கானிஸ்தான், எரித்திரியா, ஈரான் மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார். "அதே நேரத்தில், பிரிட்டன் எல்லைக்குள் நுழைய 1,455 கோரிக்கைகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம். மொத்தத்தில், 94 பேர் பிரான்சுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்; மேலும் 60 பேர் சட்டபூர்வமாகப் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என அமைச்சர் மேலும் கூறினார்.
மறுபுறம், இந்த ஒப்பந்தத்தின் கீழ் பிரிட்டன் 600-க்கும் மேற்பட்ட வதிவிட அனுமதியற்ற குடியேறிகளைத் திருப்பி அனுப்பியுள்ளதாகப் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகத்தின் (Ministère britannique de l'Intérieur) செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். "இது சட்டவிரோதமாக அகதிகளைப் பிரிட்டனுக்கு ஈர்க்கும் காரணிகளை ஒழிப்பதற்கும், அங்கு இருக்க எவ்வித உரிமையும் இல்லாதவர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் நோக்கமாகக் கொண்ட மிகப் பெரிய சீர்திருத்தங்களின் ஒரு பகுதி மட்டுமே" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
- சிவா சின்னப்பொடி


