ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடுமை மிரட்டல்!
ஈரானின் மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை எடுத்துச் சென்ற 8 நிறுவனங்கள் மற்றும் அதன் 8 கப்பல்கள் முடக்கப்பட்ட சொத்துகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் அரசு தனது மசகு எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பிராந்தியத்தில் உள்ள அதன் ஆதரவுக் குழுக்கள் மற்றும் மேற்காசியாவில் இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில், ஈரானின் எண்ணெய் வர்த்தக நெட்வொர்க்கைக் குறிவைத்து புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானிய எரிசக்தி தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் உலகின் எந்தவொரு நிறுவனமும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்,' என்று உலகளாவிய நிறுவனங்களுக்கும், வர்த்தகர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஈரானின் மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை எடுத்துச் சென்ற 8 நிறுவனங்கள் மற்றும் அதன் 8 கப்பல்கள் முடக்கப்பட்ட சொத்துகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மில்லியன் கணக்கான ஈரான் எண்ணெய் கொள்கலன்களைச் சேமித்து, விற்பனை செய்த ஹொங்காங்கைச் சேர்ந்த எண்ணெய் விற்பனை நெட்வொர்க் மீது அமெரிக்க தடை விதித்துள்ளது.


