உண்மையான பௌத்த தர்மத்தை புரிந்து கொள்வோம் - சிவா சின்னப்பொடி.
பஞ்ச சீலங்கள் (The 5 Precepts) பௌத்த நெறியைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து அடிப்படை ஒழுக்கங்கள்: உயிர்க்கொலை தவிர்த்தல், திருடாமை, பாலியல் ஒழுக்கம், நாவடக்கம், போதை தவிர்த்தல்.
புத்தர் தன்னை ஒருபோதும் கடவுள் என்றோ, கடவுளின் தூதுவர் என்றோ, கடவுளின் புதல்வன் என்றோ, அல்லது கடவுளின் அவதாரம் என்றோ சொன்னதில்லை ! உண்மையான பௌத்த தர்மத்தை புரிந்து கொள்வோம்.
புத்தர் ஒரு கடவுள் இல்லை. தன்னை ஒருபோதும் அவர் கடவுள் என்றோ, கடவுளின் தூதுவர் என்றோ, கடவுளின் புதல்வன் என்றோ, அல்லது கடவுளின் அவதாரம் என்றோ எந்த இடத்திலும் சொல்லிக் கொண்டதே இல்லை. உண்மையில் அவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர் தான். ஆனால், தனது சொந்த முயற்சியினாலும், அயராத தேடலினாலும் ஒரு அசாதாரண மனநிலையை அடைந்து, உலகை வியக்க வைத்த ஓர் ஆச்சரிய மனிதர் அவர்!
நிப்பாண (Nibbana) நிலை: மாசற்ற பேரின்பம்
புத்தர் அடைந்த அந்த உன்னத மனநிலைதான் நிப்பாணம் (Nibbana) எனப்படுகிறது. அது எதற்கும் சலனப்படாத, அசைக்க முடியாத ஒரு நிதானமான நிலை (Equanimity). எந்தக் களங்கமும் இல்லாத தூய உள்ளம் அது. அவா (greed), வெறுப்பு (hatred), அறியாமை (delusion) ஆகிய மூன்று இருள்களில் இருந்தும் முழுமையாக விடுபட்ட மனம் அது. ஒரு மனிதனை ஆட்டிப்படைக்கும் அளவிறந்த ஆசை (greed), பகைமை (ill-will), கோபம் (anger), துவேஷம் (hostility), வஞ்சனை, பொறாமை (jealousy), ஏமாற்றுதல், பித்தலாட்டம் (fraud), பிடிவாதம் (obstinacy), அகந்தை (presumption), அகம்பாவம் (conceit), இறுமாப்பு (arrogance), தற்பெருமை (vanity), சோம்பல் (negligence) என அனைத்தையும் முற்றிலுமாகக் கைவிட்ட அற்புத மனம் அது.
இந்த மாசுகளை, அதாவது கிலேசங்களை (kilesa / hindrances) எல்லாம் கைவிட்ட மனத்தில் இறுதியில் மிஞ்சுவது என்னவாக இருக்கும்? அதுதான் துக்கத்தின் முடிவு; எல்லையற்ற பேரின்பம்; முழுமையான அமைதி (Peace). இந்த மாசுகள் எல்லாம் எங்கோ வெளியில் இல்லை; அவை மனிதனின் அகத்தில்தான் இருக்கின்றன, புறத்தில் அல்ல. இந்த ஆழமான அமைதியை அகத்தில் உணர்ந்து அறிந்த பின்னர்தான், சித்தார்த்த கௌதமர் ‘புத்தர்’ (விழிப்படைந்தவர்) என்று உலகத்தாரால் அன்போடு அழைக்கப்பட்டார்.
தம்மம் (Dhamma): விழிப்படைந்தவர் காட்டிய அறவழி, புத்தர் அந்த உயர்ந்த நிலையை அடைவதற்காகத் தான் மேற்கொண்ட கடினமான பயிற்சியையும், தான் தொடர்ந்து பயணித்த அந்தப் பாதையையும் மனித சமுதாயத்தின் நலனுக்காக எந்த ஒளிவுமறைவுமின்றி எடுத்துரைத்தார். அவர் கற்பித்த அந்த நெறிமுறையே தம்மம் (Dhamma) அல்லது அறம் எனப்படுகிறது.
பௌத்தம் முன்வைக்கும் ஆழமான வாழ்க்கை உண்மைகள் :
1. அநிச்சா (Anicca): யாவும் மாறும்!
காரண-காரியத் தொடர்பினால் உருவான அனைத்தும் மாற்றத்திற்கு (Anicca - நிலையின்மை) உட்பட்டவையே.
ஒரு சமயத்தில் நாம் தாயின் வயிற்றில் வெறும் கருவாக இருந்தோம். அந்த நிலையில் மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால், நாம் பிறந்திருக்கவே மாட்டோம்.
பிறந்த இரண்டு மாதங்களில் நம்மால் தவழக்கூட முடிவதில்லை. அங்கு மாற்றம் நிகழாமல் இருந்திருந்தால், நாம் நடக்கவே பழகி இருக்க மாட்டோம்.
ஐந்து வயதுச் சிறுவர்களாக அல்லது சிறுமிகளாக இருந்தபோது, பிஞ்சுப் பருவத்துக்கே உரிய குழந்தைத்தனமான எண்ணங்கள் இருந்தன. ஆனால் அந்த எண்ணங்களில் மாற்றம் ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று அறிவார்ந்த எண்ணங்களோடு, பொறுப்பான வேலைகளில் ஈடுபடும் ஒரு முதிர்ச்சியான ஆணாக அல்லது பெண்ணாக பரிணமித்திருக்க முடியாது.
உண்மை என்னவென்றால், மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை!
2. துக்கம் (Dukkha): வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தம்
வாழ்க்கையில் துக்கம் (Dukkha) உள்ளது என்பது மறுக்க முடியாத அடுத்த உண்மை. அதற்காக 'வாழ்க்கை முழுவதுமே துக்கம்' என்று புத்தர் சொல்லவில்லை. இங்கு துக்கம் என்பது வெறும் கண்ணீரைக் குறிக்கும் துயரம் மட்டுமல்ல; நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் அசௌகரியங்கள், ஏமாற்றங்கள், திருப்தியின்மை ஆகிய அனைத்துமே துக்கத்தைச் சார்ந்தவைதான்.
பிறப்பதே ஒரு துக்கம்; பிறக்கும்போதே நாம் அந்தத் துக்கத்தை அனுபவிக்கத் தொடங்கிவிடுகிறோம். மூப்பு, பிணி, மரணம் ஆகியவையும் துக்கமே.
விரும்புவது கிடைக்காவிட்டால் துக்கம்; பிடிக்காத மனிதர்களுடனோ சூழலுடனோ வாழ்வதும் துக்கம்.
சரி, விரும்பியது கிடைத்துவிட்டால் மகிழ்ச்சிதானே? என்றால், அந்த மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலைத்திருக்காது என்பதை உணரும்போது, அந்த சந்தோஷத்திலும் மெல்லிய துக்கம் கலந்துவிடுகிறது. எனவே, துக்கம் உள்ளது என்பது ஒரு பிரபஞ்ச உண்மை.
3. அனத்தா (Anatta): 'நான்' என்னும் மாயை
மிக வேகமாகத் தொடர்ந்து காண்பிக்கப்படும் பல புகைப்படங்கள்தான், நமது கண்களுக்கு ஒரு தொடர்ச்சியான திரைப்படமாகத் தெரிகின்றன. உண்மையில் நாம் பார்ப்பது, கணத்துக்குக் கணம் மாறும் தனித்தனி புகைப்படங்களைத்தான்!
இதேபோல், ஒரு சிறுவன் கம்பி மத்தாப்பை வேகமாகச் சுழற்றும்போது, அதன் ஒளி இடைவிடாத வட்ட வடிவில் இருப்பதைப் போல ஒரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால், அது உண்மையில் வட்ட வடிவில் இல்லை; வேகமாகச் சுழற்றுவதனால் ஏற்படும் வெறும் மாயத் தோற்றமே அது.
நமது உடலின் மற்றும் மனத்தின் நிலைகளும் இப்படித்தான் கணத்துக்குக் கணம் அதிவேகமாக மாறிக்கொண்டே இருக்கின்றன.
காரண-காரியத் தொடர்பினால் உண்டாகும் இந்தத் தொடர் மாற்றங்களை, யாரோ ஒருவர் கட்டுப்படுத்துவதாகவும், 'நான்' என்ற நிலையான ஒருவர் இவற்றைச் செயல்படுத்துவதாகவும் நாம் நினைக்கிறோம். நமது கண்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு மாற்றமில்லாத 'ஓட்டுனர்' நம்மை இயக்கி அனைத்தையும் செய்ய வைப்பதாக நமக்குத் தோன்றுகிறது.
ஆனால், மாற்றமில்லாத 'நான்' என்றோ 'தான்' என்றோ நிரந்தரமாக ஒன்றுமே இல்லை. அப்படி நினைப்பது முற்றிலும் தவறான கருத்து என்றும், அதுவே பல பிரச்சனைகளுக்கு ஆணிவேர் என்றும் பௌத்தம் கற்பிக்கிறது. இதுவே சாரமின்மை (Anatta / Non-self) எனப்படுகிறது.
மெய்மை அறிதல்: வெறும் வாசிப்பல்ல, அனுபவம்!
இது போன்ற ஆழமான வாய்மைகளை (Insights) வெறுமனே புத்தகங்களில் படித்தாலோ அல்லது பிறர் சொல்லக் கேட்டாலோ மட்டும் போதாது. நமது உடலின் மற்றும் மனத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தொடர்ந்து தீர விசாரித்து, பிரதிபலித்து, உள்ளப்பூர்வமாக அவற்றை உணர வேண்டும். அப்படி உணர்ந்துவிட்டால், பின் எங்கு திரும்பினாலும், யாரைச் சந்தித்தாலும் இந்த உண்மைகளைக் கண்கூடாகக் காணலாம். அப்போது உலகமே தம்மமாகிவிடும்!
"துக்கத்தைப் முழுமையாகப் புரிந்து கொண்டால், அது தோன்றுவதற்கான காரணத்தையும், அதன் முடிவினையும், அந்த முடிவிற்கு நம்மை அழைத்துச் செல்லும் மார்க்கத்தையும் (வழியையும்) நாம் தெளிவாகப் புரிந்து கொள்வோம்" என்கிறார் புத்தர். நிப்பாண நிலையை அடைந்த ஒரு தெளிவான மனத்தில் எந்த அசைவும், சலனமும் இருப்பதில்லை. அந்த மனம் இன்பத்தை நோக்கி வெறிக்கொண்டு ஓடுவதும் இல்லை; துன்பத்தைக் கண்டு பயந்து விலக முயற்சிப்பதும் இல்லை. அத்தகைய முதிர்ந்த மனம், உள்ளதை உள்ளபடி காண்கிறது.
உதாரணமாக, எதிரே வரும் ஒருவரைக் காணும்போது, சாதாரண மனம் தனது முந்தைய பதிவுகளின் (Perception) அடிப்படையில் அந்த மனிதர் மீது விருப்போ அல்லது வெறுப்போ கொள்கிறது. ஆனால், தெளிவடைந்த ஒரு புத்த மனம், எதிரே வருபவரை 'நல்லவன், கெட்டவன், சோம்பேறி, அறிவாளி' என்றெல்லாம் எடைபோட்டு கணக்குத் தீர்ப்பதில்லை. அது, எதிரே வருவதை வெறுமனே ஒரு உருவமாக மட்டுமே காண்கிறது.
புத்தர்: வரம் தரும் சாமியல்ல, வழிகாட்டும் நண்பர்!
புத்தரை நாம் வழிபடுகிறோம் என்றால், அது அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் வெளிப்பாடு மட்டுமே. அவர் கண்டடைந்த அந்த எல்லையற்ற அமைதி நிலையை, நாமும் காண வேண்டும் என்ற உந்துதல் நமது மனத்தில் தோன்ற வேண்டும் என்பதற்காகவே அந்த வழிபாடு. ஆனால், அந்த உன்னத நோக்கத்தை அடைய நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அனைத்தும் நமது கைகளில்தான் உள்ளன. அவர் வரம் கொடுத்து நம்மை உய்விக்கும் சாமி இல்லை; அவர் நமக்கு நல்வழி காட்டும் ஒரு ஆசான், ஒரு நல்ல நண்பர். அவரை வெறுமனே வழிபடுவதால் மட்டுமே நாம் நிப்பாண நிலையை அடைந்துவிட முடியாது. அவர் காட்டிய பாதையில் நடப்பதும், நடக்காமல் தவிர்ப்பதும் முற்றிலும் நமது விருப்பம்.
அஷ்டாங்க மார்க்கம்: துயர் துடைக்கும் எட்டு வழிகள்
துக்கத்தை ஒழிக்கப் புத்தர் காட்டிய வழியே அஷ்டாங்க மார்க்கம் (எட்டுப் பிரிவுகள் அடங்கிய பாதை). இதனைச் சுருக்கமாக மூன்று முக்கியத் தூண்களாகப் பிரிக்கலாம்:
ஒழுக்கம் (சீலம் - Sila / Morality)
பாவனை (சமாதி - Samadhi / Concentration)
நுண்ணறிவு (பஞ்ஞா - Panna / Wisdom) இந்த மூன்றிற்குள்ளும் அந்த எட்டுப் பாதைகள் அடங்கியுள்ளன.
ஒழுக்கம் (Sila): இதில் நற்பேச்சு (Right speech), நல்வாழ்க்கை (Right livelihood), நன்னடத்தை (Right action) ஆகிய மூன்றும் அடங்கும். நாம் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வது, சக உயிரினங்கள் மீதான கருணையின் காரணமாகத்தான் இருக்க வேண்டும்.
பாவனை (Samadhi): இது மனத்தைப் பக்குவப்படுத்தும் (Mental discipline) கலையாகும். இதில் நல்முயற்சி (Right effort), நல் அறிநிலை (Right mindfulness), நல் மன ஒருமைப்பாடு (Right concentration) ஆகிய மூன்றும் அடங்கும்.
நுண்ணறிவு (Panna): இதில் நற்பார்வை (Right view), நல்லெண்ணம் (Right intention) ஆகிய இரண்டும் அடங்கும்.
சங்கமும், பௌத்தத்தின் இரு கண்களும்
புத்தர் சொன்ன இந்த அறவழியில் இணைந்து நடப்பவர்களின் கூட்டமைப்பே சங்கம் எனப்படுகிறது. தம்மத்தை உண்மையாகக் கடைப்பிடிப்போர், தாமாகவே முன்வந்து பிறர் நலனையும் பேணுவார்கள்; இதுவே தம்மத்தின் இயல்பு. சுயநலத்திற்காக மட்டுமே அறத்தைப் பயில்வது என்பது புத்தரின் தம்மம் அல்ல!
புத்தர் சொன்னபடி ஒருவர் சரிவரப் பயிற்சி செய்தால், இன சாதி, மத பேதமின்றி; குடும்ப அந்தஸ்து, பாலினம், அதிகார வேறுபாடுகள் இன்றி யார் வேண்டுமானாலும் புத்தர் கண்ட அந்த அமைதியையும், பேரின்பத்தையும் வேறு ஏதோ ஒரு உலகிலோ, அடுத்த பிறவியிலோ அல்லாமல்... இவ்வுலகிலேயே, இப்பிறப்பிலேயே காண்பது சாத்தியம்!
சுருக்கமாகச் சொல்வதென்றால், பௌத்தப் பயிற்சி என்பது கருணை (Compassion) மற்றும் நுண்ணறிவு (Wisdom) ஆகிய இரண்டையும் ஒருசேர வளர்த்தெடுப்பதுதான்.
கருணை என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. நுண்ணறிவு என்பது சித்தம் சம்பந்தப்பட்டது.
கருணையை மட்டும் வளர்த்துவிட்டு நுண்ணறிவை வளர்க்காவிட்டால், நாம் வெறும் 'நல்லுள்ளம் கொண்ட முட்டாளாகி' விடுவோம். நுண்ணறிவை மட்டுமே வளர்த்துவிட்டு கருணையை வளர்க்கத் தவறினால், நாம் 'கல்நெஞ்சம் கொண்ட அறிவாளியாக' மாறிவிடுவோம்.
எனவே, இந்த இரண்டு உயர்ந்த பண்புகளையும் ஒருசேர வளர்த்துக்கொள்வதே நமது அன்றாட வினையாக (செயலாக) இருக்க வேண்டும். நமக்கும் நன்மையை உண்டாக்கி, பிறருக்கும் நன்மையை உண்டாக்குவதுதான் இந்த வினையின் உண்மையான பலன்!
பஞ்ச சீலங்கள் (The 5 Precepts) பௌத்த நெறியைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து அடிப்படை ஒழுக்கங்கள்:
உயிர்க்கொலை தவிர்த்தல்: எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல் (To refrain from killing living creatures).
திருடாமை: நமக்குக் கொடுக்கப்படாத எந்தப் பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல் (To refrain from taking what is not given).
பாலியல் ஒழுக்கம்: தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல் (To refrain from sexual misconduct).
நாவடக்கம்: தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; அதாவது பொய் சொல்வது, வதந்தி கிளப்புவது, கடுமையாகப் பேசுவது, மற்றவர்களைப் பற்றி வம்பளப்பது ஆகியவற்றைத் தவிர்த்தல் (To refrain from harsh and false speech).
போதை தவிர்த்தல்: அறிவு மயக்கத்தைத் தரும் போதையளிக்கும் எந்தப் பொருளையும், மதுவையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் (To refrain from taking intoxicating liquor and drugs).
(இவைதான் உண்மையான பௌத்த தர்மம் . தயவு செய்து சிங்கள மொழி பெயர்ப்பு தெரிந்த நண்பர்கள் இதை சிங்களத்தில் பிழையின்றி மொழி பெயர்த்து வெளியிட்டால் நான் நன்றியுடையவனாக இருப்பேன் )
- சிவா சின்னப்பொடி


