1கோடி 14 இலட்சம் ரூபா பணம் திருட்டு : 14 வயது சிறுவன் உட்பட இருவர் கைது.
மூன்றாவது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை கொம்பந்துறை பகுதியில், 1 கோடியே 14 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 14 மற்றும் 19 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களிடம் திருடப்பட்ட பணத்தில் 74 இலட்சம் ரூபா பணம் கைபெற்றபட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் திகதியை அன்மித்த தினத்தன்று வல்வெட்டித்துறை கொம்பந்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகநிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். இந்த திருடிய இரண்டு சந்தேக நபர்களும் காணி ஒன்றுக்குள் குழி ஒன்றினை வெட்டி பணத்தை புதைக்க முற்பட்டுள்ளனர். இதனைக் கண்ட காணி உரிமையாளர், தனக்கான பங்கினை 40 லட்சம் ரூபாய் பணத்தினை வாங்கியுள்ளார். பணத்தினை வாங்கிய மூன்றாவது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 வயது உடைய சிறுவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவரை அச்சுவேலியில் உள்ள சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தடுத்து வைக்க சிறுவர் நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது. இதேவேளை 19 வயதுடைய சந்தேக நபரை தொடர்ந்தும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


