தோழர்களின் அரசாங்கத்தில் தேரர்களுக்கு தனிச்சட்டம்?
குற்றம் நிரூபிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் காவி உடை நிரந்தரமாக களையப்படும் என்ற விடயம் கட்டாயமாக்கப்பட்டால் அதற்கு ஞானசார போன்ற தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற 2570 ஆவது வெசாக் விழாவின் ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
மட்டுமின்றி, குற்றம் செய்த பெளத்த பிக்குகள் காவி உடையில் கைவிலங்கிட்டு அழைத்துச்செல்லப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார். பிக்குகளின் ஒழுக்கத்தை பேணுவதற்கு தனியான சட்டங்களை உருவாக்க வேண்டும் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால், ஒழுக்க சீலர்களாக இருப்பவர்களே பெளத்த பிக்குவாக முடியும் என்ற விடயத்தை ஏனோ சிங்கள பெளத்தர்கள் மறந்து விட்டனர் போலும்.
இலங்கை சிங்கள பெளத்த நாடு என்றும், இங்கு ஏனையோர் வாழலாம் என்ற பேரினவாத சிந்தனைகளுடன் ஆட்சியை முன்னெடுத்த ஏனைய தலைவர்களின் வழியிலேயே தானும் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது அநுரவும் தள்ளப்பட்டுள்ளார் என்பது முக்கிய விடயம்.இலங்கை செய்திகள்.கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடன் ‘ஒரே நாடு ஒரே சட்டம் ’ என்ற செயலணியை உருவாக்கி அதற்கு தலைவராக சர்ச்சைக்குரிய பெளத்த பிக்குவான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்தமை அச்சந்தர்ப்பத்தில் கடும் விமர்சனங்களுக்குள்ளானது.
ஞானசார தேரர் சிறைவாசம் அனுபவித்தவர். மாத்திரமின்றி அவரை இந்த செயலணிக்கு தலைவராக நியமித்ததன் மூலம் இலங்கையை தனியொரு பெளத்த நாடாக உருவாக்கி இந்நாட்டில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகங்களை ஓரங்கட்டும் ஒரு முயற்சியை கோட்டாபய ஆரம்பித்துள்ளார். என்பதே ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகங்களின் கருத்தாக வெளிப்பட்டது.அதற்குள் கோட்டாபாயவை தெரிவு செய்தவர்களே அவரை ஆட்சியிலிருந்து இறக்கி விட்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரமும் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதாகவே இருந்தாலும் அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் சற்று வேறுபட்டதாக காணப்பட்டது. “நாட்டின் தற்போதைய சட்ட கட்டமைப்பை மாற்றி, அனைவருக்கும் சமமான நீதியை வழங்கும் விதமாக இலங்கைக்குப் பொருத்தமான புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம்” என ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அநுர குமார திசாநாயக்க ஆட்சியிலமர்வதற்கும் அதன் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகள் பிரதான இடத்தை வகித்திருந்தன. ஆனால், இன்று ஜனாதிபதி அநுர, பிக்குகளுக்கென ஒரு தனியான சட்டத்தைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் பல்லேகம தேரர் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டாகும். அநுராதபுரம் அட்டமஸ்தானங்களின் தலைமை விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரர் மீதான சிறுமி துஷ்பிரயோக வழக்கில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை நாடு முழுதும் பேசப்பட்டு வருகின்றது.
மேற்படி பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் சகல சாட்சியங்களும் நீதிமன்றில் சான்றுப்படுத்தப்பட்டதன் பின்னரும் அவருக்கு எவ்வாறு பிணை அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து நாட்டின் சிங்கள பெளத்த பிரிவினரும் தமது குரலை சற்று உயர்த்தி கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள பல்லேகம தேரரை சாதாரண பெளத்த பிக்குவாக பார்க்க முடியாது. அட்டமஸ்தானங்கள் எனப்படும் ஜய ஸ்ரீ மகா போதி, ருவன்வெலிசாய, தூபாராமய, லோவாமஹாபய, அபயகிரி ஸ்தூபி, ஜேதவனராமய, மிரிசவெட்டி ஸ்தூபி, லங்காராமய ஆகிய சரித்திர புகழ் மிக்க விகாரைகளின் அதிபதியாகவும் இருக்கின்றார்.
அரசியல் செல்வாக்கும் சிங்கள பெளத்த மக்களின் செல்வாக்கும் ஒருங்கே பெற்ற இவர் சிங்கள பெளத்தர்களில் கொவிகம என்ற உயர்குலத்தைச்சேர்ந்தவர் என்பது முக்கிய விடயம். இவரது குலத்தில் உதித்தவர்கள் பரம்பரையாக இருநூறு வருடங்களுக்கும் மேலாக இந்த அதிஉயர் ஸ்தானத்தை அலங்கரித்து வருகின்றனர். இந்த அனைத்தையும் தாண்டி, ‘அப்படி என்ன தான் பல்லேகம தேரர் பெரிய குற்றம் செய்து விட்டார்? அவரது ஸ்தானத்தில் அதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது’ என்பது சில பிக்குகளினதும் சிங்கள பெளத்தர்களினதும் கருத்தாக உள்ளது. அனைத்தையும் துறந்து வனம் சென்ற கெளதம புத்தரின் பெளத்த தர்மத்தை காத்து நிற்கின்றோம் என்று வாய்க்கு வாய் கூறும் இலங்கையின் பிரதான பெளத்த பீடங்களை அலங்கரிக்கும் சில மகாநாயக்க தேரர்கள் இவ்விடயத்தில் மெளனம் சாதிக்கின்றனர்.
ஆனால், நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற கொள்கையில் பயணிப்போம் என மக்களிடம் வாக்குறுதிகள் வழங்கி வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, இவ்விடயத்தில் இரட்டை வேடம் போடுகின்றதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. பிக்குகளுக்கென தனியான ஒரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற முடிவு ஜனாதிபதியுடையது அல்ல.
இலங்கையில் தேரவாத பெளத்தத்தின் வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்து மூன்று நிக்காயங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினரின் எழுத்துபூர்வக் கோரிக்கைக்கு இணங்கவே விகாரைகள் மற்றும் தேவாலகம் சட்டத்தின் 41 மற்றும் 42ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்கும், தர்ம நீதிமன்ற அதிகாரங்களை வழங்குவதற்கும் தேவையான சட்ட மூலங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் செயற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பெளத்த தர்மத்திலேயே பௌத்த சங்கத்தில் தூய்மையையும் ஒழுக்கத்தையும் பேணுவதற்கான விதிகள் கெளதம புத்தரால் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தரின் போதனைகளின் தொகுப்பான திரிபிடகத்தின் மூன்றாவது நூலான விநயபிடகம் பெளத்த சங்கத்தின் பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் தனி மனித வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் ஒழுக்க விதிகளை கூறுகின்றது.
புத்தரின் முதன்மை சீடரான உபாலி என்பவர் இதை தொகுத்துள்ளார் என வரலாறு கூறுகின்றது. ‘விநயபிடகம்’ கூறும் பெளத்த சங்கத்தினருக்கான மிக முக்கியமான நான்கு விதிகளில் பிரமச்சரியமே முதலாவது விதியாக உள்ளது. துறவிகள் எவ்விதமான உடலுறவிலும் ஈடுபடக் கூடாது, முழுமையான பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.இலங்கை செய்திகள்
பெளத்த தர்மத்தை உருவாக்கிய புத்தபெருமான் அதை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்றும் அதை வளர்த்தெடுக்கும் உயரிய தொண்டை செய்ய முன்வரும் துறவிகள் எவ்வாறு ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும் என இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே போதனைகளின் மூலம் கூறி விட்டார். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து இப்போது பிக்குகளின் ஒழுக்கத்தை பேண அரசாங்கங்கள் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளன.
பிக்குகள் தவறிழைத்தால் அவர்களது துறவற நிலையை இரத்து செய்ய மகா சங்கத்தினருக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், பெளத்தம் துறவற நிலையில் உள்ள தனி மனிதர்களை பார்ப்பதில்லை, அவர்கள் அணிந்திருக்கும் காவி உடைக்கே முதல் மரியாதை வழங்கப்படுகின்றது. காவி உடையுடன் ஒரு பெளத்த பிக்கு கைது செய்யப்பட்டால் அதையே தமது ஆயுதமாக அவர்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதை கடந்த காலங்களில் அவதானித்திருக்கலாம். பெளத்த தர்மத்தின் புனித உடையாக போற்றப்படும் காவி உடையுடன் ஒரு பிக்கு கைவிலங்கிட்டு அழைத்து வரப்படுவதை, பெளத்தத்தை பின்பற்றும் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர் என்ற அர்த்தத்திலேயே ஜனாதிபதி அநுர கருத்து வெளியிட்டிருக்கலாம். பிக்கு நிலையிலுள்ள ஒருவருக்கு பெளத்த நாட்டில் தண்டனை வழங்கலாமா என்ற கேள்வியே இப்போது பிரதானமாக எழுந்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பிக்கு நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை அவரது பிக்கு நிலையை அகற்றும் அதிகாரத்தை மகா சங்கத்தினருக்கு வழங்கும் வகையில் புதிய சட்ட வரைவு ஒன்று உருவாக்கப்படுமானால். அது வரவேற்கத்தக்கதே. அதாவது, அவர் அணிந்திருக்கும் காவி உடையை அகற்றுதலாகும். இந்த அதிகாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனையும் அனுபவித்த ஞானசார தேரர் போன்ற பிக்குகள் பொது மன்னிப்பில் வெளியே வந்தும் மீண்டும் காவி உடை அணிந்து பேரினவாதம் பேசி சமூகங்களுக்கிடையில் முரண்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தத் துணிகின்றனர்.
எது எப்படியானாலும் அரசியலமைப்பில் ‘பெளத்த தர்மத்தை பாதுகாத்தல்’ என்ற சரத்தை பின்பற்ற வேண்டியது இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் முதற்கடமையாக உள்ளது. பல்லேகம தேரர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் இன்று சர்வதேச ரீதியாக பேசப்படும் செய்தியாக உள்ளது. இது இலங்கையில் பெளத்தத்தை காத்து வரும் மகா சங்கத்தினருக்கும் பெளத்த பீடங்களுக்கும் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளன. எந்த வகையிலாவது காவி உடையின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை அகற்றும் ஒரு முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளதாகவே தெரிகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட பெளத்த பிக்குகளின் காவி உடை நிரந்தரமாக களையப்படும் என்ற விடயம் கட்டாயமாக்கப்பட்டால் அதற்கு ஞானசார போன்ற தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
- சிவலிங்கம் சிவகுமாரன்


