பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது!
தாயக எழுச்சிப் பாடல் சம்பந்தமாக கைதான கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகருக்கு பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு சிறை உத்தரவு
சிங்களப் பேரினவாதம் என்பது காலங்காலமாகத் தமிழர்களைச் சம உரிமையுள்ள குடிமக்களாகப் பார்ப்பதற்கு மறுத்து அவர்களை இரண்டாம் தர மக்களாகவே வைத்திருக்க முயல்கிறது என்பதை வரலாறு நமக்குத் தொடர்ந்து உணர்த்தி வருகிறது. எமது உரிமைகளும், கலைகளும், குரல்களும் நசுக்கப்படும் விதம் இதற்கு நேரடிச் சான்றாகும்.
தமிழர்கள் தங்களை விட அறிவிலும், திறமையிலும், உழைப்பிலும் உயர்ந்துவிடக் கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதம் எப்போதும் கண்ணும்கருத்துமாக இருக்கிறது.
போருக்குப் பின்னரான இன்றைய சூழலிலும் கூட, வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவமயமாக்கல், தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்புகள், தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரில் நடக்கும் பௌத்தமயமாக்கல் என்பன தமிழர்களின் தனித்துவத்தை அழித்து அவர்களைத் தங்களுக்குக் கீழ் வைக்கவே முயல்கின்றன.
எமது கலைஞர்கள், எம் மக்களின் உண்மையான வரலாற்றையும் வலியையும் பாடும்போது, அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திக் கைது செய்யும் பேரினவாத அரசு தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் பேரினவாதக் கும்பல்களுக்குச் சட்டபூர்வப் பாதுகாப்பு அளிக்கிறது.
ஈழத்தமிழினத்தின் வரலாற்றுத் துயரையும், தீராத வலியையும், தேசியம் சார்ந்த உரிமைகளையும் தன் குரலால், பாடலால் உலகிற்கு உரத்துச் சொன்ன ஓர் வன்னி இளைஞன் இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களின் ஆன்மாவைத் தொட்ட ஒரு கலைஞனின் குரல்வளையை நசுக்குவது என்பது ஒட்டுமொத்த இனத்தின் குரலையும் நசுக்குவதற்குச் சமம். ஆனால், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய நம் இனத்திற்குள் இன்னும் சில எட்டப்பர்கள் உலவிக் கொண்டிருப்பதுதான் எல்லாவற்றையும் விடப் பெருங்கொடுமை.
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்ட நிகழ்வை முன்னிறுத்தி, அதற்குத் தமிழ் மாணவர்கள்தான் காரணம் என்று நம்மவர்களில் சிலரே சிங்கள அரசுக்கு முந்திக்கொண்டு வக்காலத்து வாங்கி வருகின்றனர். பேரினவாத அரசுக்குத் தங்களைக் காட்டிக்கொடுக்கும் விசுவாசிகளாகக் காட்டிக்கொள்ளத் துடிக்கும் இவர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஒருபுறம் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களும், நினைவேந்தல் உரிமைகளும் அந்த மண்ணில் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன, ஒடுக்கப்படுகின்றன. மறுபுறம், ஒரு சிறிய சம்பவத்தைக் காரணம்காட்டிச் சொந்த இனத்து மாணவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் துடிக்கிறார்கள் நம்மவர் சிலர். இந்த வெசாக் கூடு யாரால் சேதப்படுத்தப் பட்டது என்பதற்கான எந்தவொரு சான்றும் இல்லை.
ஈழ மண்ணில் தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது அனைத்து வழிகளிலும் முடக்கப்பட்டுள்ளது. இன்றும் எமது மக்கள் தமது சொந்த மண்ணில் உரிமையற்ற, ஒடுக்கப்பட்ட ஓர் இனமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கலை வடிவிலும், அரசியல் வடிவிலும் போராட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். ஒரு இனத்தின் ஆயுதங்கள் மௌனிக்கப் பட்டால் அந்த இனத்தின் கவிஞர்களின் பேனாமுனைகளே கூரிய போர்வாளாக அதிகாரவர்க்கத்துற்கு அஞ்சியொடுங்காமல் வீசப்படும் பேராயுதம். இதுவே வரலாறு நெடுகிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொந்த இனத்திற்கு எதிராகச் சிங்களப் பேரினவாத அரசுக்கு முட்டுக் கொடுக்கும் இந்தத் கொடியவரின் செயல்கள்தான், மீண்டும் அந்த மண்ணில் தமிழர்கள் மீதான கைதுகளும், கடத்தல்களும், காணாமல் ஆக்கப்படுதல்களும் தங்கு தடையின்றி அரங்கேறுவதற்குக் கம்பளம் விரித்துக் கொடுக்கின்றன. எதிரி எம்மை ஒடுக்குவதை விட, எதிரியின் ஒடுக்குமுறைகளில் இருந்து எம்மை விடுவிப்பதை விட கூடவிருந்தே குழிபறிக்கும் இனத்துரோகிகளின் செயல்கள்தான் எமது விடுதலைப் பயணத்தை என்றும் பின்னோக்கி இழுக்கின்றன.
எமது உரிமைகளுக்காகவும், கைது செய்யப்பட்டுள்ள எமது இளைய தலைமுறைக் கலைஞர்களின் விடுதலைக்காகவும் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டிய தருணம் இது. சிங்கள அரசு எப்போதாவது தங்களைச் சமமாக நடத்தும் என்று நம்பி அவர்களுக்குப் பின்பாட்டுப் பாடும் தமிழர்கள் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். பேரினவாதத்திற்குத் தேவை தமிழர்களின் உரிமைகளோ அல்லது அவர்களின் வளர்ச்சியோ அல்ல மாறாக தங்களின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தப் பயன்படும் சில தமிழ் முகமூடிகள் மட்டுமே!
தமிழர்கள் தங்களின் சுயமரியாதையையும், தேசத்தையும், உரிமையையும் விட்டுக்கொடுத்துவிட்டு எவ்வளவுதான் சிங்களப் பேரினவாதத்திற்கு நல்வர்களாக இருந்தாலும், அது தமிழர்களை ஒருபோதும் தமக்குச் சமமாக நடத்தப் போவதே இல்லை. ஆயுதங்கள் மழுங்கடிக்கப்படலாம், அரசியல் தலைமைகள் விலைக்கு வாங்கப்படலாம் அல்லது மௌனிக்கப்படலாம். ஆனால், ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் கவிஞனும் கலைஞனும் பாடும் வரிகளை எந்தவொரு பேரினவாத அதிகாரத்தாலும் அத்தனை எளிதாக அழித்துவிட முடியாது.
அதனால்தான், "ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் கவிஞர்களே ஆகச்சிறந்த போராளிகள்" என்ற கூற்று காலத்தை வென்ற உண்மையாக நிற்கிறது. வரலாறு முழுக்க ஒடுக்குமுறையாளர்கள் எப்போதும் முதலில் பயந்தது கவிஞர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும்தான். நடாசா தம்போ போன்ற தென்னாப்பிரிக்கக் கவிஞர்கள் நிறவெறிக்கு எதிராகப் பாடியபோது அரசாங்கம் நடுங்கியது.
பாலஸ்தீனத்தின் மஹ்மூத் தர்விஷ் தன் கவிதைகளால் உலகத்தையே உலுக்கினார். ஒடுக்குமுறையைக் கண்டு அஞ்சி வார்த்தைகளை ஒளித்துக்கொண்டு பாடுவது கலை அல்ல அது அதிகாரத்திற்குச் செய்யும் சமரசம். கவிஞனும் கலைஞனும் சமூகத்தின் கண்ணாடி. சுற்றிலும் அநீதியும், ஆக்கிரமிப்பும், கைதுகளும் நடக்கும்போது, அதற்குள் சாமர்த்தியம் தேடுபவன் கவிஞனாகவோ, கலைஞனாக இருக்க முடியாது.
தன் மக்களின் வலியை, அவலத்தை, இழப்பை அப்படியே பிரதிபலிக்கும் துணிச்சல் மிக்க கவிஞர்களும், கலைஞர்களுமே உண்மையான போராளிகள். அவர்கள் சிறைச்சாலைகளுக்கு அஞ்சுவதில்லை. சங்கீதனை பேருனவாதம் சிறையில் அடைக்கலாம். ஆனால், அவன் உணர்வுகளையும், விடுதலைத் தாகத்தையும், தாயகக் கனவையும் உலகின் எந்தச் சிறைச்சாலைக்குள்ளும் பூட்டி வைக்கவே முடியாது.
"பேனா முனைகள் துப்பாக்கி முனைகளை விடக் கூர்மையானவை. ஏனென்றால், துப்பாக்கி உடலைக் கொல்லும். கவிதை ஒரு இனத்தின் அடிமைத்தனத்தைக் கொன்று, அதற்குள் விடுதலையுணர்வை விதைக்கும்." சங்கீதா அதிகாரத்தின் இரும்புக் கரங்கள் உன்னைச் சிறைப்படுத்தியிருக்கலாம், ஆனால் உன் குரலின் அதிர்வுகளை
அவர்களால் ஒருபோதும் பூட்டி வைக்க முடியாது! வெல்வாய் சங்கீதன்! எமது வன்னி மண்ணின் துணிச்சல் மிக்க இளங் கலைஞனே! நீ கலங்காதே!
சிறைச்சாலைகள் கவிஞர்களுக்குப் புதியவை அல்ல. உலக வரலாற்றில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பாடிய ஆகச்சிறந்த கவிஞர்கள் அனைவரும் சிறைக் கூடங்களைக் கடந்தே வந்திருக்கிறார்கள். உனது இந்தத் தியாகமும், துணிச்சலும் வீண் போகாது. ஒருபோதும் அடக்குமுறையாளரைக் கண்டு அஞ்சுவிடாதே நீ தமிழன்டா ! சுயமரியாதையும் இனவுணர்வும் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் உனக்கு பின்னால் நிற்கின்றோம். அஞ்சாதே தமிழா!
துரோகங்களை வீழ்த்துவோம்! எமது இனத்தின் உரிமைகளைக் காப்போம்! வன்னியூர் சங்கீதனுன் விடுதலைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!
- வன்னியூர் பூங்குழலி


