13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தயார் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
நாட்டின் இறையாண்மையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க அனைவரும் பிளவுபடாமல் கைகோர்க்க வேண்டும். வெறுப்பும் பழிவாங்கலும் இல்லாத அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
முற்போக்கு தேசியவாதத்தை மையமாகக் கொண்டு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அதற்குத் தடையாகக் காணப்படும் விடயங்களை நீக்கி அனைவரையும் ஒன்றிணைத்த பொதுவான இணக்கப்பாட்டை நோக்கிச் செல்லவும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய சமாதான பேரவையின் 2026 வருடாந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அண்மைய ஐந்து வருட காலத்திற்குள் பல்வேறு சோகச் சம்பவங்களை எதிர்கொண்ட நமது நாட்டு மக்களுக்கு, இப்போது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தாலும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்டு அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக நாட்டை வலுப்படுத்த வேண்டும். சமூகத்தில் உருவாகும் சிக்கல்களைத் தீர்க்க மனித இனம் கைக்கொண்ட உயர்ந்த முறைகள் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டி, சமாதானமாகவும் புரிதலுடனும் வாழ அவர்களை வலுப்படுத்த வேண்டும்.
பல்வேறு சமூகங்களின் பின்னணிகள், மதங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 9 மாகாணங்கள் மற்றும் 25 மாவட்டங்களிலும் வாழும் மக்கள் நட்புறவு, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமத்துவமாக நடத்தப்பட்டு, அனைவருக்கும் சௌபாக்கியத்தை உதயமாக்கும் அனைவரையும் இணைத்துக் கொண்ட பயணம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பேரிடர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது மதத்தையோ இலக்கு வைத்து நடப்பதில்லை. நமது நாட்டு மக்கள் எந்தக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் பேரிடர் காலங்களில் மனிதாபிமானத்துடன் ஒன்றிணைகின்றனர். இந்த மனிதாபிமானம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்பட வேண்டும்.
நாட்டின் இறையாண்மையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க அனைவரும் பிளவுபடாமல் கைகோர்க்க வேண்டும். வெறுப்பும் பழிவாங்கலும் இல்லாத அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க அடக்குமுறைகளுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்தி, நடுநிலையான நிலைப்பாட்டின் மூலம் தீர்வுகளை எட்ட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தில் தெளிவான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42 வீதமான பங்களிப்பை வழங்கும் போது, வடக்கு மாகாணம் 4 வீதத்தையும், கிழக்கு மாகாணம் 5 வீதத்தையுமே வழங்குகின்றன. இந்த நிலையை சமநிலைக்கு கொண்டு வந்து, மேல் மாகாணத்தில் காணப்படும் வளங்கள் ஏனைய மாகாணங்களுக்கும் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதியும் நியாயமும் கிட்டும்.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, தேசிய வருமானத்தில் செல்வந்த தரப்பினர் 20 வீதத்திற்கும் அதிகமான பங்கை அனுபவிக்கும் போது, ஏழ்மை நிலையில் இருப்போர் 5 வீதமான பங்கையே அனுபவிக்கின்றனர். இத்தகைய பொருளாதாரப் பிளவுகளும் எம்மத்தியில் வெறுப்பை உருவாக்கும். இன, மத, பொருளாதார ரீதியாக நாம் பிளவுபட்டால் நாடாக முன்னேற முடியாது. நீதியின் அடிப்படையில் நாட்டின் வளங்களை அனைவருக்கும் சமனாகப் பகிர்ந்தளிக்கும் சௌபாக்கிய நிலையை நாம் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.
அரசியல் அதிகாரமும் பொருள் வளமும் இன்றி, குரலற்று அமைதி காத்திருக்கும் பெரும்பாலான மக்கள் சார்பாக நாம் அனைவரும் முன்நிற்க வேண்டும். இவர்களுக்காக ஒரு தேசிய நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட வேண்டும். பங்கேற்பு மற்றும் ஜனநாயகம் வழியாகவே ஒரு நாடு முன்னோக்கிச் செல்லும். எனவே, பெரும்பான்மை சிறுபான்மை என்ற பேதங்களை மறந்து, நடைமுறையில் மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்கி ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் நாம் முன்னோக்கி அடியெடுத்து வைப்போம் என்றார்.


