வீட்டில் ரொக்கப் பணம் இல்லையா? பெரிய ஆபத்தில் சிக்குவீர்கள்! - ஐரோப்பிய மத்திய வங்கியின்எச்சரிக்கை!!
"அமைதியாக இருங்கள், பணத்தை எடுத்துச் செல்லுங்கள்" (Gardez votre calme et emportez de l’argent liquide)
வீட்டில் ரொக்கப் பணம் இல்லையா? பெரிய ஆபத்தில் சிக்குவீர்கள்! - ஐரோப்பிய மத்திய வங்கியின்எச்சரிக்கை!!
பிரஸ்ஸல்ஸ்: "கிரெடிட் காட் , ஒன்லைன் பரிவர்த்தனை போதும், கையில் எதற்குப் பணம்?" என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியானால், ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) இந்த எச்சரிக்கை உங்களுக்கானதுதான். வரவிருக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க, ஒவ்வொரு வீட்டிலும், நபர் ஒருவருக்குக் குறைந்தபட்சம் 70 முதல் 100 யூரோ வரை ரொக்கப் பணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று ஐரோப்பிய மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
"அமைதியாக இருங்கள், பணத்தை எடுத்துச் செல்லுங்கள்" (Gardez votre calme et emportez de l’argent liquide) என்ற தலைப்பில் வங்கி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, ஐரோப்பிய மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதற்காக இந்த திடீர் அறிவுரை?
காரணம் மிகவும் எளிமையானது ஆனால் முக்கியமானது. ஒருவேளை நீங்கள் வாழும் நகரம் முழுவதும் மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டாலோ அல்லது வங்கி அமைப்புகள்மீது தீவிரமானசைபர் தாக்குதல் நடத்தப்பட்டாலோ என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான யூரோக்கள் டிஜிட்டல் எண்களாக முடங்கிவிடும். கடைகளில் வங்கி அட்டைகளைத் தேய்க்க முடியாது, ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாது.
அந்த நேரத்தில், உங்கள் கையில் இருக்கும் இந்தச் சிறிய ரொக்கப் பணம்தான் உங்களைக் காப்பாற்றும். "மிகப்பெரிய அமைப்பு ரீதியான சீர்குலைவிலிருந்து தப்பிக்க, இது ஒரு குறைந்த செலவிலான சிறந்த பாதுகாப்பு" என்று ஐரோப்பிய மத்திய வங்கி ஆணித்தரமாகக் கூறுகிறது.
எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்?
நெதர்லாந்து, ஒஸ்ரியா, பின்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் மக்களை இதேபோல அறிவுறுத்தியுள்ளன. அதன் அடிப்படையில், ஒரு நபருக்கு 70 முதல் 100 யூரோ வரை ரொக்கமாக வைத்திருப்பது அவசியம் என்று அறிவித்துள்ளன . இந்தத் தொகை, ஒரு நெருக்கடி காலத்தில் சுமார் 72 மணி நேரத்திற்கு (3 நாட்கள்) அத்தியாவசியத் தேவைகளை (உணவு, தண்ணீர், மருந்து) பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும்.
டிஜிட்டல் மயம் நம்பகமானது இல்லையா?
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நமது வாழ்க்கையை எளிதாக்கியிருந்தாலும், அவை "குறைபாடற்றவை அல்ல" என்று வங்கி எச்சரிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிரான்சின் சில பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டின்போது, கார்டு இயந்திரங்களும், ஏடிஎம்களும் செயலிழந்தன. அந்த நேரத்தில், கையில் ரொக்கப் பணம் வைத்திருந்தவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க முடிந்தது.


