மூன்று வாரத்திற்கு முன் வேவு பார்த்த சுரேஸ் சலே! - ஆனந்த விஜேபால
கைது செய்யப்பட்ட நாள் முதல் இதுவரையில் சுரேஷ் சலே விசாரணை நடவடிக்கைகளுக்கு எவ்விதமான சாதகமான ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னர் சுரேஸ் சலே, முஸ்லிம் இனத்தை சேர்ந்த மூவரை நீர்கொழும்பு பிரதேசத்துக்கு அனுப்பி,கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் இடம்பெறும் வழிபாடுகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை போன்ற முக்கிய தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளார்.சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளினால் ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தும், அந்தப் புலனாய்வுத் தகவலை இராணுவக் கூட்டுப் புலனாய்வுப் பிரிவு அலட்சியம் செய்ததன் காரணமாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. சுரேஸ் சலே இந்த குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதுடன், தேவையான ஒத்தாசைகளை வழங்கியுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நாள் முதல் இதுவரையில் சுரேஷ் சலே விசாரணை நடவடிக்கைகளுக்கு எவ்விதமான சாதகமான ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. விபரங்களை மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள விஞ்ஞானபூர்வ சாட்சிகள் மற்றும் தொலைபேசி சாட்சிகளின்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சூழ்ச்சிகளில் அவர் தொடர்புபட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.விசாரணைகள் தொடரும், எந்தவொரு உண்ணா விரதத போராட்டத்துக்கும், சத்தியாக்கிரகத்திற்காகவும் நாங்கள் விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். இதனுடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், அவருக்கு துன்புறுத்தல்கள் இழைக்கப்படுவதாகவும் சிலரால் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு, மக்களை தவறாக திசை திருப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதற்கு முன்னரான மற்றும் சம்பவத்திற்கு பின்னரான சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில் வெளிவராத விடயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள், அந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள்,அதனுடன் தொடர்புடைய தரப்பினரை அடையாளம் காண்பதற்காக சமூக மற்றும் மத மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஆயரான ஜுட் வர்ண சில்வாவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய பல்வேறு வழிகளிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பில் கோட்டை நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளின் போது முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின், பணிப்பாளரும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளருமான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே என்பவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை பயன்படுத்தி சூழ்ச்சிகளை செய்துள்ளதாக நம்பகத்தகுந்த விடயங்கள் வெளியாகியுள்ளன.
சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த மூவரை நீர்கொழும்பு பிரதேசத்துக்கு அனுப்பி, கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெறும் வழிபாடுகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை போன்ற முக்கிய தகவலகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி சுரேஷ் சலேவினால் நீர்கொழும்பில் கத்தோலிக்க தேவாலயங்களில் முக்கிய தகவல்களை சேகரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் இனத்தை சேர்ந்த நபரின் புகைப்படத்தை சாட்சியாளரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படைவாதிகளின் புகைப்படங்களிடையே இருந்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையாளர் என்றும், ஆனால் அவர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் காணாமல் போயுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பயங்கவாதி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த புலனாய்வுத் தகவல் வழங்குநர் ஒருவர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தும், அந்தப் புலனாய்வுத் தகவலை இராணுவக் கூட்டுப் புலனாய்வுப் பிரிவு அலட்சியம் செய்ததன் காரணமாக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்ற ஒன்று என அந்தத் தகவல் வழங்குநர் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்ததன் பின்னர், அவரை சட்டவிரோதமான முறையில் கைது செய்து தடுத்து வைத்திருந்து,பின்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை. விடுவிக்கப்பட்டதன் பின்னர், துவான் சுரேஷ் சலே , அந்தத் தகவல் வழங்குநரை கொழும்பு கலதாரி ஹோட்டலுக்கு வரவழைத்து சந்தித்து,அவருடன் விபரங்களைக் கலந்துரையாடி அவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை விசாரணைக்குரிய முறைப்பாட்டிற்கு அமைய, அசாத் மௌலானா என்பவரால் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தப்பட்ட விபரங்களின்படி, துவான் சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்துவதற்குத் தேவையான பின்னணி திட்டமிடப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, பெருமளவிலான மக்களைக் கொலை செய்து, பலருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தி, பெருமளவிலான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தி, நாட்டின் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, 2019.04.21 உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொடூரமான பயங்கரவாதச் செயற்பாடுகள் குறித்து, நாட்டின் இராணுவ புலனாயவு பிரிவின் பிரதானியாகவும் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானியாகவும் செயற்பட்ட சிரேஷ்ட அதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே என்ற சந்தேக நபர் முன்கூட்டியே அறிந்து சதி செய்துள்ளார் என்பதும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தாக்குதலின் அதிதீவிர உணர்வுபூர்வமான மற்றும் சர்ச்சைக்குரிய விபரங்கள் வெளிவருவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் வெளிப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுரேஷ் சலே குறித்த குற்றசெயலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்து உடந்தையாக இருந்துள்ளமை மற்றும் அக்கொடூரமான செயற்பாடுகளைச் செய்வதற்கு அக்குழுவினரை வழிநடத்திய நபர்கள், குழுக்கள் அல்லது தரப்பினர் வெளிப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்குச் செயற்பட்டுள்ளார் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட விபரங்களின் அடிப்படையில், 2026.02.25 அன்று பேலியகொட, நீர்கொழும்பு வீதியில் வைத்து, சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபருக்குப் பின்வரும் வாய்ப்புகள் விசாரணை அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளன. சட்டத்தரணியுடன் கலந்துரையாடுவதற்கும் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை அவர் வசிக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்று, மனைவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுக்குக் காண்பித்து, கைது செய்வதற்கான காரணங்களை விளக்கி, கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்காக வழங்கப்படும் அத்தாட்சிப் பத்திரம் சந்தேக நபரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரை கொழும்பு சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 7(1) பிரிவின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவல் அனுமதியைப் பெற்றுக்கொண்டதுடன், அதன் பின்னர் அச்சட்டத்தின் 9(1) பிரிவின் சட்ட விதிகளுக்கு அமைவாக 90 நாட்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுகின்றமை குறித்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன்,அவ்வழக்கின் 3 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, வழக்கின் விசாரணைத் தினங்களில் தடுப்புக் காவலில் இருந்து சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார்.
இதேவேளை தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போது சந்தேக நபருக்குத் தேவையான வசதிகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புதன் கிழமையிலும் சட்டத்தரணியைச் சந்தித்துத் தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சந்தேக நபர் தனது மனைவி மற்றும் தாய் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையிலும் சந்தேக நபர் தனது நெருங்கிய உறவினர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு,உடைகள், பானங்கள் போன்றவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து, சிறைக்கூடத்தில் இருந்த சலேவை பார்வையிட்டுள்ளார். நீதவான் சந்தேக நபரை சிறைக்கூடத்தில் பார்வையிட்ட சந்தர்ப்பங்களில், தான் அநீதியான முறையில் நடத்தப்பட்டதாகவோ அல்லது சித்திரவதை செய்யப்பட்டதாகவோ சந்தேக நபரால் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடும் நீதிவானிடமோ அல்லது வேறு எந்தவொரு அதிகாரியிடமோ சமர்ப்பிக்கப்படவில்லை.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடுப்பதற்காக 2026.06.03 அன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் விளக்கமளிப்பை சமர்ப்பித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டமை மற்றும் இச்சந்தேக நபரைத் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக தடுப்புக் காவல் உத்தரவை 2026.05.27 இலிருந்து மேலும் 90 நாட்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் சந்தேக நபரான சுரேஷ் சலே அதுவரை தான் நடந்துகொண்ட முறையை முழுமையாக மாற்றியுள்ளார்.விசாரணைக்கு முற்றிலும் பாதகமான முறையிலும்இ விசாரணையை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்குத் தடையை ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு, 2026.06.05 அன்று இரவிலிருந்து உணவைத் தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
சந்தேக நபர் அவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததன் பின்னர், 2026.06.06 அன்று அவரது நெருங்கிய உறவினர்களான சகோதரர் மற்றும் மகனால் கொண்டு வரப்பட்ட உணவையும் அவர் நிராகரித்துள்ளார். மறுநாள் சந்தேக நபரின் மனைவியின் கோரிக்கைக்கு அமைய,மனைவி,சகோதரர் மற்றும் மகனைச் சந்தித்துக் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அங்கேயும் சந்தேக நபர் உணவை உட்கொள்வதை நிராகரித்துள்ளார்.
சந்தேக நபர் இவ்வாறு திட்டமிட்ட முறையில் உணவை நிராகரித்துச் செயற்பட்டதன் காரணமாக, அவர் அவசரமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டதன் பின்னர், 14 ஆம் இலக்க வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சையளிக்கப்பட்டார். பின்னர் 2026.06.08 முதல் இதுவரையில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் 42 வது வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிழலயில், கைது செய்யப்பட்ட நாள் முதல் இதுவரையில் சுரேஷ் சலே என்ற சந்தேக நபர் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவ்விதமான சாதகமான ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என்பதுடன், கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நவீன அப்பிள் கைபேசியின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக அதனுள் நுழைவதற்குக் கோரப்பட்ட கடவுச்சொல்லையோ அல்லது கைது செய்யப்பட்ட தினத்தில் அவரது வீட்டில் சோதனையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்ட மடிக்கணினியின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குக் கோரப்பட்ட கடவுச்சொல்லையோ இதுவரையில் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. இதன் மூலம் சந்தேக நபர் விசாரணைக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது விபரங்களை மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்விசாரணையின் சிக்கல்தன்மை, சர்ச்சைக்குரிய தன்மை மற்றும் உணர்வுபூர்வமான தன்மை காரணமாக விசாரணைக்குரிய அனைத்து விபரங்களையும் வெளிப்படுத்த முடியாது என்பதையும், மேலதிக விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.
எவ்வாறாயினும் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள விஞ்ஞானபூர்வ சாட்சிகள் மற்றும் தொலைபேசி சாட்சிகளின்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சூழ்ச்சிகளில் அவர் தொடர்புபட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது. முன்னரே அறிந்திருந்தமை உறுதியாகியுள்ளது. இதன்படி விசாரணைகள் தொடரும், எந்தவொரு உண்ணா விரதத்திற்கும், எந்தவொரு சத்தியாக்கிரகத்திற்காகவும் நாங்கள் விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். இதன்படி இதனுடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.


