ஐரோப்பாவில் அதிரடியாக அமலாகும் புதிய அகதிகள் சட்டம்: இனி தஞ்சம் கோருவோரின் நிலை என்ன?
ஐரோப்பிய எல்லைகளைச் சட்டவிரோதமாக வந்தடையும் அகதிகளுக்கு இனி கட்டாயப் பரிசோதனை (Filtrage) நடைபெறும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய 'அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம்' (Pacte européen sur la migration et l'asile) இன்று (ஜூன் 12, 2026) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இது அகதிகள் தொடர்பான ஐரோப்பாவின் அணுகுமுறையில் ஒரு மாபெரும் திருப்பமாகும். தஞ்சம் கோரும் நடைமுறைகளை வேகப்படுத்துதல், அகதிகளின் சொந்த நாடுகளைப் 'பாதுகாப்பானவை' என வகைப்படுத்துதல் மற்றும் நிராகரிக்கப்படுவோரை உடனடியாக நாடுகடத்துதல் ஆகிய அதிரடி மாற்றங்களை இந்தச் சட்டம் உள்ளடக்கியுள்ளது. இதனால் இன்று முதல் அகதிகளின் பயணத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன.
எல்லைகளில் இனி என்ன நடக்கும்? விரைவுபடுத்தப்படும் விசாரணைகள்!
ஐரோப்பிய எல்லைகளைச் சட்டவிரோதமாக வந்தடையும் அகதிகளுக்கு இனி கட்டாயப் பரிசோதனை (Filtrage) நடைபெறும். அதிகபட்சம் 7 நாட்களுக்குள் அவர்களின் அடையாளம், பாதுகாப்பு அபாயம் மற்றும் சுகாதார நிலை ஆகியவை பரிசோதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து சில குறிப்பிட்ட அகதிகளுக்கு 'விரைவுபடுத்தப்பட்ட எல்லை விசாரணை' (Procédure accélérée) நடத்தப்படும். ஐரோப்பாவில் ஏற்கனவே தஞ்சம் கிடைக்க மிகக் குறைந்த வாய்ப்புள்ள (20%-க்கும் குறைவான) நாடுகளைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள் ஆகியோருக்கு இந்த விரைவு விசாரணை பொருந்தும்.
இந்த விசாரணை முடியும் வரை (அதிகபட்சம் 12 முதல் 16 வாரங்கள்), அவர்கள் ஐரோப்பிய எல்லைக்குள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் (Fiction de non-entrée). இது எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களிலேயே அவர்களைத் தங்கவைக்கும் நடைமுறையாகும்.
'பாதுகாப்பான சொந்த நாடுகள்' (Pays d'origine sûrs) என்றால் என்ன?
ஜனநாயக ரீதியாகவும், அடிப்படை உரிமைகள் மதிக்கப்படும் வகையிலும் நிலையாக உள்ள நாடுகள் 'பாதுகாப்பான நாடுகள்' என அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பொதுவாக சர்வதேசப் பாதுகாப்பு (அகதி அந்தஸ்து) தேவையில்லை எனக் கருதப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதற்கும் பொதுவான 7 பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ளது. அவை: இந்தியா, வங்கதேசம், கொலம்பியா, எகிப்து, கொசோவோ, மொராக்கோ மற்றும் துனிசியா.
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தஞ்சம் கோரினால், அவர்களின் விண்ணப்பங்கள் மிக விரைவாக நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர்கள், "ஏன் எனது சொந்த நாடு எனக்குப் பாதுகாப்பானதல்ல?" என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் தனிப்பட்ட முறையில் நிரூபித்தால் மட்டுமே தஞ்சம் கிடைக்கும். பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தப் புதிய பட்டியலோடு, தங்களின் பழைய தேசியப் பட்டியலையும் (மொத்தம் 13 நாடுகள்) இணைத்துப் பயன்படுத்த உள்ளது.
சர்ச்சைக்குரிய 'பாதுகாப்பான மூன்றாம் நாடுகள்' (Pays tiers sûrs) விதி
இந்தச் சட்டத்தின் மிகக் கடுமையான மற்றும் விமர்சனத்திற்கு உள்ளான பகுதி இதுதான். ஒரு அகதி தனது சொந்த நாட்டிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் வழியில், வேறு ஏதேனும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கடந்து வந்திருந்தால் (உதாரணமாக ஒரு இலங்கை அகதி ஐரோப்பா வரும் வழியில் வேறு ஒரு பாதுகாப்பான ஆசிய /ஆபிரிக்க நாட்டைக் கடப்பது), அவரை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம்.
"நீங்கள் ஏன் கடந்து வந்த அந்தப் பாதுகாப்பான மூன்றாம் நாட்டிலேயே தஞ்சம் கோரவில்லை?" எனக் கேட்டு, ஐரோப்பாவில் அவர் அளிக்கும் விண்ணப்பத்தை முழுமையாக விசாரிக்காமலேயே நிராகரித்து, அவரை அந்த மூன்றாம் நாட்டிற்கே திருப்பி அனுப்ப இந்தப் புதிய விதி வழிவகை செய்கிறது. இதற்கு முன்பு அகதிக்கும் அந்த மூன்றாம் நாட்டிற்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது; இனி வெறும் 'பயண வழி' (Transit) அல்லது ஐரோப்பாவின் ஒப்பந்தம் இருந்தாலே போதுமானது.
உடனடி நாடுகடத்தலும் 'திரும்பும் மையங்களும்'
இனி அகதிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதைத் தொடர்ந்து உடனடியாக நாடுகடத்தும் உத்தரவும் (Décision de retour) பிறப்பிக்கப்படும். இரண்டுக்கும் தனித்தனி நடைமுறைகள் இனி இருக்காது. அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள். மேலும், ஜூன் 1-ஆம் திக தி ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு, விரைவில் அமலுக்கு வரவுள்ள மற்றொரு புதிய விதியின்படி, அகதிகளை ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள 'திரும்பும் மையங்களுக்கு' (Hubs de retour) அனுப்பவும், ஒத்துழைக்க மறுக்கும் அகதிகளை 24 மாதங்கள் வரை காவலில் வைக்கவும் (Rétention) ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் கவலையும், மாறாத விதிகளும்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அதிரடி மாற்றங்கள், அகதிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக மனித உரிமை அமைப்புகள் (NGOs) கடுமையாக விமர்சித்துள்ளன. விசாரணைகளை விரைவுபடுத்துகிறோம் என்ற பெயரில், அகதிகளை அவர்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாத மூன்றாம் நாடுகளுக்கு அனுப்புவது மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனினும், சில அடிப்படை விதிகள் மாறவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது: தஞ்சம் கோரும் அடிப்படை உரிமை தொடரும். 'பாதுகாப்பான நாட்டைச்' சேர்ந்தவராக இருந்தாலும் அவர் விண்ணப்பிக்கலாம். ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் அபாயம் உள்ள நாடுகளுக்கு அவரைத் திருப்பி அனுப்பக் கூடாது என்ற 'நிராகரிக்காமை' (Non-refoulement) கொள்கை தொடர்ந்து மதிக்கப்படும். துணையின்றித் தனியாக வரும் சிறுவர்களுக்கு (Mineurs non accompagnés) சிறப்புப் பாதுகாப்புகள் தொடர்ந்து வழங்கப்படும்.
- சிவா சின்னப்பொடி


