தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய தெற்காசியப் பிரிவின் தலைவர் வைட்லியோடு சாணக்கியன் எம்.பி.பேச்சு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பலமுறை உறுதியளித்த போதிலும், குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரச் சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்ஸ் வைட்லியை பிரஸ்ஸில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை மற்றும் அதன் கீழ் தமிழ் சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சாணக்கியன் தனது கடுமையான கவலையை வெளியிட்டதுடன், குறித்த கைதானது இலங்கையின் கருத்துச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சங்கீத்சனின் கைது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அனுப்பிய கடிதத்தை சாணக்கியன் வைட்லியிடம் கையளித்ததுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையையும் மீண்டும் வலியுறுத்தினார்.
இச்சட்டத்தை நீக்குவதற்கு அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பலமுறை உறுதியளித்த போதிலும், அது தொடர்ந்தும் குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கையின் கடப்பாடுகளின் பின்னணியில், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சாணக்கியன் கவனத்திற்குக்கொண்டு சென்றார்.
சங்கீத்சனின் தடுப்புக்காவல் உட்பட, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நபர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதானது, ஜி.எஸ்.பி பிளஸ் தகைமைக்கு அடிப்படையாக அமையும் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புக்களை இலங்கை முறையாகப் பின்பற்றுகிறதா என்ற கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்தச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம், சட்ட ரீதியான நடைமுறைகள் மற்றும் ஜனநாயக ஆட்சிமுறை ஆகியவற்றில் இலங்கை கொண்டுள்ள கடப்பாடுகளை சீர்குலைப்பதாக உள்ளதென்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத்தேர்தல்களை அவசரமாக நடத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்கு அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயகப் பிரதிநிதித்துவம் ஆகியவை இன்றியமையாதவை என்று சாணக்கியன் வலியுறுத்தினார்.
அத்துடன் தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டதுடன், எதிர்கால அரசியலமைப்பு ஏற்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம் மற்றும் அபிலாஷைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை கவனத்துக்கு கொண்டு சென்ற சாணக்கியன், காணாமல்போன தங்களது அன்புக்குரியவர்களுக்கான உண்மை மற்றும் நீதியைத்தேடி தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் போராட்டங்களைச் சுட்டிக்காட்டினார். சர்வதேசத் தரத்திற்கு இணங்க பொறுப்புக்கூறல், நம்பகமான உண்மை கண்டறியும் வழிமுறைகள் மற்றும் நீதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடரும் காணி ஆக்கிரமிப்பு குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பெருமளவிலான காணிகள் இன்னும் இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், அவற்றை உடனடியாக விடுவித்து உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்தை எளிதாக்குவதற்கும், வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் கண்ணியத்துடன் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் காணி விடுவிப்பு மிகவும் அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவலைகளை கையாள்வதில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை சாணக்கியன் வலியுறுத்தியதுடன், இந்த விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான அக்கறையையும் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.


