"வடதாரகை" படகு மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துர்ள்ளது!
100 பயணிகள் மட்டுமே படகில் ஏற்றப்பட்டதால், ஏராளமானோர் பயணிக்க முடியாமல் கரையிலேயே விடப்பட்டனர்.
நெடுந்தீவு மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான கடற்போக்குவரத்து சேவையில் ஈடுபடும் "வடதாரகை" படகு மீண்டும் தனது சேவையை இன்று (15) ஆரம்பித்த நிலையில், பயணிகளுக்கான இருக்கை வரம்பு காரணமாக பலர் பயணிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர். திங்கட்கிழமையான இன்று வேலை மற்றும் அவசர தேவைகளுக்காக நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மாவிலி இறங்குதுறைக்கு வந்திருந்தனர். எனினும், வழமையான நடைமுறைக்கு அமைய 100 பயணிகள் மட்டுமே படகில் ஏற்றப்பட்டதால், ஏராளமானோர் பயணிக்க முடியாமல் கரையிலேயே விடப்பட்டனர்.
இதனால் வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் மாவிலி இறங்குதுறையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தனியார் படகுகள் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறான நெரிசல் அல்லது பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் பாதிக்கப்படவில்லை என அங்கிருந்த பயணிகள் தெரிவித்தனர்.
நெடுந்தீவு கடற்போக்குவரத்தில் சேவையாற்றி வந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான "வடதாரகை" படகு, திருகோணமலையில் அமைந்துள்ள கப்பல் திருத்துமிடத்தில் பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அண்மையில் காங்கேசந்துறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி, நேற்று (14) காங்கேசந்துறையிலிருந்து நெடுந்தீவுக்கு வந்தடைந்த வடதாரகை, இன்று முதல் மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ளது. கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி திருத்தப் பணிகளுக்காக திருகோணமலை நோக்கிப் புறப்பட்ட வடதாரகை படகு, பெப்ரவரி 17ஆம் திகதி அங்கு சென்றடைந்து கடற்படை படகுகள் திருத்தும் தளத்தில் பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


