கம்யூனிஸ்ட் பைத்தியம்' என்று விமர்சித்துவிட்டு மம்தானியைச் சந்திக்கும் ட்ரம்ப்!
கும்டிக்கரணம் போடும் ட்ரம்ப்.
`கம்யூனிஸ்ட் பைத்தியம்' என்று விமர்சித்துவிட்டு மம்தானியைச் சந்திக்கும் ட்ரம்ப் - ஏன் இந்த மாற்றம்?
நியூயார்க் நகர மேயராகத் தேர்வாகியிருக்கும் ஜோஹ்ரான் மம்தானியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். ஆனால், மம்தானி மேயராகத் தேர்வான பிறகு, அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தரப்பு தெரிவித்திருக்கிறது. மம்தானியும் ட்ரம்ப்பைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் நியூயார்க் நகர மேயர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோஹ்ரான் மம்தானி வெற்றிபெற்று, நியூயார்க் நகரத்தின் மேயராகத் தேர்வாகியிருக்கிறார். மேயர் வேட்பாளராக மம்தானி பெயரை ஜனநாயகக் கட்சி அறிவித்ததிலிருந்து, அவரை கடுமையாக விமர்சித்துவந்தார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். ‘100 சதவிகிதம் கம்யூனிஸ்ட் பைத்தியம்’ என்றெல்லாம் மம்தானியை ட்ரம்ப் விமர்சித்தார்.
அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் கடும் எதிர்ப்புக்கும் மம்தானி ஆளானார். ஒரு ஜனநாயக சோசலிசவாதியான மம்தமானி, ‘செல்வந்தர்களால்தான், சமத்துவமின்மை நிலவுகிறது. வாடகை உயர்வைக் கட்டுப்படுத்துவது, இலவச பொதுப் பேருந்து சேவை வழங்குவது, அனைவருக்குமான குழந்தைப் பராமரிப்பு சேவையை வழங்குவது, பெரும் செல்வந்தர்கள் மீதான வரிகளை உயர்த்துவது போன்ற திட்டங்கள் மம்தானியிடம் இருக்கின்றன. ஆகவே, மம்தானியைப் பார்த்து செல்வந்தர்கள் அஞ்சினர்... அவர் மேயராக வந்துவிடக் கூடாது என்ற பதற்றத்திலும் அவர்கள் இருந்தனர். ஆனால், தேர்தலில் வெற்றிபெற்று மேயராகிவிட்டார் மம்தானி.
கடந்த பல மாதங்களாகவே மம்தானியை தொடர்ச்சியாக விமர்சித்துவந்தார் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ட்ரம்ப். ஆனால், தற்போது மம்தானி மேயராக வெற்றிபெற்ற பிறகும், பழைய நிலைப்பாட்டிலேயே இருப்பது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு ட்ரம்ப் வந்திருக்கிறார். நியூயார்க் நகர மேயருடன் பேசவிருப்பதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) ட்ரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில், அதிபருடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் மம்தானி பேசியிருக்கிறார். மம்தானியும், ட்ரம்பும் தொலைபேசியில் பேசிக்கொண்டாலும் சரி, நேரில் சந்தித்துக்கொண்டாலும் சரி, அது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகவே இருக்கும்.
இவரது முழுப்பெயர், ஜோஹ்ரான் குவாமி மம்தானி. இவருடைய அப்பா பெயர் மாமூத் மம்தானி. ஆப்பிரிக்காவிலுள்ள கானா நாட்டில் புரட்சியை நடத்தியவர் குவாமி நிக்ரூமா. அவர், மிகப்பெரிய ஆப்பிரிக்கத் தலைவர். அந்த நாட்டின் முதல் பிரதமரும் அவர்தான். அவரது பெயரில் இருக்கும் குவாமியைத்தான், ஜோஹ்ரான் மம்தானி பெயரில் சேர்த்து வைத்திருக்கிறார் அவருடைய தந்தை. தற்போது 34 வயதாகும் மம்தானி, ஓர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தாயார் மீரா நாயர் ஒரு திரைப்பட இயக்குநர். `சலாம் பாம்பே’ திரைப்படம் அவர் இயக்கியதுதான். `மிசிசிபி மசாலா' உட்பட வேறு சில படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார்.
நியூயார்க் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் உறுப்பினராக மம்தானி இருந்தார். அதிலிருந்துதான், இப்போது அவர் மேயராகத் தேர்வாகியிருக்கிறார். இந்த முறை நியூயார்க் மேயர் தேர்தலில் 39 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். அதில், 50.4 சதவிகித வாக்குகள் மம்தானிக்குக் கிடைத்தன. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான மம்தானி, ‘சோசலிச ஜனநாயகம்’ என்ற அவருடைய கருத்தியல் அடிப்படையில் தான் வாக்குக் கோரினார்.
குடியரசுக் கட்சி வேட்பாளராக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமா ஆகியோரும் போட்டியிட்டனர். குடியரசுக்கட்சி வேட்பாளருக்கு வெறும் ஏழு சதவிகித வாக்குகளே கிடைத்தன. அந்தளவுக்கு நியூயார்க்கில் குடியரசுக் கட்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது. நியூயார்க் நகரை எடுத்துக்கொண்டால், அது ஒரு மிகப்பெரிய நகரம். அங்கு, 85 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ராங்ஸ், மன்ஹாட்டன், குயின்ஸ், ப்ரூக்லின், ஸ்டேட்டன் ஐலாண்டு என ஐந்து தொகுதிகளை நியூயார்க் நகரம் கொண்டிருக்கிறது. குயின்ஸ் என்ற இடத்திலிருந்துதான் மம்தானி போட்டியிட்டார்.
அதுதான் டொனால்டு ட்ரம்ப் பிறந்த இடம். அமெரிக்காவில் பல அதிபர்களைக் கொடுத்தது நியூயார்க் மாகாணம்தான். நியூயார்க், வெர்ஜீனியா, கலிஃபோர்னியா ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. மூன்றிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர்.
அந்த விதத்தில், ஓர் இளைஞரான மம்தானி பெற்றிருக்கும் வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்று. நியூயார்க் நகர மக்களின் வாழ்வாதாரம், வாழ்வாதாரத்தை ஒட்டிய பிரச்னைகள் ஆகியவற்றை மம்தானி முன்வைத்தார். அவர் ஓர் இஸ்லாமியர். ஷியா பிரிவு இஸ்லாமியர். தொலைக்காட்சி விவாதங்களில் இஸ்ரேல், காஸா பற்றிய கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அவர் மிகத் தெளிவாகப் பதில் சொன்னார்.
இஸ்ரேல் தொடுத்தது ஒரு மனிதாபிமானமற்ற போர் என்று கூறிய மம்தானி, அந்தப் போரினால் காஸாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்படப் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்... அது ஓர் இனப்படுகொலை... அது ஒரு பேரழிவு என்று பதிலளித்தார்.
உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் வசிக்கக்கூடிய நகரம் நியூயார்க். அதனால், வீட்டுப் பிரச்னை அங்கு அதிகம். வாடகையும் பெரும் பிரச்னை. அதனால், வீட்டு வாடகையை உயர்த்த முடியாத ஒரு சூழலைக் கொண்டுவருவேன் என்று அவர் உறுதி அளித்தார். பேருந்தில் கட்டணமில்லா பயணம் என்பதையும் அவர் வாக்குறுதியாகத் தந்தார். மளிகைப் பொருட்களின் விலைகள் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கின்றன. அதனால், city owned grocery stores என்ற பெயரில் அரசே நடத்தும் மளிகைக்கடைகள் திறக்கப்படும்... அங்கு, குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த நேரத்தில் லண்டன் பற்றியும், லண்டன் மேயராக மூன்று முறை தேர்வான சாதிக் கான் பற்றியும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். உலக அளவில் நியூயார்க் போலவே, இங்கிலாந்தில் லண்டன் ஒரு பெரிய நகரம். 2016-ம் ஆண்டு லண்டன் மேயராக சாதிக் கான் தேர்வுசெய்யப்பட்டார். இவர், பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்தில் குடியேறிய ஓர் இஸ்லாமியர். தொடர்ந்து மூன்று முறை மேயராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். அவர், தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்.
நியூயார்க், லண்டன் ஆகிய இரு நகரங்களும் பன்முகத்தன்மை கொண்ட நகரங்கள். பல மொழிகள் பேசக்கூடிய, பல மதங்களைச் சேர்ந்த, பல இனங்களைச் சேர்ந்த மக்கள் அங்கு வாழ்கிறார்கள். இந்த முறை அங்கு வாக்களிக்கும் முறை அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, இந்த மதத்தினர் மட்டுமே ஆட்சியாளராக வர முடியும், இந்த இனத்தவர் மட்டுமே ஆட்சியாளராக வர முடியும் என்ற நிலை பல நாடுகளில், பல நகரங்களில் இருக்கும் சூழலில், நியூயார்க் மேயர் தேர்வும், லண்டன் மேயர் தேர்வும், பன்முகத்தன்மைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு அமெரிக்காவில் பன்முகத்தன்மைக்கு பெரும் சவால் எழுந்திருக்கக்கூடிய சூழலில், மம்தானியின் வெற்றி முக்கியமானது. அது ஒரு மிகப்பெரிய செய்தியை உலக மக்களுக்குத் தெரிவித்திருக்கிறது. பெரும் செல்வந்தர்களுக்கு எதிராகவும், ஏழைகளுக்கு ஆதரவாகவும் நிற்கும் மம்தானி மேயராகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது, ஏழைகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கப்படுகிறது. காஸாவில் நடப்பது இனப்படுகொலை தான் என்பதை ஆணித்தரமாகச் சொல்லக்கூடிய தேர்தலாகவும் நியூயார்க் மேயர் தேர்தல் அமைந்தது.
நியூயார்க் கவர்னராக இருந்த ஆண்ட்ரூ குவோமாவையே தோற்கடித்திருக்கிறார் என்றால், அது சாதாரண வெற்றி அல்ல. அதனால், அது ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. மம்தானி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட மனிதர்கள் மத்தியிலும் இருந்தார். உதாரணமாக, எல்.ஜி.பி.டி.கியூ மக்களிடம் இருந்தார். தொழிலாளர்களுடன் இருந்தார். பேருந்து ஓட்டுநர்களுடன் இருந்தார். அவர்களுடன் உரையாடினார். பெரும்பான்மையான மக்கள் பயணிக்கும் ரயிலில் சர்வசாதாரணமாகப் பயணித்தார். ஆகையால், அவரை தங்களில் ஒருவராக மக்கள் பார்த்தனர்.
மம்தானிக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பலரும் ஆய்வுசெய்துகொண்டிருந்தனர். மம்தானியின் தந்தையான மாமூத் மம்தானியின் குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பே உத்தரப்பிரதேசத்திலிருந்து ஆப்பிரிக்காவுக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறார்கள். தான்சானியா, உகாண்டா போன்ற நாடுகளில் வணிகம் செய்கிறார்கள். மம்தானியின் தந்தை தான்சானியாவில்தான் பிறந்தார். மம்தானியின் தாயார் மீரா நாயர் இந்தியாவில் பிறந்தவர். அவருடைய தாத்தா புவனேஸ்வரில் அரசு அதிகாரியாக இருந்தார். கேரளாவைச் சேர்ந்த நாயர் சமூகத்துக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. டெல்லியில் புகழ்பெற்ற மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் சமூகவியல் படித்தார். பிறகு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு ஆகிய இரண்டு இடங்களிலும் படிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை அவர் தேர்வுசெய்தார்.
அங்கு ஒரு பேராசிரியரைத் திருமணம் செய்தார். திரைப்படம் எடுப்பது தொடர்பாக ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோதுதான், மம்தானியைச் சந்தித்தார். அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஜோஹ்ரான் மம்தானி. அவர்களுக்கு இவர் ஒரே மகன். ஏழு வயதாக இருந்தபோதே அவர் அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். நியூயார்க்கில் படித்தார். தன் மகனைத் திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் மீரா நாயர். அவருக்கு இசை மீது மிகுந்த ஆர்வம். அப்படியே அவருக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்பட்டது.
இப்போது, உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கின் மேயராகிவிட்டார். அதற்கான வெற்றி விழாவில், இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய புகழ்பெற்ற உரையை மேற்கோள் காட்டி மம்தானி உரை நிகழ்த்தினார். அதன் பிறகு, 2004-ல் 'தூம்' என்ற பாலிவுட் திரைப்படத்தின் பாடல் அரங்கில் ஒலித்தது
அதிபர் ட்ரம்ப் குறித்து, தனது வெற்றிக்குப் பிறகு ஆற்றில் உரையில் மம்தானி குறிப்பிட்டார். "அதிபர் ட்ரம்ப் அவர்களே... நான் சொல்வதைக் கேளுங்கள். நியூயார்க் நகரம் குடிபெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்ட, குடிபெயர்ந்தவர்களால் இயக்கப்படும், குடிபெயர்ந்தவர்களின் நகரமாகவே இருக்கும். எங்களில் யாரையேனும் தொட வேண்டுமென்றால், எங்கள் அனைவரையும் தாண்டித்தான் செல்ல வேண்டும்" என்றார்.
மம்தானி தவிர்க்க முடியாதவர், எதிர்க்க முடியாதவர் என்று ட்ரம்ப் உணர்ந்தாரோ என்னவோ, மம்தானியுடன் பேசுவதற்கு முன்வந்திருக்கிறார். அதற்கான சமிஞ்கையை ட்ரம்ப் கொடுத்தவுடன், வெள்ளை மாளிகையைத் தொடர்புகொண்டிருக்கிறார் மம்தானி. நல்லதே நடக்கட்டும்.


