உலகக்கோப்பையில் வரலாற்றுச் சாதனை: பிரான்ஸ் கால்பந்து வரலாற்றின் அரியணையில் தனியொருவராக அமர்ந்தார் கைலியன் எம்பாப்பே!
எம்பாப்பே தனது தனிப்பட்ட சாதனையை நிலைநாட்டியதோடு மட்டுமன்றி, பிரான்ஸ் அணியை உலகக்கோப்பைப் போட்டியில் மிக வலுவானதொரு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்
2026 உலகக்கோப்பையின் தனது முதல் ஆட்டத்திலேயே செனகல் அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பிரெஞ்சு அணியின் தலைவர் கிலியன் எம்பாப்பே இரட்டை கோல்களை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதோடு, பிரான்ஸ் கால்பந்து வரலாற்றின் பல முக்கியச் சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியில் அடித்த கோல்களின் மூலம் கிலியன் எம்பாப்பே தனது சர்வதேச கோல்களின் எண்ணிக்கையை 58 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம், பிரான்ஸ் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த ஒலிவியே ஜிரூவின் (57 கோல்கள்) நீண்டகால சாதனையை முறியடித்து, பிரான்ஸ் வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த தனியொரு வீரர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.
முன்னாள் வீரர் ஜிரூ இந்த இலக்கை எட்ட 137 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில், எம்பாப்பே வெறும் 99 போட்டிகளிலேயே இந்த மைல்கல்லை எட்டி பிரெஞ்சு கால்பந்தின் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாகத் தியரி ஹென்றி 51 கோல்களுடனும், அந்துவான் கிரீஸ்மேன் 44 கோல்களுடனும், மிஷெல் பிளாட்டினி 41 கோல்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உலகக்கோப்பைத் தொடர்களைப் பொறுத்தமட்டில், எம்பாப்பேயின் ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 1958-ஆம் ஆண்டு ஒரே உலகக்கோப்பைத் தொடரில் 13 கோல்களை அடித்து, நீண்டகாலமாக முறியடிக்கப்படாமல் இருந்த பிரெஞ்சு லெஜண்ட் ஜஸ்ட் ஃபொன்டைனின் சாதனையை எம்பாப்பே தனது மூன்றாவது உலகக்கோப்பைத் தொடரிலேயே முறியடித்துள்ளார்.
பிரான்சை பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டிகளில் தெரி ஹென்றி 6 கோல்களையும், ஜினேடின் ஜிடேன், மிஷெல் பிளாட்டினி மற்றும் ஒலிவியே ஜிரூ ஆகியோர் தலா 5 கோல்களை மட்டுமே அடித்துள்ளனர் என்பது எம்பாப்பேயின் அதீத ஆட்டத் திறனுக்குச் சான்றாகும். சர்வதேச உலகக்கோப்பை வரலாற்றை உற்றுநோக்கினால், ஜெர்மனியின் புகழ்பெற்ற வீரர் ஜெர்ட் முல்லருடன் (14 கோல்கள்) எம்பாப்பே தற்போது சமநிலையைப் பெற்றுள்ளார்.
இனி இவருக்கு முன்னிலையில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி (16 கோல்கள்), ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசே (16 கோல்கள்) மற்றும் பிரேசிலின் ரொனால்டோ (15 கோல்கள்) ஆகிய மூன்று உலகளாவிய ஜாம்பவான்கள் மட்டுமே உள்ளனர். கால்பந்து உலகின் பேரரசர் என்று வர்ணிக்கப்படும் பிரேசிலின் பீலே (12 கோல்கள்) இந்த வரிசையில் எம்பாப்பேயிற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடக்க ஆட்டத்தின் மூலம், எம்பாப்பே தனது தனிப்பட்ட சாதனையை நிலைநாட்டியதோடு மட்டுமன்றி, பிரான்ஸ் அணியை உலகக்கோப்பைப் போட்டியில் மிக வலுவானதொரு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
- சிவா சின்னப்பொடி


