"சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்ற கிளித்தட்டுப் போட்டிகள்"
,
"சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்ற கிளித்தட்டுப் போட்டிகள்"
"அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டித் தொடரில் கிளித்தட்டுப் போட்டிகள் இடம்பெற வேண்டுமென்ற யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தினரது கோரிக்கைக்கு அமைவாக இடம்பெறும் இந்தப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள செயலக ஊழியர்கள் அனைவரும் போட்டிக்குகந்த நுட்பங்களை உணர்ந்து, முயற்சி, பயிற்சி மற்றும் மதிநுட்பத்துடன் வியூகமமைத்து கிராமியப் பாரம்பரியங்களை சமகாலத்திலும் பாதுகாத்து வருகின்றமை மெச்சுதற்குரியது"
என அரச அதிபர் புகழாரம்.
சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டுக்கழக கிளித்தட்டுத் திடலில் கடந்த சனிக்கிழமை [13] சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற அரச அதிபர் வெற்றிக் கிண்ண கிளித்தட்டுப் போட்டிகளில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கும் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத் தலைவர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் தாச்சிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக வீராங்கனைகள் முதலாமிடத்தையும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக வீராங்கனைகள் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


